தமிழுக்கு வரும் கன்னட லூசியா..!

தமிழுக்கு வரும் கன்னட லூசியா..!

‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது ராம் இயக்கத்தில் விஷ்ணு, நந்திதா நடிக்கும் ‘முண்டாசுபட்டி’ படத்தைத் தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அனுமோகனின் மகனும், இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளருமான அருண் மோகன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சலோனி நடிக்கும் ‘சரபம்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்த இரண்டு படங்களைத் தவிர, கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’லூசியா’ படத்தை சித்தார்த், தீபா சன்னிதி, நரேன் மற்றும் பலர் நடிக்க தமிழில் தயாரிக்கிறார்கள்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் ‘பீட்சா’ படத்தில் இணை இயக்குனராகப் பணிபுரிந்த பிரசாத் ராமர், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்படுகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய சி.வி. குமார் வழங்கும் திருக்குமரன் என்டர்டெய்னமென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.

சென்ற ஆண்டு கன்னடத்தில் வெளியான இந்த ‘லூசியா’ திரைப்படம் மிகக் குறைந்த செலவில் 75 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு 3 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்ற படம்.. சைக்காலஜிக்கல் திரில்லரான இப்படம் நான் லீனியர் என்று சொல்லப்படும் வரிசையில் இடம் பெற்ற திரைவடிவமாகும்.. இதன் வெற்றி கன்னட படவுலகில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது..

இதன் தமிழ் வடிவமும் நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை..!




error: Content is protected !!