இயக்குநர் சரண் இயக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படம்..!

இயக்குநர் சரண் இயக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படம்..!

தமிழ் சினிமாவின் வணிக சினிமாக்களில் பாராட்டப்பட்ட, ஒரு முக்கியமான இயக்குநர் சரண். பெரிய நடிகர்களுடனும் பணி புரிந்த அவரது திரைப்படங்கள் எப்போதும் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியவையாக இருந்தது.

இயக்குநர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார். இதில் ‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ் மற்றும் தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் நாசர், ராதிகா சரத்குமார், சாம்ஸ், ஆதித்யா, யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாகர் மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

சைமன் கே.கிங் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சரணின் இளைய சகோதரர் கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சரணின் படங்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த முறை அவர் இதுவரை செய்யாத புது முயற்சி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சரண் பேசும்போது “கமல் சார் நடித்து நான் இயக்கிய ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் தலைப்புக்கும், இந்த தலைப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அந்தப் படத்துக்கு முதலில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ என்றுதான் பெயரிடப்பட்டது, ஆனால், பின்னர் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ என்று மாற்றினோம்.

படத்தின் கதை சென்னையின் பெரம்பூர் பகுதி பின்னணியில் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் ஒரு ரயில்வே ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு உள்ளூர் தாதா. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம் உள்ள ஒருவரை தேடினேன். ஆரவ் என் மனதில் முதல் தேர்வாக தோன்றினார். காவ்யா தாப்பர் தெலுங்கில் இருந்து வந்தவர். நான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் 18-வது நாயகியாக அவர் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த ‘மார்க்கெட் ராஜா M.B.B.S.’ படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற்றும் காமெடியும் இருக்கும்…” என்றார்.
error: Content is protected !!