“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..!

“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..!

‘சினிமா ப்ளாட்பார்ம்’ என்ற புதிய  பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.T.ரித்திஷ் குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்தபோது’.

இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில்  நேற்று மாலை நடைபெற்றது.

விழாவின் துவக்கத்தில் தயாரிப்பாளர் V.T.ரித்திஷ் குமார் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமாவிற்காக நல்ல கதையைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்தர் என்னிடம் வந்து இந்தக் கதையைச் சொன்னார். மனதே உடைந்து போனது.

DSC_6596

இப்படம் ஒரு உண்மைச் சம்பவம். இந்தப் படத்தை எடுப்பதற்காக நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம். சினிமா என்பதையும் தாண்டி ஒரு குடும்பமாக இப்படத்தில் வேலை செய்துள்ளோம். இதை வெறும் சினிமாவாக பார்க்காமல் என் வாழ்க்கையாக நினைத்து இப்படத்தை எடுத்துள்ளேன். நிறைய பேர் என்னை என்கரேஜ் பண்ணவில்லை. டிஸ்கிரேஜ்தான் செய்தார்கள். இதை எல்லாம் தாண்டி இப்படம் கவிதை போல் இருக்கும். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தராமல் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

DSC_6663

நான் என் பையனை வைத்து இரண்டு படங்களை எடுத்தேன். என் மகன் ஒரு நாள் இனிமேல் என்னை நடிக்க வைக்காதீர்கள் என்றான். நான் அவன் சொல்லியும் கேட்கவில்லை. நடிகைகளை கட்டிப் பிடிக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைக்கவில்லை. உனக்குக் கிடைக்குதே.. என்றேன். அவன் சம்பாதிக்கவே இல்லை.

பெரிய நஷ்டங்களைச் சந்தித்து பத்து வருடங்களை கடந்தான். இப்போது எல்.கே.ஜி என்ற படத்தை எடுத்து அதன் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கும் இயக்குநராக இருக்கிறான். அதுபோல் என் மகனின் நண்பனான இப்படத்தின் இயக்குநர் ரவி சந்தரும் பெரிதாக ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பொய் சொல்லி படம் எடுக்கக்கூடாது. சூட்டிங் எத்தனை நாள் என்று சொல்கிறோமா அத்தனை நாட்களுக்குள் படத்தை எடுக்க வேண்டும். 200 நாள் படம் எடுப்பவரெல்லாம் இயக்குநர்களே கிடையாது. அதிக நாள் சூட்டிங் எடுக்கும் இயக்குநர்கள் எல்லாம் ஹீரோக்கள், ஹீரோயின்களை ஐஸ் வைப்பதற்காக படம் எடுக்கிறார்கள். ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதற்கான செலவை மட்டும்தான் செய்ய வேண்டும்.

ஆடியன்ஸ் இப்பொழுது மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நல்ல படத்தை கொண்டாடுகிறார்கள். எத்தனையோ சின்னப் படங்கள் பெரிதாக ஜெயித்திருக்கிறது. சின்னப் படங்கள் வரவேற்பைப் பெற்றால் நாட்டுக்கே நல்லது.

இப்படத்தின் இயக்குநருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைக்கும். இப்படத்தின் ட்ரைலர் மிகச் சிறப்பாக இருக்கிறது. இப்படத்தின் ஹீரோ மிகவும் நல்லவர், நிச்சயமாக அவர் மிகப் பெரிய வெற்றியை அடைவார்… ” என்றார்.

DSC_6667

நடிகர் சாம்ஸ் பேசும்போது, “தமிழ்ச் சினிமாவுலகம் லாபமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்படத்தின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நடிக்க வைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் பேசி இருக்கிறார். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இப்படத்தில் உள்ள ‘அள்ளிக் கொள்ளவா’ பாட்டை கே.ராஜன் சார் அருகில் இருந்து பார்க்கும்போது பயமாக இருந்தது. ஆனால் அவரும் பாட்டை ரசித்தார். பாக்யராஜ் சார், பேரரசு சார் எல்லாம் கண்டெண்ட் கொடுக்க வேண்டும். இப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்.

DSC_6670

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசும்போது, “எனக்கு எப்போதும் பழைய ஆட்களிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தது எல்லாமே சினிமாதான். இப்படத்தில் நான் கதையைக் கேட்கவே இல்லை. கதை மீது இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பாக்கியராஜ் சாரின் மகனால்தான் எனக்கு ‘சந்திரமெளலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமா பின்னணி இல்லாதவர்களும் நிறைய பேர் சாதித்து இருக்கிறார்கள். அது எனக்குப் பெரிய ஊக்கத்தைத் தந்திருக்கிறது..“ என்றார்.

இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேள் பேசும்போது, “எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இசையை ரொம்ப குவாலிட்டியாகப் பண்ணச் சொன்னார். 70 பேர் கொண்ட ஆர்க்கஸ்ட்ராவை வைத்து ரிக்கார்ட் செய்தோம். இதை எல்லாம் இசை அமைப்பாளர்களும் ஃபாலோ செய்ய வேண்டும்” என்றார்.

DSC_6664

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, “நான் அவளைச் சந்தித்தபோது’  படத்தின் டீம் நான்கு வருடங்களாகக் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இயக்குநரின் வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த சொந்த அனுபவம்தான் படத்தின் கதை என்றார்கள். படம் சிறப்பாக வந்திருக்கிறது என நினைக்கிறேன். சின்னப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஒரு காலம் வரும் என்று நம்புகிறேன்.

விஜய் நடித்த ‘நிலாவே வா’ படத்தை சொன்ன நேரத்தில் எடுத்து முடித்து கொடுத்தேன். அதற்காக எஸ்.ஏ.சி. சார் எனக்கு பேசிய சம்பளத்தைவிட அதிகமாக கொடுத்தார். குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களை சீக்கிரமாக எடுத்து முடித்தால் எல்லாருக்கும் நல்லது. சந்தோஷ் நிச்சயமாக ஜெயிப்பார். மொத்தமாக இந்த டீம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “எனக்கு இப்போது கைலாசா மாதிரி ஒரு தீவினை தனியாக அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு நான்கு சிஷ்யைகள் தேவை. அதற்கு நடிகர் சாம்ஸ்தான் உதவ வேண்டும்.

DSC_6660

‘நான் அவளைச் சந்தித்தபோது’ என்ற இந்தப் படத்தின் டைட்டிலைக் கேட்டவுடன் எல்லோருக்கும் பழைய ஞாபகம் வந்துள்ளது. ஆனால் யாருக்கெல்லாம் மனைவியின் ஞாபகம் வந்துள்ளது என்று தெரியவில்லை. தாய் பாசம்… தந்தை பாசம் உள்ள படங்களை பார்க்கும்போதுகூட அவர்கள் மீது பாசம் கூடுவதில்லை. ஆனால் காதல் படங்கள் பார்த்தால் காதல் கூடிவிடுகிறது. நல்ல லவ் ஸ்டோரிகளைப் பார்க்கும் போது நல்ல காதலைச் செய்யத்தான் தோன்றும்.

முன்பு வெளிவந்த படங்கள் பெண்களை நல்லவிதமாக காண்பித்தன. பாக்யராஜ் சாரின் படங்களை எல்லாம் பார்க்கும்போது நம் மனது கெட்டுப் போகவில்லை. ஆனால் இன்று இளைஞர்கள் கெட்டுப் போவதற்கு சினிமாவே காரணமாக இருக்கிறது.

கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண் பெண் இணைந்து வாழ்வது இப்போது மிகச் சாதாரணமாகிவிட்டது. பெண்கள் மூன்று வகையால் வாழ்க்கைச் சூழலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஆண்களை நம்பி தன் வாழ்க்கையில் ஏமாந்து போகிறார்கள். அவர்களைத்தான் பாக்யராஜ் சார் எச்சரித்து இருந்தார்.

‘மெளன கீதங்கள்’ என்ற படம் மூலமாக தமிழ்நாட்டின் மொத்தப் பெண்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறியவர் பாக்யராஜ் சார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததிற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருக்கிறது.

இன்று செல்போனால்தான் பாதி பேரின் வாழ்க்கைப் பறி போகிறது. பெண்கள் அமைப்பிற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். பாக்கியராஜ் சார் பெண்களுக்கான இயக்குநர். அவரைத் தவறாக நினைக்காதீர்கள். தொந்தரவும் செய்யாதீர்கள்.

இந்தப் படத்தின் ட்ரைலரை பார்க்கும்போதே நல்ல கதை இருக்கும் என்று தெரிகிறது. ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எல்.ஜி ரவிசந்தர் என் நண்பர். எங்கள் சங்கத்தில் அங்கம் வகிப்பவர். இந்தப் படம் அவர் வாழ்க்கையில் நல்ல வெற்றியைத் தர வேண்டும்…” என்றார்.

l.g.ravi chander

இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் பேசும்போது, “நானும் டைரக்‌ஷன் பண்ணிக்கிட்டேதான் இருக்கிறேன். எல்லாரும் சொல்வார்கள். ஒரு படம் இயக்கினால் வாழ்க்கையில் பெரிதாக செட்டில் ஆயிடலாம் என்பார்கள். இன்னைக்கும் நான் டூ வீலர்லதான் போறேன்.

இன்னைக்கு சினிமா மேல் ரொம்ப பயமா இருக்கு. இந்த லைனை தயாரிப்பாளரிடம் சொன்னேன். என் வாழ்க்கையில் நடந்த இன்சிடெண்டைதான் சொன்னேன். உடனே அவர் ‘இதையே படமா எடு’ என்றார். எனக்கு அதுவே மிகவும் பயமாக இருந்தது. ஆனால் படத்தை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு, ‘நான் எதிர்பார்த்ததைவிட நல்லா எடுத்திருக்கிறீர்கள்’ என்றார். இது எனக்கு ஒரு கோடி வாங்கியதற்கு சமம்.

நான் எல்லா மொழிகளிலும் படம் வொர்க் பண்ணி இருக்கிறேன். ஒரு பெரிய இயக்குநராக வர முடியவில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பின் நான் பெரிய இயக்குநரா வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் உள்பட அனைவருமே எனக்காக உழைத்தார்கள். தயாரிப்பாளர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு எனது நன்றிகள்..” என்றார்.

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் பேசும்போது, “இப்படத்தின் இசை அமைப்பாளர் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கிறார். கேமிராமேன் செல்வா நல்லா வேலை செய்பவர். ஹீரோ சந்தோஷ் அவரது கஷ்டங்களைச் சொன்னார். அவரும் டெபனட்டா ஒரு ப்ரேக் கிடைக்கும். இயக்குநர் எல்,ஜி.ரவிச்சந்தர் காமெடி டயலாக் எழுதுகிறவர் என்றார்கள். ஆனால் சீரியஸாக இருந்தார். ஆனால் அவர் பேசியபோதுதான் தெரிகிறது அவர் எவ்வளவு காமெடி செய்பவர் என்று…!

DSC_6772

நான் சினிமாவைப் பார்த்து கண் கலங்கி ரொம்பநாள் ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சில பெண்கள் அழுதார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் நிச்சயமாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்.

எனக்குத் தெரிஞ்சி இரண்டு பெட்ஷீட் வியாபாரிகளை தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நம்பிக்கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது.

விநியோகஸ்தர்களிடம் கதை சொல்வது என்பது மிகப் பெரிய கொடுமை. என் குருநாதர் பாரதிராஜா அப்படி நிறைய பேரிடம் கதை சொல்லி சிரமப்படுவதைப் பார்த்திக்கிறேன். அதனால் நான் எடுக்கும் படங்களின் கதையை யாருக்கும் சொல்ல மாட்டேன்.

‘முந்தானை முடிச்சு’ படத்தின் கதையை கேட்ட பின் ஏவி.எம்-ல் ‘இப்படத்திற்கு இளையராஜாதான் இசை அமைக்கணும்’ என்றார்கள். நான் முன்னாடியே கங்கை அமரனை பிக்ஸ் பண்ணி இருந்தேன். பின் ஏவி.எம். சரவணன் ஸார் கங்கை அமரனை சந்தித்து அவருக்கு இரு படங்கள் தருவதாகச் சொல்லி, இந்தப் படத்தை இளையராஜாவிற்கு கொடுத்தார்கள்.

DSC_6658

நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால்தான். எம்.ஜி.ஆர். ஒரு மீட்டிங்கில் “இப்போ ரொம்ப முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு. அதனால் பெண்களெல்லாம் எழுந்து வீட்டுக்குப் போங்க..’ என்றார். பெண்கள் கூட்டம் கலைந்தது. பின்பு அவர் மேடையில் தொடர்ந்து பேசும்போது, “இதுல ஒண்ணும் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒன்றாக கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்படக்கூடாது என்று நினைத்துதான் அவர்களை முதலில் போகச்  சொன்னேன்” என்றார்.

அப்படி யோசிக்கக்கூடிய எம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை ‘கலை வாரிசு’ என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எப்படி மதித்திருப்பேன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பாக்யாவில் நான் ஒரு கதை எழுதியிருந்தேன். கல்யாணம் ஆன புதுசு. கணவனை சேலத்துக்கு வழி அனுப்பி வைக்கிறாள். திரும்பி வீட்டுக்கு போகிற வழியில் அவளை மூணு பேர் சேர்ந்து கெடுத்து விடுகிறார்கள். அவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார்கள். கணவன் சேலத்தில் இறங்கியதும் அவனுக்கு செய்தி கிடைக்கிறது. பதறிப் போய் ஊருக்கு திரும்புகிறான். ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவியைப் பார்த்துவிட்டு திரும்பியவனிடம் ஆளுக்காள் விசாரிக்கிறார்கள்.

அவனோ அமைதியாக “மூணு வெறி நாய் கடிச்சிடுச்சி. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கா” என பதில் சொன்னான். இப்படித்தான் நான் அந்தக் கதையை எழுதினேன். இப்படி கதை எழுதினவன் பெண்களை இழிவாகப் பேசுவேனா..? எனக்கு பெண்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. ஆகையால் யாரும் கவலைப்பட வேண்டாம். 

இந்தப் படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது…” என்றார்.

இறுதியில் சிறப்பு விருந்தினர்கள் ‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் இசை தட்டை வெளியிட… படக் குழுவினர் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.

 




error: Content is protected !!