மீண்டும் வெள்ளித் திரையில் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்..!

மீண்டும் வெள்ளித் திரையில் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்..!

இந்தியத் திரையுலகின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., விரைவில் உலகெங்கும்   வெள்ளித் திரையில்  புதிய பரிணாமத்தில் ‘என் ஃபேஸ்’ எனும் முற்றிலும் புதிய, அதியற்புத தொழிற் நுட்பத்தின் மூலம் வலம் வர இருக்கிறார்.

மலேசியாவின்  சர்வதேச ஊடக தொழிற் நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி. இந்த நிறுவனம் ‘என் ஃபேஸ்’ என்னும் புதிய தொழிற் நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.  

மலேசியாவின் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவூட் VFX தொழிற் நுட்ப வல்லுனர்களும் இணைந்து, இந்திய திரையுலகின்  மக்கள்  திலகம்  எம்.ஜி.ஆர். என்றழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை, ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக  மக்கள்  முன்  மீண்டும்  உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். 

mgr 

இந்த சர்வதேச திரைப்படத்தை புகழ் பெற்ற இயக்குநரான பி. Pவாசு இயக்குகிறார். கதைக் களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக-நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.     

சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப்படுவதாலும், ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்.

இருப்பினும், இத்தகைய மேம்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கு பிறகே கை கூடியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக முன் உற்பத்தி வேலைகளில் தன் முனைப்புடன் இந்நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவையும், முக பாவத்தையும், நடத்தையையும் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும்,  செயற்கை அறிவாற்றல் தொழிற் நுட்பங்கள் மூலம் பதிவு செய்துள்ளது.

Team Still 1

இது பற்றி ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டத்தோ மார்கழி பழனி கூறும்போது, “இயக்குநர் பி.வாசுவின் தந்தையான பீதாம்பரம் அவர்கள், எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால்,  எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும் இயக்குநர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.

அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். மேலும் அவரது படைப்புகள் வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பது பறைசாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளதால், இத்திரைபடத்திற்க்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார் என்று நம்புகிறோம்..” என்றார்.  

ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை தொழிற் நுட்ப அதிகாரியான விமலநாதன் படம் பற்றிப் பேசுகையில், “இந்தியாவில் எம்.ஜி.ஆர். இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும்  அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.

அன்னாரது சமாதிக்கு வருகை தரும் எண்ணிலடங்கா மக்களின் மனங்களில் இன்றளவும் அவர் வாழ்கிறார் என்பதே அவரது அபிமானத்திற்கு ஒரு மிகப் பெரிய சாட்சி.  அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த  வெற்றிடத்தை நிரப்பும் வகையில்  மீண்டும்  வெள்ளித் திரையில்  அவர் உயிர் பெறும் காட்சிகள்,  மக்கள் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.

வணிக நோக்கிலும் ஒரு புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது.  எம்.ஜி.ஆர். குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறும் என்றே நினைக்கிறோம்..” என்கிறார்.   

இத்திரைப்படத்தின் ஆக்கபூர்வ தயாரிப்பாளரில் ஒருவராகவும், சர்வதேச ஸ்கிரிப்ட் ஆலோசகராகவும் பங்காற்றும் எம்.வெங்கடேசன், “இந்த திட்டம் ஒரு தனித்துவமான சர்வதேச தயாரிப்பு மற்றும் சர்வதேச சந்தைப்படுத்துதல் முறைகளை உள்ளடக்கி இருப்பதால், இம்முயற்சி உலக அளவில் ஆசிய திரைப்படங்களுக்கான ஒரு புதிய பாதையை வடிவமைத்து தரும்…” என்கிறார்.

மேலும் நேர்முக கதாபாத்திரங்களை திரைப்படங்கள், கண்காட்சிகள், மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடிவமைக்கும் நோக்கில் பல்வேறு  நிறுவனங்களுடன்  இந்த கூட்டமைப்பு தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.