“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..?” – கவிஞர் வைரமுத்து பேச்சு

“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..?” – கவிஞர் வைரமுத்து பேச்சு

சென்ற வாரம் இயக்குநர் கே.செல்வகண்ணணின் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும்,  ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களும்தான் பெருங்காரணம்.

இதையொட்டி ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் ‘நெடுநல்வாடை’ படக் குழுவினர் நடத்தினார்கள்.

nedunalvaadai movie

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து,  இயக்குநர் கே.செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ,  நாயகி அஞ்சலி நாயர்,  ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத் தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின்,  படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட்  மதன், ஜேம்ஸ் உள்பட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ilango

விழாவில் படத்தின் கதாநாயகன் இளங்கோ பேசும்போது,  “இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து சாரை ஒரு காபி ஷாப்பில் பார்த்தேன். அவரோடு போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன். அவர் அனுமதித்தார். அப்போது நான் சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறேன் என்றதும், ‘முயற்சி செய்யுங்கள். வாய்ப்பு கிடைக்கும்’ என்று சொன்னார். அவர் வாழ்த்திய இரண்டே மாதத்தில் நான் ‘நெடுநல்வாடை’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இன்று இது எனக்கு கனவு போல இருக்கிறது. இந்தக் கனவை நிறைவேற்றித் தந்த இயக்குநர் செல்வகண்ணனுக்கு நன்றி…” என்றார்.

selvakannan

படத்தின் இயக்குநர் கே.செல்வகண்ணன் பேசும்போது, “சென்ற வாரம் இதே இடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, ‘மீண்டும் வெற்றி விழாவில் சந்திப்போம்’ என்று கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸில்தான் பேசினேன். ஆனால் இன்று அது சாத்தியமாகி இருக்கிறது என்றால் அது ஊடகங்களாலும், மக்களாலும்தான்.

இது பெரிய படம் இல்லை. சாதாரண படம். ஆனால் அதைப் பெரிய படமாக மாற்றி இருக்கிறார்கள் மக்கள். தமிழ்நாடு மட்டும் அல்லாமல் தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இப்போது இந்த ‘நெடுநல்வாடை’ திரைப்படம் ஒரு பேசு பொருளாக இருக்கிறது.

என்னுடன் பணிபுரிந்த அனைவரும் படத்தின் பூஜை போடும்போது எப்படி ஒன்றாக இருந்தோமோ, அதேபோல் இப்போதும் ஒன்றாக இருக்கிறோம். இந்தப் படத்தை என் மீது நம்பிக்கை வைத்து தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.

படத்தை நல்லபடியாக எடுப்பதைவிட அதைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் பெரிய விசயம். அப்படிச் சரியாக கொண்டு போய் சேர்த்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மதன், ஜேம்ஸ் இருவருக்கும் எனது நன்றி.

அய்யா வைரமுத்து அவர்கள் இல்லாவிட்டால் இந்தப் படத்தின் வெற்றி இல்லை. என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவரோடு ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பதுதான். ஒருநாள் அது சாத்தியமாகியது. ஒரு நாள் அவர் வீட்டில் அவருக்கான அழைப்பிதழை சரி செய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம், ‘உன் எழுத்தில் ஒரு நேர்த்தி இருக்கிறது. நீ சினிமாவில் நிச்சயமாக ஜெயிப்பாய்’ என்று வாழ்த்தினார். என்னை சினிமாவில் முதலில் வாழ்த்தியது கவிஞர்தான்.

இன்று என் முதல் படத்திலே அவரோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கருவாத் தேவா’ பாடல்தான் இந்தப் படத்தைக் காப்பாற்றியது. அந்த வகையில் இந்தப் படத்தை காப்பாற்றியது கவிஞர் வைரமுத்துதான்…” என்றார்

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன்.

இந்தப் படம் சிறந்த படம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறுமா..? என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள்தான்.   

இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும். ஒரு குடும்பத்தில் இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா..? ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா..? கிழவனும், கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு அவ்வளவு பாதுகாப்பு.

இயக்குநர் செல்வகண்ணன் தன் பேச்சில் என்னை உருக்கிவிட்டார். தம்பி செல்வகண்ணன் ‘எனக்கு ஊதியம் தரவில்லை’ என்றார். ‘தம்பி.. நீ எனக்கு இந்தப் படத்தைவிட பெரிய  ஊதியம் தர முடியுமா…? ஒரு இயக்குநர் மேடையிலேயே கவிஞனின் வரிகளுக்கு  கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால், அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது..? இந்தப் படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த ‘நெடுநல்வாடை’ படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

vairamuthu

தம்பி செல்வக்கண்ணனுக்கு நான் தமிழ் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு இல்லை என்ற இப்போதைய நிலையில், 2000 ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை, இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள்.

பல நுட்பமான விசயங்கள் இந்த ‘நெடுநல்வாடை’ படத்தில் இருக்கிறது. கணவன் வீட்டில் இருந்து குழந்தைகளோடு வரும் தாய், கிணற்றை எட்டிப் பார்க்கும்  காட்சியில் என் மனம் ஒரு கணம் துடித்துப் போய்விட்டது.

இந்தப் பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் தூக்கத்தைக் கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும்தான் இப்படியான துயரம் நடக்கிறதா..? 

இதற்கான அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்தத்தான் கலை. அந்தக் கலையால் பண்படாத பைத்தியங்கள்தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள்.

இந்த மன நோய்களைத் தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன..? ‘அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி தோலை உரியுங்கள்’ என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத்தான் இந்த ‘நெடுநல்வாடை’ திரைப்படமும் செய்தது.

இந்தப் படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன். படத்தில் சிறப்பாக நடித்த ‘பூ’ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

வாழைப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்பார்கள். அதுபோல் ‘திரைப்படப் பாடல்கள் பாமரனின் கவிதை’ என்பேன்.  தற்போதெல்லாம் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களின் பங்களிப்பு சற்றே தொய்வடைந்து இருக்கிறது. படத்தின் நீளமும் குறைந்துவிட்டது. 2 மணி நேரம் 10 நிமிடங்கள் உள்ள படத்தில், பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

ஆனால் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இளையராஜாவின் சாயல் இருப்பதாய் ஒரு பத்திரிகை எழுதி இருந்தது. இது உனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு தம்பி. படத்தின் ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் இந்தப் படத்திற்குக் கிடைத்த பொக்கிஷம். படத்தை விநியோகம் செய்த எஸ்கேப்.ஆர்டிஸ்ட் தயாரிப்பாளருக்கு மதனுக்கு நன்றி…” என்று அனைவரின் பெயரையும் வாசித்து பாராட்டினார் வைரமுத்து.




error: Content is protected !!