கதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும் ‘படைப்பாளன்’

கதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும் ‘படைப்பாளன்’

உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவதுதான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை.

இப்படியான அறிவுத் திருட்டு, ‘கதைத் திருட்டு’ என்ற பெயரில் தமிழ் சினிமாவில் நிறையவே நடந்து வருகிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் இந்த ‘படைப்பாளன்’ திரைப்படம். 

L.S.தியான் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் S.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் L.S.பிரபு ராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குநர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், ‘காக்கா முட்டை’ ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்முருகன், இசை – கிருபாகரன், பாடல்கள் – கு.கார்த்திக், கலை இயக்கம் – ஸ்ரீமன் பாலாஜி, படத் தொகுப்பு – எஸ்.பி.அகமது, மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  L.S.பிரபுராஜா. இவர் இயக்குநர் தருண் கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

‘படைப்பாளன்’ படம் பற்றி நாயகனும், இயக்குநருமான L.S.பிரபுராஜா பேசும்போது, “முழுக்க, முழுக்க சினிமாவில் இயக்குநராக துடிக்கும் ஒரு உதவி இயக்குநரின் கதைதான் இத்திரைப்படம்

முன்பெல்லாம் படத் தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். கதை கேட்பது கிடையாது. ‘பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள்.. படித்து விட்டு சொல்கிறோம்’ என்று கேட்டு கதையை வாங்கி கிடப்பில் போட்டுவிட்டு அவர்களை அழைக்கழிக்கிறார்கள்.

பிறகு சில நாட்களில் பிரபலமான இயக்குநர்களை வைத்து அதே கதையைப் படமாக்கி வெளியிடுகிறார்கள். அந்த உதவி இயக்குநரின் உழைப்பு, வலிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை.

அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதையும், அவன் சொன்ன கதையைப் பற்றியதும்தான் இந்த ‘படைப்பாளன்’ திரைப்படம்.

‘கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராகப் படைத்து விடுவார்’ என்று சொல்வார்கள். உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பதுவரை பெரும் சங்கடம்தான். உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது.

மக்களிடையே சினிமா இயக்குநர் என்றால் ஒருவிதமான மோசமான கேரக்டராகவே கருதுகிறார்கள். ஆனால், மக்களை தங்கள்  படங்களின் மூலம் மகிழ்விப்பவன் அதே படைப்பாளன்தான். அப்படியான வலி மிகுந்த ஒரு உதவி இயக்குநரின்  வலிகளையும் வழிகளையும்  இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டவுள்ளது…” என்கிறார் நாயகனும் இயக்குநருமான L.S.பிரபுராஜா.




error: Content is protected !!