சிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…!

சிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…!

‘வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘மாநாடு’ திரைப்படம் சில, பல தடங்கல்களுக்குப் பிறகு இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வந்ததில் இருந்தே தனி கவனத்தை ஈர்த்திருந்தது. சிம்புவுக்கு பொருத்தமான பல விவகாரங்கள் இந்தப் படத்தில் அடுத்தடுத்து நடந்து தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தன.

இப்போது கடைசியாக இந்தப் படத்தில் சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிக்கவிருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். மற்றும் பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.

இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், தயாரிப்பு வடிவமைப்பாளர் – ராஜீவன், படத் தொகுப்பு – பிரவீன் கே.எல். சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – சேகர், ஆடை வடிவமைப்பாளர் – வாசுகி பாஸ்கர், டிசைனர் – டியூனி ஜான், மக்கள் தொடர்பு – ஜான், எழுத்து, இயக்கம் – வெங்கட் பிரபு.

‘மாநாடு’ படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, “இந்தப் படத்தில் சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இன்னும் முக்கியமான ஒரு நடிகரும் படத்தில் இணைய உள்ளார். விரைவில் அவர் பற்றிய தகவல் வெளியிடப்படும்.

இந்தப் படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயரை ரசிகர்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். நாங்கள் கதையோடு சரியாகப் பொருந்திப் போகும் பெயரை தேர்வு செய்வோம். அந்தப் பெயரை தேர்வு செய்து அனுப்புபவர் ஒரு நாள் முழுக்க ‘மாநாடு’ படப்பிடிப்புத் தளத்தில் எங்களோடு இருக்கலாம்..” என்றார்.
error: Content is protected !!