சண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘மித்ரன்’ படத்திற்காக உருவான ‘சல சல’ பாடல் காட்சி

சண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘மித்ரன்’ படத்திற்காக உருவான ‘சல சல’ பாடல் காட்சி

ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மித்ரன்’.

இந்தப் படத்தில் கேப்டன் விஜய்காந்தின் மகனான சண்முகப் பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா வில்லனாக நடிக்க, அழகம் பெருமாள், சாய் தீனா மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இவர்களைத் தவிர, ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி கே.பி.ஒய். புகழ் பப்பு மற்றும் யூ டியூப் ‘ஹேண்ட்பேக்’ ஷோ புகழ் ஆஷிக் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

நாயகனுடன் படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் நடிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் அம்மாவாக நடிக்கிறார்.

இந்த் படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் உறுதி செய்யப்படும்.

இந்தப் படத்தை ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களில் இயக்குநர் சிவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜி.பூபாலன், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மித்ரன்’ படத்திற்காக தற்போது தீவிர படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார் நாயகன் சண்முகப் பாண்டியன்.

சமீபத்தில் இந்தப் படத்திற்காக ‘சல சல’ என்ற துள்ளலான பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் கூறும்போது, “இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படம். காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் – மகன் பாச உணர்வுகளுடன் படத்தின் கதையை வடிவமைத்துள்ளோம்.

நாயகன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் ஊருக்கே போஸ்டிங் கிடைத்து பணியில் சேர்கிறார். அங்கே அவருக்கு நடக்கும் பிரச்சினைகளும், அதை அவர் எதிர்கொள்ளும்விதமும்தான் படத்தின் கதை.

பாடலாசிரியர் அருண் ராஜ் ‘சல சல’ பாடலின் சாதாரண பதிப்பை எனக்கு வாசித்து காட்டியபோது, இது நிச்சயமாக மிகப் பெரிய அளவுக்கு ஹிட்டாகும் என்பதை உணர்ந்தேன்.

இந்தப் பாடல் காட்சியை படமாக்கியபோது ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். நடன இயக்குநரான சதீஷ் தனது நடன அசைவுகள் மூலம் தனது மாயாஜாலத்தை சேர்த்தார். இசையின் தாளங்களுக்கு ஏற்ப கலக்கலான நடனத்தை அமைத்திருக்கிறார் சதீஷ். ஒளிப்பதிவாளரான முரளி கிரிஷ் இந்தப் பாடல் காட்சிகளை தனது கேமிராவில் மிக அழகாகச் சுட்டிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாயகன் சண்முகப் பாண்டியன் தனது நடனத் திறமையை வெளிக்காட்டியவிதம் இன்னொரு அழகு.இந்தப் பாடலை பார்வையாளர்கள் எவ்வாறு ரசிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்னணியில் உள்ள பார்வையாளர்களின் ரசனைகளை இத்திரைப்படம் பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்…” என்றார்.
error: Content is protected !!