“கனா’ போலவே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’வும் வெற்றியடையும்” – இயக்குநரின் நம்பிக்கை..!

“கனா’ போலவே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’வும் வெற்றியடையும்” – இயக்குநரின் நம்பிக்கை..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’.

‘கனா’ படத்தின் அதிரிபுதிரி ஹிட் கொடுத்த தைரியத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

இந்தப் படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படக் குழுவில் உள்ள அத்தனை பேருமே ‘நம்ம வீட்டு பசங்க’ என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இதுதான் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “இந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம். மொத்த குழுவுக்கும் அதே அனுபவம்தான் இருந்தது.

சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா..? படத்தை தயாரிப்பாரா..? என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.

ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச் சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது…” என்றார்.

மேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்டிலைட் சேனல்களில் சாதித்து பிரபலங்களாக இருக்கிறார்கள்.

நாயகன் ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி நாயகி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சிபூர்வமானது. ஏனெனில் இயக்குநர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில்தான் நனவாகி இருக்கிறது…” என்றார்.




error: Content is protected !!