‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!

‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!

சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்றுக் கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைப் பார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக் கொள்ளக் கூடாது என திடீரென பட்டம் போட்டுக் கொண்டவர்களையும் பார்த்துவிட்டோம்..

ஆனால் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார்தான் என நினைத்துக் கொண்டு உள்ளே வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர் ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.

இவர் தயாரித்து நடிக்கும் படம்தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரைவிட தயாரான ஒருவனின் கதைதான் இந்தப் படம். அந்தக் கேரக்டரில்தான் கதாநாயகனான சாம்பார் ராசன் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் இரண்டு  நாயகிகள்.. அதில் ‘கோலிசோடா’ சீதா ஒருவர். இன்னொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார்.  முழுக்க, முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து  இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் ‘நம்ம நாட்டுல மாடுகள் நன்றாக இருந்தால் விவசாயமும் நன்றாகவே இருக்கும்..’ என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.  

இந்தப்படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கோடம்பாக்கமே பரபரப்பானது.

இது பற்றிப் பேசிய சாம்பார் ராசன், “நான் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை. தமிழ் சினிமாவில் உலக நாயகன்  கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே..!  கோவணம்தான் தமிழனின் பாரம்பரிய உடை.. அதை அணிவதில் என்ன கூச்சமும், வெட்கமும்..?” என்று திருப்பிக் கேட்கிறார்.

“சரி.. அது என்ன சாம்பார் ராசன்..?” என்று கேட்டால், “தமிழகத்தில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் தவறாமல் இடம் பெறும் இல்லையா.. அந்த மாதிரி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பதற்காக எனது பெயரையே ‘சாம்பார் ராசன் ‘என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிவு செய்துவிட்டேன்..” என ஆச்சர்யப்படுத்துகிறார் சாம்பார் ராசன்.

“என்னை மாதிரி வேறு யாராலும் படம் எடுக்க முடியாது..” என்று அடித்து சொல்கிற சாம்பார் ராசன், “வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன்..” என்கிறார். “நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்..” என்பதிலும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்.

“உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை…?” என்றவுடன்.. “எனக்கு  யார் கூடவும் நடிக்க ஆசை இல்லை, வருங்காலத்தில் என்கூட எல்லா ஹீரோயின்களும் நடிக்க ஆசைப்படுவாங்க…” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

சிரிப்புக்காக சொல்கிறாரா இல்லை… சீரியஸாக சொல்கிறாரா என அவரிடம் கேட்டால் “மக்கள் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கணும்.. அதுதான் என் லட்சியம்..” என்கிறார்.

கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். மாட்டை பற்றிய படத்தில் ஜல்லிக்கட்டு இல்லாமலா..?

“படத்தில் ஜல்லிக்கட்டையும் வச்சிருக்கேன். படங்களில் பாட்டு பாடி மாட்டை அடக்கறது அந்த காலம்.. நான் இந்த படத்தில் மாட்டு விஞ்ஞானி என்பதால் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்..” என இன்னொரு குண்டை தூக்கிப் போடுகிறார்.

ஆக, நிறைய அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் ரசிகர்களுக்கு தர தயாராகி வருகிறார் இந்த ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.. விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.