‘ஒரு அடார் லவ்’ தமிழ் மொழியிலும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது..!

‘ஒரு அடார் லவ்’ தமிழ் மொழியிலும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது..!

மலையாளத் திரையுலகம் மட்டுமன்றி தென்னகத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘ஒரு அடார் லவ்’ மலையாளப் படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

மலையாள இயக்குநர்  ஓமர் லுலு பள்ளிப் பருவக் காதலை முன் வைத்து  ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் என்னும் இளம்பெண் அறிமுக ஹீரோயினாக நடித்துள்ளார். நூருன் ஷெரீப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், அனீஸ் மேனன், ரோஷன் அப்துல் ரஹூப், யாமி சோனா, மைக்கேல் ஆன் டேனியல், பிரதீப் கோட்டயம், சியாத் ஷாஜகான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, இயக்கம் – ஓமர் லூலு, திரைக்கதை, வசனம் – சாரங் ஜெயப்பிரகாஷ், லிஜோ பனந்தன், இசை – ஷான் ரஹ்மான், ஒளிப்பதிவு – சினு சித்தார்த், படத் தொகுப்பு – அச்சு விஜயன், கலை இயக்கம் – ஜோஸப் நெல்லிக்கால்.

சென்ற ஆண்டு இந்தப் படத்தில் இடம் பெற்ற ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும்,  படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

பாடலின் இசையைவிடவும், அந்த பாடல் காட்சியில் இடம் பெற்ற ஹீரோயின் பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக பாடல் காட்சியில் அவர் காட்டிய ரியாக்ஷன்கள் மட்டும்  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்டஸாக மாறியது.

’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக் குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர்.

தமிழில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த ’ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பை வெளியிடுகிறார்.

இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.