“மிஷ்கினுக்கு என்ன தேவையோ அது எனக்கு தெரியும்…” – இசையமைப்பாளர் அரோல் கரோலி பேட்டி..!

“மிஷ்கினுக்கு என்ன தேவையோ அது எனக்கு தெரியும்…” – இசையமைப்பாளர் அரோல் கரோலி பேட்டி..!

இசை கருவிகளுக்கெல்லாம் அரசியாக திகழ்வது வயலின் இசைக் கருவி. அந்த வயலின் இசையில் கை தேர்ந்தவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் பிறந்து வளர்ந்து, பட்டய கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்த அரோல் கொரெலி, இசையின் மீது உள்ள காதலால் ‘பிசாசு’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

‘பிசாசு’ படத்தில் பெற்ற  ‘நதி போகும் கூழாங்கல் பயணம்….’ என்னும் பாடலும், பின்னணி இசையும், ரசிகர்களின் நெஞ்சத்தை கரைத்துவிட்டது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

தன்னுடைய முதல் படத்திலேயே இசை பிரியர்களின் பார்ட்டுக்குரிய இசையமைப்பாளராக உருவெடுத்த  அரோல் கொரெலி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படம் மூலம் தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார்.  

‘லோன் வுல்ப் புரொடக்சன்’ சார்பில் இயக்குநர் மிஷ்கின் கதையெழுதி, தயாரித்து, அவருடைய உடன் பிறந்த தம்பியான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில், இயக்குநர் ராம் மற்றும் நடிகை பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  

“மிஷ்கின் சாரின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக் கூடியதாக இருக்கும். அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதேகேற்றார்போல் இசையமைப்பதுதான் சவாலான காரியம். ஆனால் என்னால் மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை  உணர முடியும்.

‘சவரக்கத்தி’ படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, ‘தங்கக் கத்தி, இரும்புக் கத்தி…’, மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான  ‘அண்ணாந்து பார்….’ பாடல்.  

இதில் இரண்டாவது பாடல் முழுக்க, முழுக்க காட்சிகளால் அமைக்கப்பட்டது. எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை. யதார்த்தமான காட்சிகளில் உருவாகியிருக்கும்  இந்த ‘அண்ணாந்து பார்….’ பாடலை திரைப்படத்தில் பார்க்கும்பொழுது, ஒரு புதுவித அனுபவம் ரசிகர்களின் உள்ளங்களில் ஏற்படும்.

எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த மிஷ்கின் சாருக்கு இந்த தருணத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர் ராம் சாரோடும், இயக்குநர் ஆதித்யாவோடும் இணைந்து பணியாற்றியது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘சவரக்கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.




error: Content is protected !!