full screen background image

நட்பதிகாரம்-79 – சினிமா விமர்சனம்

நட்பதிகாரம்-79 – சினிமா விமர்சனம்

‘கண்ணெதிரே தோன்றினால்’, ‘மஜ்னு’, ‘சந்தித்த வேளை’, ‘உற்சாகம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ரவிச்சந்திரனின் 5-வது படம் இது. 9 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் செய்திருக்கிறார் என்பது கதை தேர்வில் இருந்தே தெரிகிறது.

திருக்குறளில் 79-வது அதிகாரம் ‘நட்பு’. இந்தப் படத்திலும் நட்பைப் பற்றி பெருமையாகச் சொல்ல வந்திருப்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள் போலும்..!

நாயகர்களில் ஒருவரான ஜீவா படித்திருக்கிறார். வேலை தேடிக் கொண்டிருக்கிறார். ஆள் வாட்டசாட்டமாக ஹீரோ போலவே இருப்பதால் இவரைப் பார்த்தவுடன் லவ்வாகிறார் ஹீரோயின் தேஜஸ்வி. இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள்.

இன்னொரு பக்கம் மிகப் பெரிய தொழிலதிபரின் மகனான அரவிந்தும், ரேஷ்மி மேனனும் 7 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். ரேஷ்மி மேன்னின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர். ரேஷ்மியின் அம்மா, ரேஷ்மி பிறந்த உடனேயே இறந்துவிட்டதால் தாயில்லா பிள்ளையை பாசத்துடன் வளர்த்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

இந்த இரண்டு ஜோடிகளுக்கும் இடையில் குணாதிசய வேறுபாடுகள் நிறைய இருப்பினும் எப்படியோ புரிதலே இல்லாமல் காதல் மட்டும் ஒட்டிக் கொண்டுள்ளது. ஒரு டிஸ்கொத்தே கிளப்பில் இரண்டு ஜோடிகளும் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். பின்பு ஒருவருக்கொருவர் பழக துவங்க.. இரு ஜோடிகளுமே ஒன்றாக அவுட்டிங் செல்லும் அளவுக்கும், வீடு தேடி வந்து பேசும், சாப்பிடும் அளவுக்கு பழக்கமாகிறது.

இயக்குநர் திரைக்கதை என்னும் விதியை சுழற்ற இவர்கள் வாழ்க்கையிலும் அது விளையாடுகிறது. தேஜஸ்வியின் தந்தை தனது வருங்கால மருமகனை சந்திக்கக் காத்திருக்கும் ஒரு தருணத்தில், ஜீவா அவள் அழைத்தும் வராமல் வெளியில் நண்பர்களுடன் கூத்தடித்துக் கொண்டிருக்க.. கோபப்படும் தேஜஸ்வி, “உனக்கு நான் முக்கியமா..? நண்பர்கள் முக்கியமா..?” என்று பொங்குகிறாள். “நட்புதான் முக்கியம்…” என்று ஜீவாவும் கோபத்தில் சொல்லிவிட.. காதல் முறிந்துபோய்விட்டது என்று சொல்லிவிட்டு தேஜஸ்வி அழுது கொண்டே செல்கிறாள்.

இன்னொரு பக்கம் அரவிந்த் தனது நண்பர்களுடன் செய்த வாக்குவாதத்தில் தன் காதலியான ரேஷ்மி மீது சந்தேகப்படுகிறான். திடீரென்று இரவு 10 மணிக்கு போன் செய்து “நாளைக்கு காலைல ரிஜிஸ்தரர் ஆபீஸ்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம். நீ பத்து மணிக்கு அங்க நிக்குற…” என்று கட்டளையிட்டுவிட்டு போனை வைக்க.. ரேஷ்மிக்கு பயம் வருகிறது.(இப்படியெல்லாம் நிஜத்தில் செய்ய முடியாது என்பதை எத்தனை முறைதான் சொல்வது..?)

அந்த இரவிலேயே அரவிந்தின் அப்பா லண்டனில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் அரவிந்துக்குக் கிடைக்கிறது. உடனடியாக அரவிந்த் லண்டன் புறப்பட்டுச் செல்கிறான். ஆனால் இதை ரேஷ்மாவிடம் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இங்கே ரேஷ்மியோ மனம் முழுக்க காதல் நிரம்பியிருக்க.. அந்த வயதுக்கேற்ற குணத்துடன் விடிந்ததும் ஒரு லெட்டரை எழுதி அப்பாவின் தலைமாட்டில் வைத்துவிட்டு ரிஜிஸ்தரர் ஆபீஸுக்கு வந்து காத்திருக்கிறாள். காத்திருக்கிறாள். காத்திருக்கிறாள். அரவிந்த் வரவே இல்லை.

இதனால் மனம் நொந்து போனவள்.. தன் வீட்டுக்கு போக பயந்து கொண்டு ஜீவாவின் வீட்டுக்கு வருகிறாள். ஜீவா ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிந்து வைத்திருக்கும் ஜீவாவின் குடும்பத்தினர், ரேஷ்மிதான் ஜீவாவின் காதலி என்று தவறாக நினைக்கிறார்கள்.

மகள் எழுதி வைத்திருந்த லெட்டரை படித்தவுடன் எம்.எஸ்.பாஸ்கருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியறிந்து ஜீவா ரேஷ்மியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே ஜீவாவின் அண்ணனும், அண்ணியும் வந்து ஆறுதல் சொல்கிறார்கள்.

இடையில் அதற்கு முந்தைய நாள்தான் ஜீவாவுக்கு மும்பையில் இருக்கும் கப்பல் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அன்றைக்கு மும்பைக்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் ரேஷ்மிக்கு ‘பை’ சொல்லிவிட்டு செல்கிறான்.

எம்.எஸ்.பாஸ்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் தனது மகளின் காதலை அறிந்தவர், ஜீவாதான் மகளின் காதலரோ என்று நினைத்து ஜீவாவின் குடும்பத்தாருடன் அவசரமாக கோவிலில் நிச்சயத்தார்த்தம் செய்கிறார். இது ரேஷ்மிக்கும் முதலில் தெரியாமல் போகிறது.. கடைசியில் பாஸ்கர் சொல்லி இது தெரிந்தும் ரேஷ்மியால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை. ஏதாவது சொன்னால் அப்பாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போய் தவிக்கிறாள்.

விடுமுறையில் வீடு திரும்பும் ஜீவாவும் இதையறிந்து குழப்பமாகிறான். அரவிந்த் சென்னை திரும்பியதும் இது பற்றி அறிந்து ஜீவா, ரேஷ்மி மீது கோபமாகிறான். தேஜஸ்வியும் ஜீவா மீது கோபமாகி அவனை வெறுக்கிறாள்.

ஆக, இந்த காதல் ஜோடியின் கதையை அவர்களது குடும்பத்தினரே அவசரத்தில் சடுதியில் மாற்றிவிட.. இனிமேல் என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான, மீதமான திரைக்கதை.

1998-ல் தனது ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரவிச்சந்திரன், அந்தப் படத்திலேயே தனது இயக்கத் திறமையை வெளிக்காட்டியிருந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் பார்த்த காதல், பார்க்காமலேயே காதல் என்று டிஸைன், டிஸைனாக காதல் படங்கள் வந்து கொண்டிருந்த நேரம் என்பதால் அவருக்கு அப்போது பலத்த எதிர்பார்ப்பு. எப்படியே 4 படங்களை கொடுத்தவர் இப்போது அந்த அனுபவத்தை வைத்து மறுபடியும் அதே மாதிரியானதொரு காதல் கதையோடு வந்திருக்கிறார்.

ஒரேயொரு வார்த்தை.. ஒரு சில நிமிடங்கள்.. 2 வரி வசனங்கள்.. இதில் ஏதாவது ஒன்றை வைத்திருந்தாலும், முன்பே சொல்லியிருந்தாலும் படத்தை இத்தனை நீளத்திற்கு இழுத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் இந்தப் படத்தின் பலவீனமான திரைக்கதை. தமிழ் சினிமா இயக்குநர்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இடைவேளியையே பயன்படுத்தி கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இயக்கத்தில் ஒரு குறையும் இல்லை. நடிகர்கள் அனைவரையும் மிக அழுத்தமாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் கதை ஒரு காட்சியில்கூட மிஸ்ஸாகவில்லை. வேறு எங்கும் திசை திரும்பவில்லை. காதலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கிடையேதான் சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த அலுப்புகூட நமக்கு வராத அளவுக்கு படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள் ரவி ஸாருக்கு..!

ராஜ் பரத் மிக உயரமாக.. வாட்ட சாட்டமாக இருக்கிறார். அவருடைய உடல் வாகுக்கேற்ற பாடி லாங்குவேஜை காட்டி நடித்திருக்கிறார். அமைதியான, அதிகம் சோகம் கலந்த கேரக்டர்களுக்கு இவர் பொருத்தமாக இருப்பார். அதிகமான குளோஸப் காட்சிகளையே இயக்குநர் வைத்திருப்பதால் நடிப்புக்கு செம டிரில் வாங்கியிருக்கிறார் என்று தெரிகிறது..! இன்னும் வேறு, வேறு கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் வாய்ப்புகள் கிடைத்தால் இவரைப் பற்றி நாம் இன்னமும் நிறைய எழுதலாம்..!

தேஜஸ்வியின் முதல் அறிமுகம் அவருக்கு பெருமைத்தரத்தக்கதுதான். மிக அழகு. பாடல் காட்சிகளில் ரசனையான உடைகளில் ஜொலிக்க வைக்கிறார். நடிப்பிலும் குறையொன்றுமில்லை. அந்த வயதுக்கே உரித்தான துள்ளல், கொண்டாட்டம், கிண்டல். சிடுசிடுப்பு.. கோபம் என்று அனைத்தையும் காட்டியிருக்கிறார்.

இவரைவிடவும் ஒரு படி அதிகமாக ஸ்கோர் செய்திருப்பது ரேஷ்மி மேனன்தான்.  படத்தின் பிற்பாதியில் இவரைச் சுற்றியே கதை ஓடுவதால் தனது அப்பாவிடம் சொல்ல முடியாத தவிப்பும், காதலனின் ஏமாற்றம்.. ஜீவாவின் அருகாமை அனைத்தையும் நயமாக பல காட்சிகளில் தனது கண்களாலேயே நடித்துக் காட்டியிருக்கிறார்.

அலட்சிய மனப்பான்மையில் இருந்தாலும் ஒரு நல்ல காதலனாக நடித்திருக்கிறார் அம்ஜத்கான். ரேஷ்மியின் சிணுங்கலையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமலும், வேவ்லென்த்தே இல்லாமல் இருந்தாலும் காதலில் உறுதியாக இருக்கும்விதமான கேரக்டர் ஸ்கெட்ச் இவருடையது.. இவரை மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அசால்ட்டான அண்ணனான சுப்பு பஞ்சு, அவசரத்தனமான அண்ணியான வினோதினி, அம்மா உமா பத்மநாபன் போன்றோர் நடித்திருந்தாலும் நடிப்புக்கு ஸ்கோப் இருப்பதால் எம்.எஸ்.பாஸ்கர் அசத்தியிருக்கிறார். எப்பவும் 2 வரி வசனமாக இருந்தால்கூட அதற்கு கூடுதலாக கமா, புள்ளி ஸ்டாப் போட்டுத்தான் பேசுவார். இதில் உருக்கத்தைக் கொட்டிக் காண்பித்து உச்சு கொட்ட வைக்கிறார் பாஸ்கர். “மகளின் சந்தோஷத்திற்காக எதையும் செய்வேன்.. இழப்பேன்..” என்கிற அவரது பேச்சும், நடிப்பும் அசத்தல்ண்ணே..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே குருதேவின் ஒளிப்பதிவு அத்தனை அழகு. பாடல் காட்சிகளில் இன்னும் அழகு. இந்தப் படத்தின் போஸ்டர் டிஸைன்கள் கொள்ளை அழகு  என்றால் அதற்குக் காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர்தான். மிக அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கலை இயக்குநரின் பங்களிப்பும், உடை வடிவமைப்பாளரின் திறமையும் அதிகம். இருவருக்கும் நமது பாராட்டுக்கள்..!

இந்தப் படத்தில் 6 பாடல்களையும் தைரியமாக வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். தீபக் நிலம்பூரின் பாடல்களில் ‘சொல்லு சொல்லு செல்லம்மா’ ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டது. பாடல் காட்சிகள் ரசனையுடன் படமாக்கப்பட்டிருப்பதால் பெரிதும் ரசிக்க முடிகிறது.

“ஒரேயொரு நிமிடம்தான். எப்படி அந்த நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது..” என்பதை தேஜஸ்வியும், அரவிந்தும் கேட்டுத் தெரிந்திருந்தாலே, இந்தக் கதை பாதியிலேயே புஸ்வாணமாகிவிடும். இந்த திரைக்கதை சறுக்கலுடன் இருப்பதுதான் படத்தில் இருக்கும் ஒரே குறை..! மற்றபடி படம் ஓகே ரகம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

காதலர்கள்.. காதலுக்காக.. இயக்குநர் ரவிச்சந்திரனுக்காக பார்க்கலாம்..!

Our Score