மனுசங்கடா – சினிமா விமர்சனம்

மனுசங்கடா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஏ.கே.பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாரா தயாரித்துள்ளார். 

படத்தில் ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – தாரா, கண.நட்குணன், ஒளிப்பதிவு – பி.எஸ்.தரண், இசை – அரவிந்த், சங்கர். பாடல்கள் – இன்குலாப். படத் தொகுப்பு – தனசேகர், எழுத்து, இயக்கம் – அம்ஷன் குமார். இத்திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான அம்ஷன் குமார் எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் சர்வதேச அளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்று வந்திருக்கிறது.

இப்போதுதான் சாதியத்தீன் அட்டூழியத்தைப் பற்றிப் பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைவு ஓய்வதற்குள்ளாக அடுத்த சாதிய அட்டூழியத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்திருக்கிறது இந்த ‘மனுசங்கடா’ திரைப்படம்.

கடந்தாண்டு சிதம்பரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர், தமிழர் இறந்து போனார். அவரது உடலை ஊருக்கே பொதுவான பாதையில் கொண்டு செல்ல அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மறுத்தார்கள்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் எழுந்தன. நியாயத்தை வழங்க வேண்டிய காவல்துறையோ ஆதிக்க சாதியினருக்கு சாமரசம் வீசியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது கொடுங்கோன்மையைக் காட்டியும் அவர்களை ஒடுக்கியது.

நீதிமன்றத்தில் முறையிட்டனர் பாதிக்கப்பட்ட தரப்பினர். பொதுப் பாதையில்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை இதற்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று தீர்ப்பாகியது. ஆனாலும் கடமை தவறாத காவல்துறையினர் கடைசி நிமிடத்தில் பாதுகாப்பு அளிக்க மறுத்து பிணத்தையே கைப்பற்றி தாங்களே சுடுகாட்டுக்கு மாற்றுப் பாதையில் கொண்டு சென்று புதைத்தார்கள்.

அவர்கள் அன்றைக்கு புதைத்தது அந்த தாழ்த்தப்பட்ட இந்தியனையோ.. அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு தமிழனையோ அல்ல.. இந்திய இறையாண்மையை.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை.. ஜனநாயகத்தை.. நீதிமன்றத்தை.. எல்லாவற்றையும்தான்..!

இதைக்கூட கேள்வி கேட்க முடியாமல்தான் அந்த தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அம்ஷன்குமார்.

20-க்கும் மேற்பட்ட டாக்குமெண்ட்ரிகளையும், பல குறும்படங்களையும் எடுத்த அனுபவம் உள்ளவர். ‘ஒருத்தி’ என்ற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றவர் இவர். இவரது ‘கிடை’ என்கிற திரைப்படம்கூட விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை பூர்விமாகக் கொண்டவர் கோலப்பன். சென்னையில் ஒரு ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் அதிகாலையில் அவருக்கு போன் வருகிறது.. அவருடைய தந்தை திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டாரென்று..!

அறை நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவசரமாக ஊருக்கு வருகிறார் கோலப்பன். தந்தையின் மரண சோகத்தைவிடவும் தந்தையின் சடலத்தை எப்படி அடக்கம் செய்யப் போகிறோம் என்பது தெரியாத சோகம்தான் அவரை மிகவும் தாக்குகிறது.

அவர்களது இனத்தினருக்கு ஆதரவாக இருக்கும் அண்ணன் என்றழைக்கும் சசிகுமாரை அணுகுகிறார்கள். அவரது ஆலோசனையின்படி காவல்துறையினருக்கும், ஆர்.டி.ஓ.,வுக்கும் தகவல் கொடுக்கிறார்கள். அவர்களும் வந்து பார்த்துவிட்டு பொதுப் பாதையில் போனால் ஏதாவது கலவரம் வரும்.. மாற்றுப் பாதையிலேயே போகலாமே என்று அட்வைஸ் செய்கிறார்கள்.

இதைத்தான் காலம் காலமாக இவர்கள் சொல்லி வருகிறார்கள் என்று கோபப்படும் கோலப்பனும், அவரது நண்பர்களும் இந்த முறை பொதுப்பாதையில்தான் கொண்டு செல்வோம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

பிணத்தை அப்படியே விட்டுவிட்டு சென்னைக்கு அண்ணனுடன் பயணிக்கிறார் கோலப்பன். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கினை அவசர வழக்காகத் தாக்கல் செய்கிறார் இவர்களது வக்கீல். நீதிமன்றத்தில் உடனடி விசாரணை நடைபெற்று கோலப்பனின் தந்தையின் சடலத்தை பொதுப்பாதையில்தான் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு காவல்துறை ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார் நீதிபதி.

இந்தத் தீர்ப்புடன் ஊர் திரும்புகிறார் கோலப்பன். இதையறியும் ஆதிக்க சாதியினர் இவர்கள் மீது கோபப்படுகிறார்கள். காவல்துறையினர் இப்போதும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இறுதியில் இந்த போராட்டத்தில் யார் வென்றது..? கோலப்பனின் தந்தை மரியாதையுடன் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

‘ஒரு மனிதனுக்கு அவனது உரிமையை மறுப்பதென்பது மனித நேயத்துக்கு எதிரானது’ என்ற தென்னாப்பிரிக்காவின் காந்தியான நெல்சன் மண்டேலா சொல்லிய பிரசித்தி பெற்ற வாசகத்தோடுதான் இத்திரைப்படம் தொடங்குகிறது.

முதல் காட்சியிலே இத்திரைப்படம் வழமையான வணிகச் சினிமாவோ, திரையரங்கு ரசிகர்களால் துதிக்கப்படும் நோக்கில் எடுக்கப்பட சினிமாவோ அல்ல என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஆவணப் படம், குறும் படம் என்று பல திசைகளில் பயணித்திருக்கும் இயக்குநர் அம்ஷன்குமார் சராசரியான திரைப்படம் போல் இல்லாமல் அவருடைய வழக்கப்படியே இயக்கியிருக்கிறார். அப்படியே நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கிறார். இதுதான் படத்தில் கொஞ்சம் குறையாகச் சொல்லப்பட வேண்டியிருக்கிறது.

சில காட்சிகளில் நடிகர்கள் அனைவருமே நாடகத்தன்மையோடு பேசியிருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் மணிமேகலை மட்டுமே அவரது கணவரின் உடலைப் பார்த்து கதறியழும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். மிக எளிமையான அந்த இரங்கற்பா பாடலும் கேட்க சோகத்தை ஊட்டுகிறது.  

கோலப்பனாக நடித்திருக்கும் புதுமுகம் ராஜீவ் ஆனந்தனுக்கு இது முதல் படம் என்பதால் குற்றம், குறை கண்டறிய வேண்டாம். இயக்கமே சற்று பின் தங்கியிருப்பதால் அவரைக் குற்றம் சொல்லி புண்ணியமில்லை.

ஆனால் ஒரு காட்சியில் மனம் வெறுத்துப் போய் ஆதிக்கச் சாதியினர் இருக்கும் தெருவில் போய் நின்று கொண்டு ‘உங்க வீட்ட நாங்கதானடா கட்டுனோம்; உங்க பீய நாங்கதானேடா அள்ளுனோம்.. உங்க வீட்டுச் சாவுக்கும் நாங்கதானடா ஆடுறோம்..’ என கத்தித் தீர்க்கும்போது ஒட்டு மொத்த அனுதாபத்தையும் பெற்று விடுகிறார். அதேபோல் பறையிசைக்கு அவர் ஆடும் பேயாட்டமும் ஒரு பூஸ்ட்டு..!

கோலப்பனின் தோழி ரேவதி கேரக்டரில் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். இவர் மட்டுமே வசன உச்சரிப்பில் மிகச் சரியானதை செய்திருக்கிறார். அண்ணனாக நடித்திருக்கும் சசிகுமாரின் சில ஆக்சன்கள்.. காருக்குள் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை பாடிக் கொண்டே வருவது போன்று சிற்சில காட்சிகளும், சில கேரக்டர்களும் மட்டுமே இழுவையில்லாமல் நடித்திருக்கிறார்கள். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.தரணின் கேமிரா சின்ன பட்ஜெட்டுக்கே உரித்தான வகையில் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறது. கேமிராவின் கோணங்களை இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கியிருந்தால் ரசிக்கும்படியிருந்திருக்கும்.  

காவல்துறையினர் பிணத்தைக் கைப்பற்ற வருவதையறிந்து அவசரம், அவசரமாக வீட்டுக்குள் கொண்டு சென்று வைத்துவிட்டு கதவடைக்கும் அந்த ஒரு காட்சியில் மிகவும் பரபரப்பாகச் செயல்பட்டு படமாக்கியிருக்கிறார்கள். அந்தப் பரபரப்பில் ஒரு தீ பற்றிக் கொள்கிறது. இதன் பிறகிலிருந்து கடைசிவரையிலும் படம் சாதீய தீயைவிடவும் அதிகமாகவே சுடுகிறது.

காவல்துறையினரை வைத்து மக்களை அடித்து இழுத்து வேனில் திணித்து கொண்டு செல்லும் காட்சியில் கேமிராமேன் மிகவும் படாதபாடுபட்டு ஷூட் செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த ஒரு காட்சியின் பிரம்மாண்டத்துக்கு இயக்குநரும் நிரம்பவே கஷ்டப்பட்டிருப்பார் போல..! பாராட்டுக்கள்..!

அரவிந்த் சங்கரின் இசையில் ‘மனுசங்கடா’ பாடலே இந்தப் படத்தின் மொத்தக் கதையையும் சொல்லி விடுகிறது. இடையிடையே டாக்குமெண்ட்டரி வாடை அடிப்பதுதான் படத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய குறை.

தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு ஊரில் நடக்கும் விஷயம்தான் இது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எப்போதும் ஆதிக்கச் சாதியினராகவே இருப்பதால் அந்த அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றுவரையிலும் ஒரு விடிவும் கிடைக்கவில்லை.

பிணத்தையும் கைப்பற்றி, அவர்களே வந்து புதைத்துவிட்டு போன கையோடு, அதிலும் ஒரு குரூர மனப்பான்மையோடு மூன்று இடங்களில் குழியைத் தோண்டி வைத்துவிட்டு எந்த இடத்தில் பிணம் இருக்கிறது என்று தோண்டிப் பார்த்துக் கொள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போயிருக்கும் அந்தக் கொடுமையைக் காட்டுமிடம்தான் படத்தின் ஹைலைட்.

நாமெல்லாம் இந்தியா என்னும் சுதந்திர நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது இத்திரைப்படம். இந்த உணர்வை வரும்கால இந்தியர்களிடத்தில் தெரியப்படுத்த இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அவசியம்தான். அந்த வகையில் சாதீய எதிர்ப்பு திரைப்படங்களில் இந்த ‘மனுசங்கடா’ திரைப்படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

கூகிளின் மூலம் எங்கேயோ இருந்து கொண்டு சிற்றூருக்கெல்லாம் வழி காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் சாதிக்கு ஒரு ரோடு, சாதிக்கு ஒரு பள்ளிக்கூடம் என்று இந்தியாவில் காட்டும் இந்த சாதிப் பித்து என்னும் நோய் எப்போதுதான் ஒழியும் என்று தெரியவில்லை.

சாதீய தீயை அடையாளம் காட்ட வந்திருக்கும் இந்த ‘மனுசங்கடா’ படத்திற்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டியது ஒவ்வொரு இந்தியன், தமிழர்களின் கடமை. அவசியம் பாருங்கள்..!