full screen background image

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தின் பெயர் மாற்றம் – வழக்கு கைவிடப்பட்டது..!

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தின் பெயர் மாற்றம் – வழக்கு கைவிடப்பட்டது..!

‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை எந்தவிதத்திலும் எங்களது படத்தில் பயன்படுத்த மாட்டோம்’ என்று மும்பை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ரஜினி ஆட்சேபித்த இந்தி படத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த வர்ஷா புரொடக்சன் நிறுவனம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (நான்தான் ரஜினிகாந்த்) என்ற பெயரில் ஒரு இந்தி திரைபடத்தை சென்ற வருடம் தயாரித்தது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் தோற்றத்தை பிரதிபலிக்கும்விதமான கதாபாத்திரத்திலும், அவரைபோல் வசனம் பேசுதல், ஸ்டைல் உள்ளிட்டவைகளை கொண்டு படத்தின் கதாநாயகன் நடித்துள்ளார். மேலும், அந்த கதாபாத்திரம் பெண் பித்தர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன் பெயர், ஸ்டைல், தோற்றம் உள்ளிட்டவைகளை கொண்டு உருவாகியுள்ள ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படம் வெளியானால் சமூகத்தில் தனக்கிருக்கும் நல்ல பெயர் கெடும் என்றும், இது தனது பெருமையைக் குலைக்கும் செயல் என்று சொல்லி அந்தப் படத்திற்கு தடை கேட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து சென்ற மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி வர்ஷா புரோடக்ஷன் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டார்கள். முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “ரஜினிகாந்தின் பெயர், தோற்றம், ஸ்டைல், வசனம் உச்சரிப்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தமாட்டோம் என்றும் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தின் தலைப்பை ‘மே ஹூன் பாட் டைம் கில்லர்’ (நான் பகுதி நேர கொலைகாரன்) என்று மாற்றிவிட்டோம் என்றும் வர்ஷா புரோடக்ஷன் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தலைப்பை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை 10 நாட்களுக்குள் வர்ஷா புரொடக்சன் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக திரைப்படத் தணிக்கை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பிடம் முறையாக விண்ணப்பித்து, தலைப்பை மாற்ற வேண்டும். மேலும், ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி இடம் பெற்றுள்ள காட்சிகளையும் நீக்கிவிட வேண்டும். இவற்றை எல்லாம் இரு தரப்பு வக்கீல்களும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இந்த படம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் பைசல் செய்யப்படுகிறது..” என்று தீர்ப்பளித்தனர்.

Our Score