மோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.

மோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.

‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களின் இசையமைப்பாளரான சாம் சி.எஸ். தற்போது மோகன்லால் நடிக்கும் ‘ஒடியன்’ படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் மல்லுவுட் எனப்படும் மலையாள திரையுலகத்திலும் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார்.

இது பற்றி இசையமைப்பாளர் சாம் பேசும்போது, “விக்ரம் வேதா’ ரிலீஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுவிடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. அந்தப் படத்தின் திரைக்கதை நான் லீனியர் சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது. 

sam c.s.

‘ஒடியன்’ திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதை கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது.

வழக்கமாக மூங்கில் இசைக் கருவி என்றால் அது ஃப்ளூட்தான். ஆனால் 6 அடி நீளம் மூங்கில் இசைக் கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்தில் அதை பயன்படுத்திக் கொண்டோம்…” என்றார் சந்தோஷத்துடன்..!  

படத்தை முழுமையாக காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஒடியன் படக் குழுவையும் கவர்ந்து விட்டார் சாம்.

நறுமணம் கமழும் மூணாறு மலைப் பகுதிகளில் வளர்ந்த இந்த இளம் இசையமைப்பாளர் ஓரிரண்டு காரணங்களால் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்கிறார்.

“ஒன்று மோகன்லால் படம் தன்னுடைய முதல் படமாக அமைந்தது, மற்றொன்று ‘ஒடியன்’ படம் வழக்கத்துக்கு மாறான, இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் படமாக அமைந்தது…” என்கிறார். 

இதற்கிடையில் ‘கரு’, ‘கொரில்லா’, ‘அடங்க மறு’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘வஞ்சகர் உலகம்’ மற்றும் சில படங்கள் என அடுத்தடுத்த படங்களால் தமிழ் திரை உலகின் இன்றியமையாத இசை அமைப்பாளர் ஆகிவிட்டார் சி.எஸ்.சாம்ஸ்.