ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம் 

ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம் 

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’, தற்போது ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளது.

விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில், ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

முழுக்க, முழுக்க அரசியல் கதைக் களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப் படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் “படம் அவ்வளவுதான்; டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது..” என்றெல்லாம் திரையுலகத்தில் சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் இந்த இடைப்பட்டக் காலத்தில் படப்பிடிப்பை துவக்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும்விதமாக, வரும் ஜூன்-25-ம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் ‘மாநாடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் அங்கே படமாக்கப்பட உள்ளன.




error: Content is protected !!