நட்பே துணை – சினிமா விமர்சனம்

நட்பே துணை – சினிமா விமர்சனம்

அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி.யும், குஷ்பு சுந்தரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தின் நாயகனாக ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ளார். நாயகியாக அறிமுக நடிகையான அனகா நடித்துள்ளார். மேலும் கரு.பழனியப்பன், ஆர்.பாண்டியராஜன், கெளசல்யா, குமாரவேல், ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய்குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இயக்கம் – பார்த்திபன் தேசிங்கு, கதை, திரைக்கதை, வசனம் – ஸ்ரீகாந்த் வஸ்ர்ப், எஸ்.தேவேஸ் ஜெயச்சந்திரன், இசை – ‘ஹிப்ஹாப்’ தமிழா, ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், பாடல்கள் – ‘ஹிப்ஹாப்’ தமிழா, அறிவு, கலை இயக்கம் – குரு ராஜ், படத் தொகுப்பு – பென்னி ஒலிவர், சண்டை இயக்குநர் – பிரதீப் தினேஷ், நடன இயக்கம் – சந்தோஷ், சிவராக் சங்கர், உடைகள் வடிவமைப்பு – ப்ரீத்தி நாராயணன், ஒலி வடிவமைப்பு – ஏ.சதீஷ்குமார், ஹரிஷ் அன்பு, பைனல் மிக்ஸிங் – தபஸ் நாயக், கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங்க், ஒப்பனை – செல்லத்துரை, தயாரிப்பு நிர்வாகிகள் – முத்துக்குமார், மோகன், ஜெயகர் விஸ்வநாதன், இணை தயாரிப்பு – அன்பு ராஜா, என்.மணிவண்ணன், வெளியீடு – ஸ்கிரீன் சீன் நிறுவனம், தயாரிப்பு – சுந்தர்.சி.

அமீர்கான் நடித்த ‘லகான்’ படம் போல், ‘வெண்ணிலா கபடி குழு’ போல்… அதே கதைக் களத்தில் விளையாட்டை மையப்படுத்தி வந்திருக்கும் படம் இது.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை முன்னிறுத்தி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி.க்கு நமது முதல் பாராட்டுக்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்காலில் உள்ள ‘அரங்கநாதன் விளையாட்டு மைதானத்தை’ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக ஹாக்கி வீரர்கள் எப்படி ஹாக்கி போட்டியில் விளையாடி ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

காரைக்காலில் இருக்கும் அரங்கநாதன் விளையாட்டு மைதானத்தை இப்போதும் சுற்றுவட்டார ஹாக்கி வீரர்களும், பிற விளையாட்டு வீரர்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.

காரைக்கால் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது இந்த மைதானம் அப்போதும் இருந்து வந்திருக்கிறது. இந்த இடத்தை தனது மக்களின் நலனுக்காக பிரெஞ்சு அரசிடம் அரங்கநாதன் கேட்டிருக்கிறார். அதற்கு பிரெஞ்சுக்காரர்கள் தங்களது நாட்டு அணியினருடன், உள்ளூர் மக்கள் ஹாக்கி மேட்ச்சில் விளையாடி ஜெயித்தால், இந்த மைதானத்தை பரிசாகத் தருவதாகச் சொல்லியிருக்கின்றனர்.

இதையடுத்து அந்த மைதானத்தைப் பெற வேண்டும் என்கிற வெறியோடு உள்ளூர் வீரர்கள் பிரெஞ்சுக்காரர்களுடன் மோதி அந்த ஹாக்கிப் போட்டியில் ஜெயித்திருக்கிறார்கள். அதன் பின்னரே இந்த மைதானம் மக்களின் பயன்பாட்டிற்காக பிரெஞ்சு அரசால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படியொரு புகழ் பெற்ற இடமாகத் திகழும் அந்த மைதானத்தில் இதற்குக் காரணகர்த்தாவாக இருந்த பெரியவர் அரங்கநாதனுக்கு சிலை வைத்தும் கவுரப்படுத்தியிருக்கிறார்கள் இப்போதைய அரசு. இந்த மைதானத்தில்தான் காரைக்கால் மாவட்ட ஹாக்கி அணியினர் எப்போதும் பயிற்சி எடுப்பது வழக்கம்.

இந்த நேரத்தில் உலகம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்ட ஒரு மருந்து நிறுவனம் காரைக்காலில் காலூன்ற நினைக்கிறது. கடலுக்கு மிக அருகில் அரங்கநாதன் மைதானம் இருப்பதால், அந்த இடத்தில் மருந்து கம்பெனியை நிறுவ எண்ணுகிறது.

இதற்காக லஞ்சம் வாங்குவதையே லட்சியமாகக் கொண்ட மாநில விளையாட்டுத் துறை அமைச்சரான அரிச்சந்திரனை அந்த நிறுவனம் அணுகுகிறது. லஞ்சமாக மொத்த முதலீட்டுத் தொகையில் 20 சதவிகிதத்தை கேட்கும் அமைச்சர், அதற்கான வழிகளில் இறங்குகிறார்.

இந்த நேரத்தில் நாயகன் பிரபாகரன் என்னும் ஆதி, பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல விரும்பி அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இதற்காக பாண்டிச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு வந்தவர் வந்த இடத்தில் நாயகி அனைகாவை பார்த்து ஜொள்ளு விடுகிறார். அனைகாவின் பின்னாலேயே ‘காதல்’ என்று சொல்லி அலைகிறார்.

அனைகா ஹாக்கி பிளேயராக இருக்கிறார். மாநில வீராங்கனைக்களுக்கான தேர்வில் அனைகாவை தேர்வு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதைத் தட்டிக் கேட்கப் போகும் ஆதியும், ஒரு கட்டாயத்தின் பேரில் ஹாக்கி விளையாட வேண்டியதாகிறது.

அப்போதுதான் ஆதி சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இந்தியாவின் சார்பில் விளையாடிய ஒரு வீரர் என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அனைகா மாநில வீராங்கனைகள் பட்டியலில் தேர்வாகிறார். கூடவே ஆதியின் காதலும் ஜெயிக்கிறது.

இதே நேரம் காரைக்காலில் இருக்கும் ஹாக்கி பெடரெஷனின் வீரர்கள் ஒருவர்கூட மாநில அணிக்கு தேர்ச்சி பெறாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அணியில் ஒரு காரைக்கால் வீரர்கூட இல்லை என்பதால் காரைக்கால் வீரர்கள் பயன்படுத்தும் அந்த அரங்கநாதன் மைதானத்தை பரமாரிப்பு லிஸ்ட்டில் சேர்க்கிறது மாநில விளையாட்டுத் துறை.

அந்த மைதானத்தை வாடகைக்குவிட்டு அதில் வரும் பணத்தை வைத்து மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் இருக்கும் மைதானங்களையும், வீரர்களையும் பராமரிக்கப் போவதாக அமைச்சர் அரிச்சந்திரன் சொல்கிறார்.

அந்த மைதான இடத்தில் கால்வாசி இடத்தில் மருத்துவமனை கட்டுவதாகச் சொல்லியும், மீதியிருக்கும் இடத்தை மருந்து கம்பெனிக்குத் தருவதாக ரகசிய ஒப்பந்தமும் போட்டு வைத்துள்ளார் அமைச்சர் அரிச்சந்திரன்.

மைதானத்தை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப் போகிறார்கள் என்பதை அறிந்த ஹாக்கி வீரர்களும், விளையாட்டு வீரர்களும், உள்ளூர் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்குகிறார்கள். ஆனால் காவல்துறையை வைத்து அனைவரையும் அடித்து, உதைத்து அப்புறப்படுத்துகிறது அரசு.

இவர்களை வேறு வழியில் போராடித்தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார் காரைக்கால் ஹாக்கி அணியின் கோச்சான ஹரிஷ் உத்தமன். இந்த நேரத்தில் ஆதியும் இந்த மைதானத்தை மீட்க வேண்டி தானும் அந்தப் போராட்டத்தில் சேர்ந்து கொள்கிறார்.

இதையடுத்து உடனடியாக காரைக்காலில் ஒரு தனியார் ஹாக்கி டீம் கிளப்பை துவக்குகிறார் ஹரிஷ் உத்தமன். இந்தக் கிளப்பில் ஆதி உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு வீரர், தேசிய அளவில் விளையாடிய வீரர்கள், உள்ளூர் வீரர்கள் என்று அனைவரையும் களமிறக்குகிறார் ஹரிஷ் உத்தமன்.

இந்த வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் அவர்களது கிளப் சார்பில் விளையாடி ஜெயித்தால், இவர்கள் தினமும் பயிற்சியெடுக்கும் காரைக்காலில் இருக்கும் அரங்கநாதன் மைதானம் அவர்களுக்கே திரும்பக் கிடைக்கும் என்பது விதி.

இதற்காக ஹாக்கி மேட்ச் விளையாடி மைதானத்தை மீட்க முடிவெடுக்கிறார்கள். இதன்படி நடந்ததா..? போட்டியில் ஜெயித்தார்களா..? மைதானம் மீட்கப்பட்டதா…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

‘மீசைய முறுக்கு’ படத்தில் ஒரு சாதாரண கல்லூரி மாணவனாக நடித்திருந்த ஆதி இதில் ஹாக்கி வீரராக நடித்திருக்கிறார். முதல் பாதியில் காதலுக்காக காதலியின் பின்னால் சுற்றுவதே பொழைப்பாக இருந்து, இரண்டாம் பாதியில்தான் நாடு, நாட்டு மக்கள், ஹாக்கி, விளையாட்டு, சமூகம் என்று சிந்தனையுடன் களமிறங்குகிறார் ஆதி.

விளையாட்டு மற்றும் அதனைச் சார்ந்தே காட்சியமைப்புகள் அதிகம் இருப்பதால் நடிப்புக்கான ஸ்கோப் பெரிதாக இல்லாமல் விளையாட்டு ஆக்சன் காட்சிகள்தான் அதிகம் உள்ளன. இருந்தும் ஆதியிடம் இருக்கும் ஏதோவொரு ஈர்ப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது என்பது மட்டும் உண்மை. இந்தப் படத்திலும் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கிறது. பாராட்டுக்கள்.  

எத்தனையோ நடிக அரசியல்வியாதிகளை பார்த்தாகிவிட்டது. இப்போது புதிய அரசியல்வியாதியாக களமிறங்கியிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன்.

விளையாட்டுத் துறை அமைச்சர் ‘அரிச்சந்திரன்’ என்கிற போர்வையில் தற்போதைய நாட்டு நடப்பை பிட்டுப் பிட்டு வைக்கிறார் கரு.பழனியப்பன். ‘கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’ என்று எடப்பாடியை வம்பிக்கிழுத்து, லஞ்சம் வாங்கிக் குவிக்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து வைத்து அரிதாரம் பூசியிருக்கிறார் பழனியப்பன்.

மீடியாக்களை அவர் கையாளும்விதம் மிக அருமை. இதுபோல் நிறைய முறை நிறைய அரசியல்வியாதிகள் ஆஃப் தி ரெக்கார்டாக பேசுவதாகச் சொல்லி மீடியாக்களைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். அதிலும் பிரேக்கிங் நியூஸுக்காக அலையும் தற்போதைய டிரெண்ட்டையும் பழனியப்பன் குத்திக் காட்டியிருப்பது சிறப்பு.

அவர் சீரியசாக பேசும் ஒவ்வொரு வசனமும், பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது. அதே வேகத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. “முதல்முறையா நான் மந்திரி ஆனப்பவே, எனக்கு 100 கோடி, என் மனைவிக்கு 100 கோடி, என் பிள்ளைக்கு 100 கோடி.. என 300 கோடி சம்பாதித்து ஒதுக்கி விட்டேன். இப்போது சம்பாதிப்பதெல்லாம் மக்களுக்குத்தான்.. உங்களுக்குத்தான்.. ஒவ்வொரு தடவையும் தேர்தலப்போ ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது… அதற்காகத்தான் இப்போ லஞ்சமாக வாங்கி குவிக்க வேண்டியிருக்கு.. ஓட்டுக்கு பணம் வாங்கும் பொதுமக்கள்தான் எங்களை ஒவ்வொரு முறையும் ஊழல்வாதிகளாகவே வைத்திருக்கின்றனர்…” என்று அவர் சொல்லும் வசனம் சாட்சாத் உண்மைதான்..! 

அரசியல்வியாதிகள் இவ்வளவு தெளிவாக இருக்கும் அதே சமயம் மக்கள் பணத்தை வாங்கிக் கொடுத்து ஓட்டைக் குத்தி ஐந்தாண்டுகள் அவர்கள் கொள்ளையடிக்க பெர்மிஷன் கொடுக்கும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்ல..?

நாயகியாக அறிமுகமாகியுள்ள அனகாவுக்கு சாதாரண ஹீரோயினுக்கு என்ன ஸ்கோப் இருக்குமோ அதுதான் இருக்கிறது. வழக்கமான ஹீரோயினாக.. காதல் இருந்தும் வெளியில் சொல்லாமல் ஏமாற்றும் ஒரு திரைக்கதையில் ஹாக்கியை நுழைத்தவுடன்தான் படத்தில் படப்படப்பே ஏற்படுகிறது. இதற்காக மட்டுமே நாயகி படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஹாக்கி டீம் பயிற்சியாளர் சண்முகமாக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமனுக்கு இந்தப் படத்தில் நல்ல வேடம். வீரர்களைத் தூண்டிவிடும் அதே நேரத்தில் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சொல்லி அறிவுப்பூர்வமாக மோதும் திட்டத்தைச் சொல்லிக் கொடுப்பவராக நடித்திருக்கிறார். அந்த நடிப்புக்கு ஒரு சபாஷ்.

இவருக்கு அடுத்து பாராட்டைப் பெறுபவர் விளையாட்டுத் துறை இயக்குநராக நடித்தவர்தான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அமைச்சரைப் பார்த்து பணிவதும், குழைவதும்.. நண்பனிடம் பேசி சமாளிக்க முடியாமல் தவிப்பதுமாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள் ஸார்..!

மேலும் ஆதியின் அம்மாவாக அக்கா தோற்றத்தில் இருக்கும் கவுசல்யாவும், ஆதியின் தாய் மாமனாக பாண்டியராஜனும் சுமாரான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள். மற்றும் படத்தில் நடித்திருக்கும் மற்றைய நகைச்சுவை நடிகர்களால் எந்தப் பலனும் இல்லை. அனைவருமே சிரிக்க வைக்க முயன்றுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

நாயகன் ஆதி நடிப்பில் விட்டதை இசையில் சரிப்படுத்திவிட்டார். பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கூடுதலாக ரசிகர்கள் ஆடும் அளவுக்கு இசையை அடித்து ஆடியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியிலும் அந்த ஏற்றிவிட்ட பெப்பை குறைத்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதியின் இசை.

பாடல்களில் ‘சிங்கிள் பசங்க’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘கேரளா சாங்’ பாடல் மெலடி ரகம். ‘சிந்து நதிப் பூ’ படத்தில் இடம் பெற்ற ‘ஆத்தாடி என்ன உடம்பு’ பாடலை இந்தப் படத்தில் ரீமேக் செய்து ஜெயிக்க வைத்திருக்கிறார் ஆதி. மேலும் ‘முரட்டு சிங்கிளும்’, ‘வேங்கமவனும்’ தெறிக்க விடுகின்றன. ‘வீதிக்கோர் ஜாதி’ பாடல் சிந்திக்க வைக்கிறது.

பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளை அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். கிளைமாக்ஸ் ஹாக்கி போட்டிகளை படமாக்கியவிதமும், கேரளா சாங் பாடலின் நடனத்தை பதிவாக்கியிருக்கும்விதமும் பாராட்டுக்குரியது.  

படத்தின் சிறப்புக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார்கள் படத் தொகுப்பாளர் பென்னி ஆலிவர், ஒலி வடிவமைப்பாளர் தபாஸ் நாயக் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்கள்.

கிளைமாக்ஸ் ஹாக்கி போட்டியை தொகுத்தளித்தவிதம்தான் இந்தப் பகுதியின் பரபர என்ற ஓட்டத்திற்குக் காரணம். மெல்லிய பதட்டத்தைத் தூண்டும் இசையுடன் இதயத்தின் லப் டப்பை துடிக்க வைக்கும் அளவுக்கு தொடர் கமெண்ட்ரி கொடுத்தவரும் இம்சை செய்துவிட்டார்கள்.

இந்தப் பரபர ஓட்டம்தான் ‘படம் நல்லாயிருக்கு’ என்ற மவுத் டாக் வெளியில் பரவியதற்கும் காரணம். ஆக மொத்தத்தில் இந்தப் படத்தின் ஓட்டத்திற்கு அடிப்படை காரணம் படத் தொகுப்பாளரே என்று உறுதியாகச் சொல்லலாம்.

விளையாட்டு சம்பந்தமான படங்கள் என்றாலே அதற்கென்றே ஒரு தனியாக டெம்ப்ளேட் அமைப்பியல் உண்டு. அதுதான் இந்தப் படத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கூடுதலாக விளையாட்டுடன் நட்பையும் சேர்த்து வைத்து ஜமாபந்தியாக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முற்பாதி முழுக்கவே ஜாலியான ஒரு படமாக.. காதலை நோக்கியே போய்க் கொண்டிருப்பதால் சீரியஸாக தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில்தான் படமே என்று சொல்லும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள். அதிலும் கடைசி அரை மணி நேரம்தான் படமே என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

முற்பாதியில் நிறைய காட்சிகள் சோதனை முறையில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாண்டியராஜன் வீடு சம்பந்தமான காட்சிகளும், அனைகாவை ஒருதலையாய் காதலிக்கும் நபர் செய்யும் லூட்டிகளும்தான்.

கரு.பழனியப்பனின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவையானதாக இருந்தாலும் நேர்மையாக இல்லை. கடைசியில் அவர் எந்த தண்டனையும் பெறாமல் அடுத்த வாய்ப்புக்காக் காத்திருப்பதுபோல காட்சிகளை அமைத்திருப்பது இயக்குநரின் ஏனோதானோ கருத்தாடலாக இருக்கிறது.

ஆதி தான் ஹாக்கி விளையாட்டை துறந்துவிட்டு பிரான்ஸுக்கு போய் செட்டிலாக நினைக்கும் அளவுக்கு வேதனையான அந்த விஷயம் அழுத்தமாகப் பதியப்படவில்லை. நாயகன் அண்ட் கோ-வின் கோபம் நியாயமானது என்பதை சொல்லியிருக்க வேண்டும்.   

ஹாக்கி தேசிய விளையாட்டாகவே இருந்தாலும் இந்தியாவில் ஒரு மதம் போல பரவியிருக்கும் கிரிக்கெட் அளவுக்கு அது இன்னும் பரவவில்லை. அதற்குக் காரணமே ஹாக்கி விளையாட்டிற்கு பெரிதும் தேவையாய் இருக்கும் மைதானம்தான்.

இருக்கின்ற மைதானத்தையெல்லாம் இடித்துவிட்டு கட்டிடங்களை கட்டிவிட்டதால் இப்போது இந்தப் பயிற்சியெடுக்கவே பெரு நகரங்களுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ஹாக்கி வீரர்கள். இந்த விஷயத்தையும் இந்தப் படத்தில் தொட்டுக் காண்பித்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

ஆனாலும், பெரும்பான்மையான மக்கள் இதுவரையிலும் அறிந்திராத ஹாக்கி விளையாட்டு பற்றிய விஷயங்களை மிக விரிவாக காட்டியமைக்காக படக் குழுவினருக்கு நமது பாராட்டுகள்.

அதோடு இத்திரைப்படம் முழுக்க, முழுக்க இளைஞர்களுக்கான படமாகவே இருந்தாலும், மது, சிகரெட், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான காட்சிகள் என்று வழக்கமான கிளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு படத்தைத் தயாரித்தமைக்காக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கிற்கும், தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் நமது பெரும் பாராட்டுக்கள்..!
error: Content is protected !!