நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரவிருக்கும் பக்தி படம் ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா’     

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரவிருக்கும் பக்தி படம் ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா’     

காளையப்பா பிக்சர்ஸ்  கே.ஜி.காளையப்பன் வழங்க, ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா.’

இந்த படத்தில் புதுமுகங்களான மகி, சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும் முக்கிய வேடத்தில் டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். மற்றும் நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா, ஸ்ரீஹரி, பிரதீப்,  ஜெனிபர்  ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.

இசை – ‘தேனிசை தென்றல்’ தேவா,     ஒளிப்பதிவு –  N.D.சிவமனோகரன், கலை  –  ஆர்.மோகன்,  நடனம் –  சம்பத் குமார், படத் தொகுப்பு – உதயசங்கர்,     தயாரிப்பு நிர்வாகம் –  ஆத்தூர் ஆறுமுகம்,  இணை இயக்கம் – சங்கர்ஜி, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, – E.ஜெயபால் சுவாமி, இயக்கம் – சந்திர கண்ணையன். 

படம் பற்றி இயக்குநர் சந்திர கண்ணையன் பேசும்போது, “தமிழ்த் திரையுலகில் தற்போது பக்தி படங்கள் வருவதே இல்லை. பேய் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து பக்தி மயமான படமாக இந்த ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா’  என்ற படத்தை எடுத்துள்ளோம்.   

ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால்  தோஷம் அவர்களை படாதபாடுபடுத்தி விடுகிறது. அந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டி தம்பதிகள் விரதமிருந்து அம்மனை நோக்கி வேண்டுகிறார்கள். ஸ்ரீகனகதுர்கா அம்மா அவர்களை எப்படி காப்பாற்றுகிறாள் என்பது ஒரு கதை.

இன்னொரு பக்கம் சமீபத்தில் திருமணமான புதுமணத் தம்பதிகள் தேனிலவிற்கு செல்கிறார்கள். ஆனால் அந்த மாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. காதல் நிறைவேறாத விரக்தியில் அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். பிறகு பேயாக வந்து அந்த புதுமணத் தம்பதிகளை வாழ விடாமல் தடுக்கிறாள். இந்தத் தம்பதிகளும் ஸ்ரீகனகதுர்கா அம்மனுக்கு விரதம் இருந்து  எப்படி பேயிடம் இருந்து மீண்டார்கள்  என்பது இன்னொரு கதை.

இந்த இரண்டு கதைகளையும் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுத்துள்ளோம்.  சாமி படங்களுக்கும், பாடல்களுக்கும் இசையமைப்பாளர் தேவா எப்போதும் பேர் போனவர். இந்த படத்திலும் ஐந்து ஹிட்டான பாடல்களை கொடுத்துள்ளார்.  இந்த படத்தை  காளையப்பா பிக்சர்ஸ் இம்மாதம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது..” என்றார்.




error: Content is protected !!