full screen background image

நடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’

நடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’

ஒளிப்பதிவாளரும், இயக்குநர் மற்றும் நடிகருமான சுரேஷ் சந்திர மேனன் ‘My Karma App’ என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார்.

அது பற்றிய அறிமுக விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் இந்த நிகழ்ச்சியில் அந்த புதிய க்விஸ் அப்ளிகேஷனை பத்திரிகையாளர்களிடத்தில் அறிமுகப்படுத்தி அது பற்றி விளக்கினார்.

அவர் பேசும்போது, “என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குநராக, நடிகராக  பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது ‘லூசிஃபர்’, ‘அடங்க மறு’, ‘காளிதாஸ்’, ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.

நடிப்பதைத் தாண்டியும் பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் எனக்கு பெரும் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன்.

சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட்ரோல் ஐடியாக்கள் செய்து கொடுத்திருக்கிறேன். அடையாறு ராஜ்பவனை சுற்றி எப்படி போக்குவரத்தினை மாற்றம் செய்தால் அந்தப் பகுதியில் நெரிசல் குறையும் என்பதற்காக நானே ஒரு வடிவமைப்பு செய்து சென்னை போலீஸாரிடம் கொடுத்தேன். அதைத்தான் அவர்கள் அங்கே அமல்படுத்தியிருக்கிறார்கள். இதேபோல் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல திட்டங்களை அவர்களிடத்தில் சொல்லியிருக்கிறேன். ஒரு சிறந்த தமிழ்க் குடிமகனாக சேவை மனப்பான்மையுடன் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.

இப்போது மொபைல் போனில் பயன்படுத்தும் வகையில் ‘MyKarma.com’ என்ற பொது அறிவு நிகழ்ச்சி அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறேன். இந்த அப்ளிகேஷனை உருவாக்க முக்கிய காரணம், இப்போதைய புதிய தலைமுறைக்கு பொது அறிவைப் பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை.  அவர்களை ஈர்க்கத்தான் இதனை உருவாக்கியிருக்கிறேன்.

ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்.

முழுக்க, முழுக்க இது மொபைல் யுகம். இனிமேல் இது போன்ற அப்ளிகேஷன்களுக்குத்தான் எதிர்காலம் உண்டு. அதனால்தான் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது.

மக்கள் இப்போதெல்லாம் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். அதனால் இது போன்ற க்விஸ் நிகழ்ச்சிகளை இதில் வெற்றிகரமாக நடத்தலாம்.

‘கர்மா’ என்பது உலக அளவில் அனைவருக்கும் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால்தான் இந்த அப்ளிகேஷனுக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களைகூட தெரிந்து கொள்ளலாம். இது கூகிள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றிருக்கிறது. Learn, Earn, Return என்பதுதான் இந்த அப்ளிகேஷனின் டேக்லைன். தினமும் இரவு 7 முதல் 9 மணிவரை இந்த விளையாட்டை விளையாடலாம்.

இந்த அப்ளிகேஷனில் உள் நுழைந்து உங்களது பெயரையும், மொபைல் போன் நம்பரையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் இருக்கும் வழியின்படி பணம் கட்டிவிட வேண்டும். ஒரு கேள்விக்கு 2 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பதிலைச் சொல்வதற்கு உங்களுக்கு 10 நொடிகள் மட்டுமே அவகாசம் தரப்படும். தவறான பதிலைச் சொன்னால் மொத்தப் பணத்தில் இருந்து 2 ரூபாய் மைனஸ் செய்யப்படும். சரியான பதிலைச் சொன்னால் பரிசுப் பணம் உங்களுடைய அக்கவுண்ட்டில் ஏற்றப்படும். இதில் கேட்கப்படும் தொண்ணூறு சதவிகித கேள்விகள் இந்தியாவை பற்றியதாகத்தான் இருக்கும். இதுவரையிலும் 4000 பேர் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதில் விளையாடி பொது அறிவையும் வளர்க்கலாம். பணத்தையும் சம்பாதிக்கலாம். பொது சேவை செய்யும் NGO அமைப்புகளுக்கு நீங்கள் இதன் மூலமாக உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை  அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்…” என்றார்.

Our Score