புதிய சினிமா டெக்னீஷியன் சங்கத்தை துவக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்..!

புதிய சினிமா டெக்னீஷியன் சங்கத்தை துவக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியேஷயனும் இணைந்து டெக்னீசியன் யூனியன் ஒன்றை புதிதாகத் துவங்கியுள்ளன.

இந்த புதிய டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகிய பல தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.

பெப்சி யூனியன் அமைப்பில் சினி டெக்னீஷியன் யூனியனும் அடக்கம். அந்த யூனியனைச் சேர்ந்தவர்கள் சென்ற ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த ‘பில்லா பாண்டி’ படத்தின் ஷூட்டிங்கின்போது பேட்டா கொடுக்கவில்லை என்கிற காரணத்துக்காக படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

இதையடுத்து உடனடியாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை இறுதி செய்யாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினையும் வெடிக்க.. “நாங்கள் பெப்சி தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் எங்களுக்கு வசதிப்படும் யாருடன் வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்துவோம்…” என்று அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம்.

இதை எதிர்த்து பெப்சி அமைப்பு ஸ்டிரைக்கை அறிவிக்க… இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பிரச்சினைக்கு மூல காரணமான சினி டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதியான குரலில் தெரிவிக்கப்பட்டது.

vishal (2)

மற்ற 22 சங்கங்களின் நலனை முன்னிட்டு பெப்சி அமைப்பும், சினி டெக்னீஷியன் யூனியனை பெப்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. தங்களுடைய நீக்கத்தை எதிர்த்தை சினி டெக்னீஷியன் யூனியனை சேர்ந்த தொழிலாளர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திப் பார்த்துவிட்டார்கள். ஆனாலும் பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் மனமிரங்கவில்லை.

இப்போது அந்த சினி டெக்னீஷியன் யூனியனுக்கு மாற்றாக புதிய டெக்னீஷியன் யூனியனை தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியேஷனும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்தச் சங்கத்தில் பழைய டெக்னீஷியன் யூனியனில் பணியாற்றிய பல ஊழியர்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு புதிய சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும், அவுட்டோர் யூனிட் அசோசியேஷனின் தலைவரான முத்துச்சாமியும் வழங்கினார்கள்.

vishal (1)

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் பேசும்போது, “புதியதாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம். தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார்.

ஆக மொத்தம்.. முதலாளிகளை பகைத்துக் கொண்டால் தொழிலாளிகளின் கதி என்ன ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது..!