மோகனவதனி என்னும் பேய் ஆட்டி வைக்கும் ‘மோ’ திரைப்படம்

மோகனவதனி என்னும் பேய் ஆட்டி வைக்கும் ‘மோ’ திரைப்படம்

WTF எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் மொமென்ட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், ரோஹித் ரமேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘மோ’.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, சுரேஷ் ரவி, முனிஷ்காந்த், ‘யோகி’ பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் செல்வாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புவன் R.நல்லான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் புவன் ஆர்.நல்லான், “இது திகிலும், காமெடியும் கலந்த ஒரு பேய்ப் படம். அதே சமயம் வழக்கமான பழி வாங்கும் பேய் படமாகவும் இது இருக்காது. இதுவரை வந்த பேய் படங்களில் இருந்த காட்சிகள் எதுவும் இந்தப் படத்தில் இருக்காது. ஆனால் திகில் கலந்த சிரிப்புக்கு பஞ்சமேயில்லாத படம் இது. 50 சதவிகிதம் காமெடி.. 50 சதவிகிதம் திகில் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

பதினைந்து வருடங்களாக ஒரு பள்ளி மூடிக் கிடக்கிறது. அந்தப் பள்ளியை வாங்க சிலர் முயற்சிக்கும்போது ஏற்படும் தடைகளையும், அந்தத் தடைகளை யார் உடைத்து பிரச்சினையை முடிக்கிறார்கள் என்பதும்தான் படமே.

உண்மையில் ஒரு பேய்தான் அந்தப் பள்ளிக்கூடத்தை விற்க முடியாமல் தடுக்கிறது. ஏன் தடுக்கிறது..? அந்தப் பேய்க்கும், அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது ஒரு கிளைக் கதை. பேய் இருந்தாலும் அது பழி வாங்கும்விதமான காட்சிகள் இருக்காது. இதில் ஹீரோ மற்றும் காதல் காட்சிகள் கிடையவே கிடையாது. பிளாஷ்பேக் யுக்தி எந்தப் படத்திலும் பார்க்காத அளவுக்கு புதுமையாக இருக்கும்.

இன்னொரு பக்கம் கீதா ஃபெர்ணான்டஸ் என்ற  ஒரு பெண்ணின் ஆவி ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புவாசிகளை இரவு நேரமானால் தூங்க விடுவதில்லை. குடியிருப்பைச் சுற்றி வரும் அந்த அட்டகாசம் செய்கிறது.. அந்தப் பேயை கட்டுப்படுத்த ஜோஸப் செல்லப்பாவாக முனிஷ்காந்த் வருகிறார். இதுவும் ஒரு கிளைக் கதைதான்.

மோகனவதனி என்னும் பேய் கேரக்டரில் பூஜா தேவரியா நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார். இவரது மேக்கப்மேனாக முனீஸ்காந்த் நடித்துள்ளார். படத்தின் இறுதியில் ஐஸ்வர்யா ஹீரோயினாகிவிடுவார். அது எப்படி என்பதும் கிளைமாக்ஸில் இருக்கும் டிவிஸ்ட்டுகளில் ஒன்று.

இதன் திரைக்கதை நிச்சயம் மிக, மிக வித்தியாசமானதாகத்தான் இருக்கும். சென்சாரில் எங்கள் படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. வெங்கீஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது..” என்றார்.




error: Content is protected !!