ஜான்சி ராணி லட்சுமி பாயாக கங்கனா ரனாவத் நடிக்கும் ‘மணிகர்னிகா’ திரைப்படம்  

ஜான்சி ராணி லட்சுமி பாயாக கங்கனா ரனாவத் நடிக்கும் ‘மணிகர்னிகா’ திரைப்படம்  

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கமல் ஜெயின் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மணிகர்னிகா – ஜான்சியின் ராணி’.

ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

மேலும் அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா நேற்று மாலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

img (31)

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் பேசும்போது, “ஜான்சியின் ராணியான லட்சுமிபாயின் வீர தீரக் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை.

2017-ல் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமான தேர்வு.

ராணி லட்சுமி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம். மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப் பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன…” என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

konkana ranavath

படத்தின் நாயகியான கங்கணா ரணவத் பேசும்போது, “தேச பக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம் இது. 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் எனக்குள் இருந்தது.

ராணி லட்சுமி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது,

இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் படம் துவங்கியபோது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும்போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப் பயிற்சியாளர்கூட சொன்னார். தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது.

ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன் பிறகுதான் நான் படத்தை இயக்கினேன். டிராமா காட்சிகளைத்தான் நான் இயக்கினேன். காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கும், அதற்கு தயாராவதும்தான் சவாலாக இருந்தது.

இந்தப் படத்திற்காக நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்…” என்றார்.

 




error: Content is protected !!