‘தர்மதுரை’ படக் குழுவினருக்கு மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் குருசங்கரின் பாராட்டு..!

‘தர்மதுரை’ படக் குழுவினருக்கு மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் குருசங்கரின் பாராட்டு..!

மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் தஞ்சை, மீனாட்சி மருத்துவமனையின் தலைவரான டாக்டர். எஸ். குருசங்கர், விஜய்சேதுபதி நடித்து இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தர்மதுரை’ திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

dharmadurai-poster-7

டாக்டர். குருசங்கர் ‘தர்மதுரை’ படத்தைப் பாராட்டி பேசும்போது, “மருத்துவர்களின் உயர் நோக்கங்களையும், மருத்துவத் துறையின் உண்மைகளையும் இத்திரைப்படம் எடுத்துக் காட்டியுள்ளது. மட்டுமல்லாமல் கிராமங்களில் மருத்துவர்களின் தேவைகளையும், எடுத்துக்கூறும் விதமாக அமைந்துள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமியின் ஒவ்வொரு படைப்பும் உயர்நெறிகளை கொண்டதாகவே உள்ளது. அதுபோல் இந்த ‘தர்மதுரை’ திரைப்படம் மூலமாக ஒரு ஆசிரியர் எப்படி தனது மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதையும், மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதைவிட, இந்தியாவில் பணிபுரிய வேண்டிய முக்கியத்துவத்தையும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

dharmadurai-gurusankar-greetings-shield

கிராமங்களிலும், கிராமம் சார்ந்த பகுதிகளிலும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் மதிப்பு, மரியாதையை எடுத்துக்கூறி கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மருத்துவர்கள் இங்கே வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக பதிந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

மருத்துவர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை தவிர்த்து பகையாளியாக இருந்தாலும்கூட, அவருக்கும் மருத்துவம் பார்த்து உயிரை காப்பாற்றக் கூடிய உயர்ந்த பணி மருத்துவப் பணி என்பதையும் மிக தெளிவாக உணர்த்தியுள்ளார் இயக்குநர்.

இத்திரைப்படம் என் போன்ற மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியையும், திரைத்துறை மேல் நம்பிக்கையையும் வளர செய்துள்ளது. இந்த சிறப்பான முயற்சிக்கு நான் சார்ந்துள்ள மருத்துவத் துறை சார்பாக ‘தர்மதுரை’ படக் குழுவினருக்கு எனது ஆதரவையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அனைத்து மருத்துவர்களும், மருத்துவத் துறை மாணவர்களும் மற்றும் செவிலியர்களும் இத்திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்…” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

படத்தினை பாராட்டியது மட்டுமில்லாமல் தர்மதுரை திரைப்படத்தின் 1000 டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி தன் மீனாட்சி மருத்துவனையில்  பணிபுரியும் டாக்டர், நர்ஸ்கள், ஏனைய ஊழியர்களுக்கு அன்பளிப்பாக தந்து படம் பார்க்க விடுமுறையும் தந்திருக்கிறார் மீனாட்சி மிஷன் தலைவர் டாக்டர் குருசங்கர்.

இவரல்லவோ உண்மையான சினிமா ரசிகர்..!




error: Content is protected !!