full screen background image

தியேட்டரில் நடக்கும் கதைதான் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படம்

தியேட்டரில் நடக்கும் கதைதான் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படம்

ட்ரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்.’ 

தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் ‘நாகேஷ் திரையரங்கம்’ எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘ இனிமே இப்படித்தான்’, ‘மீன் குழம்பும் மண்பானையும்’  படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள்.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு எம்.ஜி.ஆர். சிவாஜியின் கதாநாயகியான மூத்த நடிகை லதா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் சித்தாராவும்  நடிக்கவுள்ளார். ‘முண்டாசுப்பட்டி, ராஜா மந்திரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளி வெங்கட் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில்  அறிமுகமாகிறார்.

இந்தப் படத்திற்கு ‘ரமணா’, ‘அயன்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ படங்களின் ஒளிப்பதிவாளரான எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ‘கபாலி’ படத்தின் கலை இயக்குநரான ராமலிங்கம்தான் இந்தப் படத்திற்கும் கலை இயக்குநர். ‘திருநாள்’, ‘போங்கு’ படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீ, இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை தாமரை, உமாதேவி,  ரோகேஸ், முருகன் மந்திரம், மு.ஜெகன் சேட் ஆகியோர் எழுதுகிறார்கள்.

இப்படத்தை இயக்குநர் இசாக் எழுதி இயக்கியுள்ளார். இவர் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற முதல் தமிழ் இயக்குநர் என்பது குறிப்படத்தக்கது.

‘நாகேஷ் திரையரங்கம்’ படம் பற்றி இயக்குநர் இசாக் கூறுகையில், “திரையரங்கை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதையும், களமும் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  நிச்சயமாக நாகேஷ் திரையரங்கம் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் பேசப்படும் திரைப்படமாக இருக்கும்..” என்றார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஒரே ஷெட்யூலில் முடியவுள்ள இந்தப் படம், வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

Our Score