full screen background image

ஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்

ஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்

Bioscope Film Framers என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.பார்த்திபன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் அவர் மட்டுமே நடித்துள்ளார் என்பது ஆச்சரியம் கலந்த புதுமையான விஷயமாகும். மேலும் படத்தில் சில கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களின் குரல் மட்டுமே படத்தில் ஒலிக்கும்வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு – ராம்ஜி, பின்னணி இசை – சி.சத்யா, இசை – சந்தோஷ் நாராயணன், ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, அம்ரித் ப்ரீத்தம், கலை இயக்கம் – ஏ.அமரன், படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், பாடல்கள் – விவேக், பாடகர்கள் – சித் ராம், சங்கீதா கருப்பையா, இராதாகிருஷ்ணன் பார்த்திபன், நிழற்படம் – விஷ்ணு, இணை இயக்கம் – பி.கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா-டி.ஒன்., விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் DKD, DI – IGENE, VFX – White Lotus, தயாரிப்பாளர் – இராதாகிருஷ்ணன் பார்த்திபன், எழுத்து, இயக்கம் – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

‘ராதாகிருஷ்ணன் பார்த்திபன்’ என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்’ மூலம் தன்னைத்தானே சினிமாவுக்கான எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றிருக்கிறது.

நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்ச நிலை தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்தபோதிலும், தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் நடிகர் பார்த்திபன்.

பல்துறை வித்தகரான அவர் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். படம் முழுவதும் ஒரேயொரு கதாபாத்திரமாக அவர் மட்டுமே நடித்திருப்பதால், தவறாமல் பார்த்துவிட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்க மிகவும் தகுதியான படமாகவும் மாறியிருக்கிறது.

‘கடைக்குட்டி சிங்கம்’ போன்று எண்ணிக்கூட பார்க்க முடியாத நடிகர், நடிகைகளை பார்த்து, பார்த்து பழகியிருக்கும் நமது சினிமா ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்து அதனை அவர்கள் விரும்பும்வகையில் கொடுக்கும் திறமை பார்த்திபன் போன்ற திறமைசாலிகளுக்கே உண்டு.

ஒரு போலீஸ் ஸ்டேஷன்.. ஒரு டேபிள்.. ஒரு சேர்.. சுற்றிலும் மூன்று பேர். அவர்களது முகம் தெரியாது. பேச்சு மட்டுமே.. எதிரில் சிங்கிள் மேனாக பார்த்திபன் 105 நிமிடங்கள் முழுவதும் நமக்கு தனது நடிப்புத் திறனைக் காட்டியிருக்கிறார்.

‘மாசிலாமணி’ என்னும் பார்த்திபனை ஒரு கொலை வழக்கில் போலீஸ் கைது செய்திருக்கிறது. இவரை விசாரிக்க இன்ஸ்பெக்டர், ஏட்டு, கூடவே போலீஸ் துணை கமிஷனரும் இருக்கிறார். இவர்கள் விசாரிக்க.. விசாரிக்க.. மாசிலாமணி தன்னுடைய சொந்தக் கதையை சோகம் கலந்து சஸ்பென்ஸ், திரில்லருடன் சொல்லி முடிக்கிறார்.

அது முழுவதையும் நம்மையும் கேட்க வைத்து.. அடுத்தது என்ன..? ஏன்..? எதற்காக இந்தக் கொலைகள்..? என்று அதற்கான காரணத்தையும் கேட்டுத் தொலைக்க நம்மையும் ஏங்க வைப்பதுபோல திரைக்கதை அமைத்து அதையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

பார்த்திபனின் பேச்சில் இருக்கும் கிண்டல், நக்கல், ஏக்கம், பரிதாபம், கோபம்.. பச்சாபதம்.. வன்மம்.. அத்தனையும் நமக்கு பல கதைகளை பல இடங்களில் எடுத்துக் கொடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் கதையின் டிவிஸ்ட்டாக அவரை திசை திருப்பும்போதெல்லாம் அதற்குத் தோதாக லாஜில் எல்லை மீறலே இல்லாதவகையில் யோசித்து, யோசித்து திரைக்கதையை எழுதியிருக்கிறார் பார்த்திபன். அந்த வகையில் திரைக்கதை ஆசிரியரான பார்த்திபன்தான் இந்தப் படத்தில் முதல் மதிப்பெண் பெறுகிறார்.

அவரே இயக்குநராகவும் இருப்பதால் தன்னுடைய நடிப்பை தானே திருத்தி எப்படி மேற்கொண்டு திருப்தியடைந்து காட்சிகளை படமாக்கினார் என்பதே தெரியவில்லை. இந்த விஷயத்தில் பார்த்திபனுக்கு பெரிதும் உதவியிருக்கும் இணை இயக்கநர் கிருஷ்ணமூர்த்திக்கு நமது பாராட்டுக்கள்.

ஒவ்வொரு பேச்சுக்கும் இடையில் வெளியில் இருக்கும் தனது மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மகனைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று பல்வேறுவிதமான மாடுலேஷனில் அவர் பேசும் பேச்சுக்கள், மனதை நெகிழ வைக்கிறது.

முதல் கொலையை ஏன் செய்தேன் என்பதை அவர் சொல்லும்விதம்.. இரண்டாவது கொலையான மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் நடந்தது என்ன என்பதை அவர் ஆரம்பிக்கும் இடம்.. மூன்றாவது கொலை பற்றிய செய்திக்கு அவர் ஹிண்ட் கொடுக்கும் காட்சி.. தன்னுடைய மனைவி உஷாவைப் பற்றி அவர் பேசும் நெகிழ்ச்சியான பேச்சுக்கள்.. வசனங்கள் என்று அத்தனையிலும் பார்த்திபன் என்னும் மேதாவியின் கற்றுக் கொண்ட வித்தைகள் அத்தனையும் தெரிகிறது.

ஆட்டோக்காரனின் மாமா வேஷம்.. பையனுக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் நயவஞ்சகத்தனம்.. பைனான்ஸ்காரன் செய்திருக்கும் கொடூரம். எல்லாவற்றுக்கும் மேலாக மனைவி செய்யும் துரோகம்.. என்று அத்தனை கதைகளையும் தனது வார்த்தைகளாலும், நடிப்பாலும் விளக்கும்போது இதையெல்லாம் காட்சிகளாக வைத்து நடிகர்களை வைத்து சொல்லியிருந்தால்கூட இந்த அளவுக்கு நம் மனதைத் தொட்டிருக்காது என்றே சொல்லத் தோன்றுகிறது.

நடிப்பு மற்றும் இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது படத்தின் கலை இயக்கமும், ஒளிப்பதிவும். ஒரு சின்னஞ்சிறிய போலீஸ் ஸ்டேஷன் அறை எப்படியிருக்கும் என்பதை நாம் கற்பனைகூட பண்ணியிருக்க முடியாத அளவுக்கு அது பற்றிய பிரக்ஞையே நமக்குத் தோன்றாத வண்ணம் அந்த அறையை வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர்.

இடையிடையே கதையை நகர்த்தும்போக்கில் உதவுவதற்காக பூனை உலா வரும் இடமாகவும், குருவி கத்தும் இடமாகவும், சுற்றிலும் மரம், செடிகள் இருப்பது போலவும் பார்த்திபனின் வாயிலாக சொல்வதற்கு ஏதுவாக அதையெல்லாம் புகுத்தியிருக்கிறார் கலை இயக்குநர். இயக்குநரின் திறமையை வெளிப்படுத்த உதவிய இவருக்கு நமது பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் திறமையான ஒளிப்பதிவினால் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் வித்தியாசம், வித்தியாசமாக இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கேமிராவின் கோணம் மாறிக் கொண்டேயிருக்க.. போரடிக்காமல் இருப்பதற்காக ஒளிப்பதிவாளர் செய்திருக்கும் இந்த கேமிரா மாற்றல் திறன்.. தக்க பலனைத் தந்திருக்கிறது.

ரொம்பவும் நெருக்கமான காட்சிகளில் மட்டுமே குளோஸப்பை வைத்து.. தனது இறந்து போன மனைவியை நினைத்து பார்த்திபன் நெஞ்சடைக்கும்வகையில் பேசும் காட்சியில், அந்தச் சூழலைக் காட்ட வைத்திருக்கிறது கேமிராவின் முகம். இதற்காக ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு நமது பாராட்டுக்கள்.

“கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் செலவழித்து இந்தப் படத்திற்கான ஒலி வடிவமைப்பை செய்திருக்கிறேன்” என்றார் பார்த்திபன். ஆஸ்கர் அவார்டு வின்னரான ரசூல் பூக்குட்டியின் அழகிய கை வண்ணத்தில், ஒவ்வொரு காட்சியிலும் ஒலி வடிவமைப்பும் ஒரு கதாபாத்திரம்போலவே ஒலிக்கிறது.

அறைக் கதவைத் திறப்பும், சாத்துவதும்.. பூனை குறுக்கே நடப்பதும்.. செல்போனை அணைக்கும் சப்தமும், குருவிகளின் சப்தம்.. பூட்ஸ்களின் சரசரவென்ற ஒலி.. என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான அத்தனை வேலைகளையும் தனது சிறப்பான ஒலி வடிவமைப்பில் செய்திருக்கிறார் ரசூல் பூக்குட்டி. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

இதேபோல் பின்னணி இசைத்திருக்கும் சி.சத்யாவின் இசையும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலமாக இருக்கிறது. வசனங்களின் சப்தத்தை குறைக்காமல் அதற்கும் கீழேயே தனது ஒலியை சுருக்கிக் கொண்டு கச்சிதமாக அமைந்திருக்கிறது பின்னணி இசை.

நல்ல போலீஸ்காரர், கெட்ட போலீஸ்காரர் என்பதை முகத்தையே காட்டாமல் குரலை வைத்தே அடையாளம் காட்டுகிறார் பார்த்திபன். இறுதியில் இந்தக் கதை முடியும் தருணத்தில் இருக்கும் டிவிஸ்ட்டும்.. துணை கமிஷனர் கொடுக்கும் 2000 ரூபாய் நோட்டில் காந்தி சிரிக்கும் புன்னகையும்.. இதற்கு பார்த்திபன் சொல்லும் விளக்கமும் படத்தை மிக அழுத்தமாய் நிறைவு செய்திருக்கிறது.

எப்படியிருந்தாலும் தான் செய்த கொலைகளுக்காக அவர் எந்தவிதமான தண்டனையும் பெறாமல் தப்பிக்க நினைத்து அதைச் செயல்படுத்தி வெளியேறுவதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாக தெரிகிறது. அவருடைய கோபத்திற்கான காரணம் உண்மையாக இருந்தாலும் கொலை, கொலைதானே.. அதற்கு அவர்தானே பொறுப்பேற்க வேண்டும்…?

இது போன்ற திரைப்படங்கள் அவனுடைய கேரக்டர் ஸ்கெட்ச் அப்படித்தான் சொல்லி முடிக்கப்படும். அது போன்றுதான் இந்த ‘மாசிலாமணி’யின் கேரக்டர் ஸ்கெட்ச்சையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஒரு ‘தப்பித்தல்’ என்கிற முயற்சியில் இருந்தே அவர் மீதான பரிதாபம் மறைந்து ‘குற்றவாளி’ என்கிற பிம்பமே நமக்குள் உரைக்கிறது.

சில சமயங்களில் உலகத் திரைப்பட விழாக்களுக்காகவே சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவைகள் தியேட்டர்களிலும் வசூலை குறைவில்லாமல் அள்ளும். அந்த வகையில் இத்திரைப்படமும் தியேட்டர்களில் வசூலைக் குவிக்க வேண்டும் என்பதே நமது ஆசை.

இத்தனையாண்டு கால தமிழ்ச் சினிமாவில் இப்படியொரு திரைப்படத்தைக் கொடுக்க முன் வந்திருக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு நமது பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்..!

சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி.. தமிழ்த் திரைப்பட துறையைச் சேர்ந்த அத்தனை பேரும் பார்க்க வேண்டிய படம் இது..!

Our Score