மெட்ரோ ரயிலில் ஷூட்டிங் நடத்த ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் கட்டணம்..!

மெட்ரோ ரயிலில் ஷூட்டிங் நடத்த ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் கட்டணம்..!

சென்னை மாநகரில் 2 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தில், முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு காரணத்தை காட்டி, முதலில் மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

அதற்கான கட்டணத்தையும், நிபந்தனைகளையும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்பு நடத்தலாம். காலை 10 மணி முதல் இரவு 12 மணிவரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். 

டெபாசிட் தொகையாக ரூ.12 லட்சம் செலுத்த வேண்டும். இரண்டிலும் படப்பிடிப்பு நடத்தினால் ரூ.15 லட்சம் டெபாசிட் தொகை ஆகும். மேலும் கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். கூடுதல் நேரமானது 15 நிமிடங்கள் என்ற அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கேற்றாற்போல் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

படப்பிடிப்புக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

சினிமா படப்பிடிப்புக்கு தனியாக மெட்ரோ ரெயில் வழங்கப்படமாட்டாது.

படப்பிடிப்பின்போது குறைந்த அளவு ஆட்களே உடன் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், படப்பிடிப்பு உபகரணங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரெயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதற்கு என்று தனி கட்டணம் கிடையாது.

படப்பிடிப்பின்போது, மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அதற்கு படப்பிடிப்பு குழுவினரே பொறுப்பாவார்கள். அதற்கான கட்டணம் டெபாசிட் தொகையில் இருந்து கழிக்கப்படும்.

சினிமா படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதை 7 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் டெபாசிட் தொகையில் இருந்து 75 சதவீதமும், 5 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் 50 சதவீதமும், 3 நாட்களுக்கு முன்பு தெரிவித்தால் 25 சதவீதமும் திரும்ப தரப்படும். அதற்கும் குறைவான நாட்களில் தகவல் தெரிவித்தால் டெபாசிட் தொகை எதுவும் திரும்ப தரப்படமாட்டாது.

சினிமா படப்பிடிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், துணை பொது மேலாளர், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் தலைமை அலுவலகம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, சென்னை – 107 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இதற்கான விண்ணப்பம் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.