“மருது’ படத்தின் திருட்டு டிவிடி வெளியானால் நடப்பதே வேறு…” – நடிகர் விஷால் எச்சரிக்கை..!

“மருது’ படத்தின் திருட்டு டிவிடி வெளியானால் நடப்பதே வேறு…” – நடிகர் விஷால் எச்சரிக்கை..!

‘குட்டிப் புலி’, ‘கொம்பன்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநரான முத்தையா இயக்கியிருக்கும் அடுத்த படம் 'மருது'.

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக ஸ்ரீதிவ்யாவும் நடித்துள்ளனர். மேலும், சூரி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய.. கே.எல்.பிரவீன் படத் தொகுப்பு செய்திருக்கிறார். வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் இன்று மாலை நடைபெற்றது.

IMG_2200

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதிவ்யா பேசும்போது, “இந்த ‘மருது' படத்தில் நடிக்கும்போதே எனக்குத் தெரிந்தது இது நிச்சமாக வெற்றிப் படமாக அமையும் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை இதில் இருக்கிறது. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான் 'மெர்சலாயிட்டேன்.'  படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயமாக இதுவொரு வெற்றிப் படமாக அமையும்..” என்றார்.

k.l.praveen

எடிட்டர் பிரவீன் K.L. பேசும்போது, “நடிகர் விஷாலின் உடலமைப்பு, படத்தின் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. சண்டைக் காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.  படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிச்சயமாக நம் மனதில் பதியும்படியாக இருக்கும். நகைச்சுவை நடிகர் சூரி நம்மை கண்கலங்க வைப்பார். ஒரு டெரிஃபிக்கான வில்லனாக R.K.சுரேஷ் அருமையாக நடித்திருக்கிறார். இந்தப் படம் அனைவருக்கும் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அமையும்..” என்றார்.

IMG_1950

படத்தின் இயக்குநர் முத்தையா பேசுகையில் “இந்த 'மருது' மண் மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் 'மருது'. எனக்கு சென்டிமெண்ட் படங்களைத்தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும், அதிலும் சென்டிமெண்ட் இருக்கும்.

'மருது' கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச் சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருந்தது. 

நடிகர் சூரி, இப்படத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்.  ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் மற்றும் படத்தில் என்னோடு பணியாற்றிய அனைவரும் சிறப்பாக ஒத்துழைத்தார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

IMG_1931

நடிகர் விஷால் பேசுகையில் “இந்தப் படம் தமிழில் ‘மருது’ என்ற  பெயரிலும், தெலுங்கில் ‘ராயுடு’ என்ற பெயரிலும் வரும் மே 20-ம் தேதி வெளியாகிறது.

நான் நடித்த ‘சண்டைக் கோழி’ படத்தை இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். அதேபோல இந்த  'மருது' படம் என்னை நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்துள்ளார். அவருக்கும், தயாரிப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

'அவன் இவன்' படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் இது. ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப் படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள R.K.சுரேஷ் வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தன்னுடைய வேலையினை இந்தப் படத்தில் சிறப்பாக செய்துள்ளார். என்னையும், மற்றவர்களையும் அழகாகக் காட்டியுள்ளார். படத்திலேயே வெள்ளையா இருந்தது ஸ்ரீதிவ்யா மட்டும்தான். அவருக்கு மட்டும்தான் எந்த கரெக்ஷனும் சொல்லாமல் நிற்க வைத்து ஷூட் செய்தார். நான் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம், அவர் அருமையாக நடித்துள்ளார்.

இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தினை  கண்டிப்பாக எங்களது பட நிறுவனம்தான் தயாரிக்கும். அது யார் நடிப்பதாக இருந்தாலும் கவலையில்லை. நான்தான் தயாரிப்பேன். இதில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனக்கு முத்தையா மீதிருக்கும் நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

இன்னொரு விஷயம்.. திருட்டு வி.சி.டி.யை தடுக்க நான் ஒருவன்தான் இன்றுவரை இந்தத் திரையுலகத்தில் தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்காகவும்தான் நான் பேசுகிறேன்.

24 படம் ரிலீஸானவுடனேயே திருட்டு டிவிடி வந்துவிட்டது. அது வெளிநாட்டில் தயாரானது இல்லை. இங்கேயே ஒரு சினிமா தியேட்டரில் படம் எடுத்திருக்கிறார்கள். அது எந்தத் தியேட்டர் என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் எந்த ஆக்சனும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை. அவர்களே முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

ஆனால் நான் விடப் போவதில்லை. வரும் மே 20-ம் தேதி மருது வெளியாகிறது. கண்டிப்பாக இதற்கு திருட்டு வி.சி.டி. வெளியிடுவார்கள். நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன்.

அப்படி எனது மருது படத்தின் திருட்டு வி.சி.டி.களை நான் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் அதைச் செய்யாவிடில் அடுத்து என்ன செய்வது என்பது உங்களை அழைத்து சொல்கிறேன்..” என்றார்.

அவர் பேசிய பின்னர், பத்திரிக்கையாளர்களது கேள்விக்குப் பதிலளிக்கையில், “தனியொரு ஆளாக நீங்கள் மட்டும் திருட்டு டிவிடியைத் தடுக்கப் போகிறேன் என்கிறீர்கள், அரசாங்கம் கடுமையான சட்டமியற்றி இதனைத் தடுக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா..?” என்ற கேள்விக்கு, “அரசாங்கத்தின் சட்டம் நமக்கு உறுதுணையாகத்தான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்கள்தான் முன் வர வேண்டும். அனைவரும் ஒரு குழுவாக இணைந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்..” என்றார் விஷால்.

உங்களுக்குத் தெரியுது.. மத்தவங்களுக்குத் தெரியலையே ஸார்..?!