full screen background image

மோகன்லாலின் திடீர் தேர்தல் பிரச்சாரம் – மலையாள நடிகர் சங்கத்தில் குழப்பம்..!

மோகன்லாலின் திடீர் தேர்தல் பிரச்சாரம் – மலையாள நடிகர் சங்கத்தில் குழப்பம்..!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரள சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டதால், மலையாள திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதிதான் இப்போதைய தேர்தலின் ஸ்டார் வார்ஸ் தொகுதியாகும்.

அந்த்த் தொகுதியில் இடது சாரி கூட்டணியின் சார்பில் முன்னாள் அமைச்சரும், நடிகருமான கே.பி.கணேஷ்குமார் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பிரபல நகைச்சுவை நடிகர் ஜெகதீஷ் போட்டியிடுகிறார். மேலும் பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில் பிரபல வில்லன் நடிகரான பீமன் ரகு போட்டியிடுகிறார்.

pathanapuram-candidates-1.jpg

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மூவருமே ஒருவர் மாற்றி ஒருவர் அரசியல் ரீதியாக தாக்கிக் கொண்டாலும் தனிப்பட்ட பிரச்சனையை முன் வைக்காமல்தான் இதுவரையில் பேசி வந்திருக்கிறார்கள்.

“தன்னுடனான தனிப்பட்ட பிரச்சினைக்காகவே ஜெகதீஷ் இத்தொகுதியை காங்கிரஸில் கேட்டு வாங்கி நிற்கிறார்..” என்கிறார் கே.பி,கணேஷ் குமார். “எனக்கும் அவருக்கும் வாய்க்கா, வரப்பு சண்டையெல்லாம் இல்லை. அவர் யார்..? பெரிய நடிகன்.. நானோ சின்ன காமெடியன்.. நான் போய் அவரிடம் போட்டி போட முடியுமா..?” என்று பொடி வைத்துப் பேசுகிறார் ஜெகதீஷ். இவர்களுக்கிடையில் கிச்சுக்கிச்சு மூட்டும் நடிகர் பீமன் ரகுவோ, மோடியின் சாதனைகளை மட்டுமே சொல்லி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று பத்தனாபுரம் தொகுதியில் நடைபெற்ற தனக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை அழைத்து வந்தார் கே.பி.கணேஷ்குமார். மோகன்லாலுடன் அவரது நெருங்கிய நண்பரான இயக்குநர் பிரியதர்ஷனும் வந்திருந்தார்.

mohanlal-ganeshkumar-priyardharshan

இந்தக் கூட்டத்தில் பேசிய மோகன்லால், “கணேஷ்குமார் எனது நெருங்கிய நண்பர்.. எனக்கு தம்பி மாதிரி..  இந்த்த் தொகுதிக்காக அவர் நிறையவே செய்திருக்கிறார். எப்போது பார்த்தாலும் இந்த்த் தொகுதி மக்கள்.. தொகுதிப் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.. அந்த அளவுக்கு துடிப்பான ஒரு மக்கள் தொண்டர். இந்த முறையும் கணேஷ்குமார் இந்த்த் தொகுதியில் நிச்சயம் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்..” என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மோகன்லாலில் இந்த திடீர் ஆதரவு மற்ற இரண்டு வேட்பாள நடிகர்களான ஜெகதீஷுக்கும், பீமன் ரகுவுக்கும் பலத்த அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அதிலும் ஜெகதீஷ் மனம் உடைந்து அழுதேவிட்டாராம்.

கணேஷ்குமாரைவிடவும் ஜெகதீஷ்தான் மோகன்லாலுடன் அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். ஜெகதீஷ், ராஜூ இருவரும்தான் மோகன்லாலின் 1980-1990-களில் வெளிவந்த அனைத்து படங்களிலும் நண்பர்களாக நடித்தவர்கள். தனக்கு நெருங்கிய நட்பாக இருந்தும் மோகன்லால் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகச் சொல்கிறார் நடிகர் ஜெகதீஷ்.

jagadheesh-1

இது பற்றி பேட்டியளித்த நடிகர் ஜெகதீஷ்.. “மோகன்லாலின் இந்தச் செயலை நான் எதிர்பார்க்கவே இல்லை. நேற்றைக்கு முன்தினம்தான் அவர் என்னை போனில் அழைத்து நான் வெற்றி பெற வாழத்துவதாகச் சொன்னார். என்னுடைய ஆதரவு உனக்குத்தான் என்றும் சொன்னார். அதற்குள்ளாக எப்படி அவர் கணேஷ்குமாரின் ஆதரவு மேடையில் ஏறினார் என்று எனக்குத் தெரியவில்லை. இது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது.

கணேஷ்குமாருக்கும் முன்பாகவே எனக்கு மோகன்லாலை தெரியும். கணேஷைவிடவும் மோகன்லாலுடன் நான்தான் அதிகமாக நடித்திருக்கிறேன். என்னைப் பற்றியும் மோகன்லாலுக்கு நன்கு தெரியும். அப்படியிருந்தும் மோகன்லால் இப்படி செய்யலாமா..? ‘நண்பருக்காக பேச வந்தேன்’ என்று மோகன்லால் மேடையில் பேசியிருக்கிறார். நானும் அவருக்கு நண்பன்தானே..? அப்போது என் பிரச்சாரக் கூட்டத்திற்கும் அவர் வந்திருக்கலாமே..? ஏன் வரவில்லை..?

பத்திரிகையாளர்கள் சிலர் மூலமாக நான் கேள்விப்பட்டவரையில் மோகன்லாலை ஏதோ ஒரு விஷயத்தில் பிளாக் மெயில் செய்துதான் கணேஷ்குமார் அங்கே வரவழைத்திருக்கிறார். இது போன்ற சீப்பான வேலையில் மோகன்லால் சிக்கிக் கொண்டது எனக்கு வருத்தமளிக்கிறது.

அதோடு எங்களது ‘அம்மா’ அமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ‘இந்தத் தொகுதியில் மட்டும் எந்த நடிகரும் யாருக்கும் ஆதரவளித்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம். அது நடிகர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும்’ என்று முன்பேயே சொல்லியிருந்தோம். அந்த எழுதப்படாத விதியை, சங்கத்தின் துணைத் தலைவரான மோகன்லாலே மீறிவிட்டார்…” என்று புலம்பித் தள்ளியிருக்கிறார்.

beeman raghu-2

இதே நேரம் பா.ஜ.க. வேட்பாளரான பீமன் ரகுவோ, “மோகன்லாலின் கணேஷ் குமார் ஆதரவு எனக்கு வருத்தமளிக்கிறது. அவர் இடது சாரி கூட்டணியில் சேர்ந்து கணேஷ் குமாருக்கு ஆதரவளித்திருந்தால்கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் பொதுவான நபராக இருந்து கொண்டு.. இப்படி மூன்று நடிகர்கள் போட்டியிடும்போது அதில் ஒருவருக்கு ஆதரவு கொடுத்து கை தூக்கிவிடுவது நாகரீகமல்ல..” என்று விரக்தியாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் மோகன்லாலின் இந்தப் பிரச்சாரத்தைக் கண்டு கோபமடைந்த மலையாள நடிகரான சலீம்குமார் தான் ‘அம்மா’ அமைப்பில் இருந்து விலகுவதாக நேற்றைக்கு அறிவித்துள்ளார்.

salim-kumar

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தலில் பத்தினாபுரம் தொகுதியில் மட்டும் எந்த நடிகரும் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எழுதப்படாத ஒரு விதியை ‘அம்மா’ அமைப்பில் எடுத்தோம். ஆனால் சங்கத்தின் துணைத் தலைவரான மோகன்லாலே இந்த விதியை மீறி பிரச்சாரம் செய்துள்ளார்.

நானும் காங்கிரஸ்காரன்தான். ஆனால் பத்தினாபுரம் தொகுதியில் ஜெகதீஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை. காரணம், நடிகர்களுக்குள் பிரச்சினை வந்துவிடக் கூடாதே என்றுதான் கவனமாக தவிர்த்துவிட்டேன். மோகன்லாலும் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

ஒரு சங்கத்தின் துணைத் தலைவரே இதை மீறினால் எப்படி..? இதனால் ‘அம்மா’ அமைப்பில் இருந்து நான் விலகப் போகிறேன்..” என்று கூறியதோடு தனது விலகல் கடிதத்தை ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளரான நடிகர் மம்மூட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இப்படி நடிகர் சலீம் குமார் எதிர்த்தாலும் நடிகர் முகேஷ் மோகன்லாலுக்கு ஆதரவளித்துள்ளார். முகேஷ் கொல்லம் தொகுதியில் இடது சாரி கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் பேசும்போது, “ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனக்குப் பிடித்தமானவர்களுக்கு ஆதரவளிக்க உரிமையுண்டு. அந்த வகையில்தான் மோகன்லால், கணேஷ்குமாருக்கு ஆதரவளித்துள்ளார். இதில் தப்பில்லை. மோகன்லால் எனக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்திற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்..” என்றார்.

innocent-1

‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் இன்னசென்ட் பேசும்போது, “மோகன்லால் கணேஷ் குமாருக்காக பிரச்சாரம் செய்ததில் தப்பில்லை. அது அவருடைய விருப்பம். ‘அம்மா’ அமைப்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து எந்தவொரு கட்டாயத்தையும் தனது உறுப்பினர்களிடத்தில் திணிக்கவில்லை. அது அவரவர் விருப்பம்தான். உறுப்பினர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும், ஆர்வத்திற்கும் சங்கம் எப்போது தடை விதிக்காது..” என்று சொல்லியிருக்கிறார்.

இதேபோல் மலையாள நடிகர் திலீப்பும் மோகன்லாலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். “மோகன்லாலின் இந்தப் பிரச்சாரத்தில் தப்பில்லை. அவருக்கு கணேஷ்குமாரை பிடித்திருக்கிறது. பிரச்சாரம் செய்திருக்கிறார். அவ்வளவுதான். இதில் ‘அம்மா’ அமைப்பை இழுக்க வேண்டாம்.” என்று சொல்லியிருக்கிறார். நடிகர் திலீப்பும் கணேஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆக மொத்தம்.. பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும், மலையாள நடிகர் சங்கத்தில் பெரும் பஞ்சாயத்து இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது..!

Our Score