சந்தீப் கிஷன், விக்ராந்த் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

சந்தீப் கிஷன், விக்ராந்த் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

அன்னை ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வரும் அவருடைய பத்தாவது திரைப்படத்தின் பெயர் வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர்கள்  சந்தீப் கிஷன்,  விக்ராந்த், லட்சுமி, இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் ஜெ. லஷ்மண், தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலில் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயரை இயக்குநர் சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி வெளியிட்டார்.

இந்தப் படத்திற்கு இதற்கு முன்பு ‘அறம் செய்து பழகு’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பெயரைவிடவும் புதிய பெயர் நன்றாக இருப்பதாக பலரும் சொல்லவே புதுப் பெயரை சூட்டிவிட்டதாக இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.

இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள்  என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் என்போம். அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் ‘20 ருபாய் டாக்டர்’  என்று கோவையில் அழைக்கப்பட்ட டாக்டர் பாலசுப்பிரமணியம்.

கோவை ராஜ கணபதி நகரை சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய, குறைய தனது தனது பீஸை உயர்த்தி உயர்த்தி  20 ரூபாய்க்கு கொண்டு வந்தார். கடைசியாக ஒரு வருடத்துக்கு முன் வரை  சிகிச்சை அளிக்க  இவர் வாங்கிய தொகை 20 ரூபாய்தான். இதனால் நாளடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய் டாக்டர் என்று பெயர் வந்துவிட்டது.

கடந்த வருடம் இவர் திடீரென்று காலமானபோது கோவை நகர மக்கள் ‘ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி’ என நகரம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினர். அதோடு அந்த மருத்துவரின் இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அந்த அளவுக்கு மிக சிறந்த மனிதரான அவரின் மகள், மருமகன், பேரன் உள்ளிட்டோர் இன்று நடைபெற்ற ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் கதை,  மருத்துவ துறையுடன் சம்பந்தப்பட்டதாம். அதனால்தான் இயக்குநர் சுசீந்திரன் இவர்களை அழைத்து வந்து கௌரவித்தாராம்.