full screen background image

“திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை..” – சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்..!

“திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை..” – சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்..!

“திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…” என செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.

சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராஜன் திரையரங்குகளின் கட்டண விவரம் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார்.

‘‘ஏழைகளின் பொழுதுபோக்காக உள்ள திரையரங்குகளில் இப்போது 250 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கிறார்கள். நுழைவு கட்டணம் எவ்வளவு என்பதை பொதுமக்கள் பார்க்கும்வகையில் விளம்பரப் பலகைகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் பல தியேட்டர்களில் அவ்வாறு வைக்கப்படுவதில்லை. நடிகர்களுக்கு ஏற்ப 200 முதல் 300 ரூபாய்வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கிறார்கள். கூடுதல் கட்டணம் வசூலித்தால் அரசிடம் புகார் செய்ய தனி தொலைபேசி வைக்கப்படுமா..?’’ என்று அடுக்கடுக்காக சில கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் அரசு அனுமதித்த கட்டணம் எவ்வளவு என்பதை பொதுமக்கள் பார்க்கும்வகையில் விளம்பரப் பலகை வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி விளம்பரப் பலகைகள் வைக்கப்படாத திரையரங்குகளில் உடனடியாக வைக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக வளாகத்துடன் கூடிய திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.120 வரையும், மற்ற குளிர்சாதன திரையரங்குகளில் ரூ.10 முதல் ரூ.50 வரையும், நகராட்சிகளில் ரூ. 5 முதல் ரூ.40 வரையும், பேரூராட்சிகளில் ரூ.5 முதல் ரூ.25 வரையும், கிராமங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..” என வழக்கமான பாணியில் எச்சரிக்கை விடுத்தார்.

Our Score