நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் நாயகனாகவும், ஷிரின் காஞ்வாலா நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் ஆர்ஜே விக்னேஷ் காந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், விவேக் பிரசன்னா, மயில்சாமி, சுட்டி அரவிந்த், ராம் நிஷாந்த், அயாஸ், ‘ஃபன் பண்றோம்’ சித்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – U.K.செந்தில் குமார், இசை – ஷபீர், படத் தொகுப்பு – பென்னி ஆலிவர் – தமிழ் அரசன், சண்டை இயக்கம் – பிரதீப் தினேஷ், ஸ்டில்ஸ் – S.முருகன், கலை இயக்குநர் – S.கமலநாதன், ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன், விளம்பர வடிவமைப்பாளர் – தண்டோரா, உடைகள் –நாகு, ஒப்பனை – கணபதி, ஒலி வடிவமைப்பாளர் – T.உதயகுமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் & டி.ஐ. – Knack ஸ்டுடியோஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, இயக்கம் – கார்த்திக் வேணுகோபாலன், தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம் – சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ்.

ஷிவா என்னும் ரியோ ராஜும், விக்கி என்னும் ஆர்ஜே விக்னேஷும், யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்பவர்கள். பொதுவெளியில் திடீரென பொதுமக்கள் கழுத்தில் கத்தி வைக்கும் பிரான்க் வீடியோ செய்ய நினைத்து, ஜிப்பாக்காரர் எனும் ராதா ரவி கழுத்தில் கத்தி வைக்கின்றனர். அவர் ஏன் வீடியோ செய்றீங்க எனக் கேட்க, பணம் தான் தங்களது குறிக்கோள் என்கின்றனர்.

கோடீஸ்வரரான ஜிப்பாக்காரர், ஷிவாக்கும் விக்கிக்கும் 3 சவால்களைக் கொடுத்து, அதை நிறைவேற்றினால், அவர்களுக்குத் தேவையான பணத்தைத் தருகிறேன் எனச் சொல்கிறார். அதை ஏற்றுக் கொள்கின்றனர் ஷிவாவும் விக்கியும்.

முதல் டாஸ்க், அனைத்து சேனலிலும் பிரேக்கிங் நியூஸில் வரவேண்டும். இரண்டாவது, ஒரு பைத்தியக்காரனை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டும். மூன்றாவது, இரயில்வே ஸ்டேஷனில் நிகழ உள்ள ஒரு கொலையைத் தடுக்கவேண்டும். இந்த மூன்று டாஸ்குகளையும் ஷிவாவும் விக்கியும் செய்து முடித்தனரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ரியோ ராஜ், தொலைக்காட்சியில் இருந்து வந்தவர். படத்தில் அவரை இன்டர்நெட் பையனாக்கி அழகு பார்த்துள்ளார் இயக்குநர். இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனும், ஆர்ஜே விக்னேஷும் யூட்யூப்பில் இருந்து வந்தவர்கள். அதைத் திரையில் பதிக்க, ஹீரோ அறிமுக பாடலை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒரு பைத்தியக்காரனை இடைத்தேர்தலில் நிற்க வைத்து, வெற்றி பெற வைக்க நாசா என்னும் நாஞ்சில் சம்பத்திடம் செல்கின்றனர் ரியோ ராஜும், விக்னேஷ் காந்தும். நாசா முன்னேற்ற கழகத்தின் கொள்கையே, ‘துப்பினா துடைச்சுக்குவேன்’ தான். அதைக் கொண்டு ஓர் அருமையான பாடலும் கலகலப்பாக வருகிறது. நாஞ்சில் சம்பத்தின் மகள் நிஷா எனும் ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லாத வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம்தான். பணமிருந்தால் இந்த நாட்டில் பைத்தியக்காரனுக்கு, அயோக்கியனுக்கும் சீட்டு கிடைக்கும் என்ற அரசியல் யதார்த்தைச் சொன்னதுக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

ஆனால், கோடாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு கொலையைப் பொது மக்களைப் பார்க்க வைத்து, முகத்தையும் மறைக்காமல் மிக மெத்தனமாகக் கத்தியால் ஒருவனைக் குத்தமுடியும் என்ற காட்சிக்குக் கண்டனங்கள். பொதுமக்கள் ஓடிப் போய்த் தடுக்க மாட்டார்கள் என்பது எவ்வளவோ உண்மையோ, அதே அளவு கொலைகாரன் குறைந்தபட்சம் தன் முகத்தைக் கூட மறைக்கமாட்டான் என்ற காட்சியமைப்பு, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் வாய்ப்பேயில்லாத ஒரு கற்பனை. அதுவும் பொதுமக்கள் அத்தனை பேரிடம் மொபைல் கேமிரா இருக்கும் காலத்தில்! ‘என்ன அதிகபட்சம் மொபைலில் படம் பிடிப்பான் அவ்ளோதான?’ எனக் கேட்கிறார் விவேக் பிரசன்னா.

இந்த மூன்று சவால்களில் இருந்துதான் படம் தொடங்குகிறது. அதற்கு முன்பான ஆடல், பாடல், அலைகழிக்கும் காட்சிகள் எல்லாம் இயக்குநரின் அனுபமின்மையைப் பளீச்செனக் காட்டுகிறது. கதாபாத்திரச் சித்தரிப்பிலும் போதுமான டீட்டெயிலிங் இல்லாதது திரைக்கதையின் பலவீனம். ராதா ரவி தன் தேர்ந்த நடிப்பால் சமாளித்திருந்தாலும், அவரது மகனைப் பற்றிய அந்த ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் போதுமான தாக்கத்தைப் பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தவில்லை. அதுவும் இன்னுமொரு சின்ன பசங்கள் விளையாட்டு என்பதுபோல் கடந்துவிடுகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே கதையைத் தொடங்காமல், கதாபாத்திர அறிமுகத்திற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கியதும் சிறுபிள்ளை வெள்ளாமைக்கு ஒப்பான விஷயமே! சிறந்த பத்திரிகையாளர் எனப் பெயர் வாங்கத் துடிக்கும் ராதா ரவியின் மகனைக் கம்பீரமானவராகவோ, சாதுரியமானவராகவோ காட்டாமல், நல்ல குணம் பெற்ற மக்காய்க் காட்டியிருப்பதையாவது தவிர்த்திருக்கலாம். கதை எவ்வளவு முக்கியமோ, அதை விட கதாபாத்திர வடிவமைப்பும் முக்கியம் என்பதை இயக்குநர் இப்பொழுதாவது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. முக்கியமாக, படத்தின் க்ளைமேக்ஸில் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் சொல்ல வந்த விஷயம், அதை மிகையாக இழுத்து நீட்டிச் சொல்லியிருந்தாலும், அவரது அந்தச் சமூக அக்கறையை சரியாகவே திரையில் கடத்தியுள்ளார். அதுவென்ன என்றறிய ஒருமுறை தாராளமாகப் படத்தைப் பார்க்கலாம்.
error: Content is protected !!