“கைதி’ படம் ‘டை ஹார்ட்’ படத்தின் இன்ஸ்பிரேஷன்தான்” – இயக்குநர் லோகேஷ்  கனகராஜ் பேச்சு..!

“கைதி’ படம் ‘டை ஹார்ட்’ படத்தின் இன்ஸ்பிரேஷன்தான்” – இயக்குநர் லோகேஷ்  கனகராஜ் பேச்சு..!

‘மாநகரம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நரேனின் நடிப்பில் இவர் இயக்கியிருக்கும் ‘கைதி’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமையே வெளியாகவுள்ளது.

இந்தக் ‘கைதி’ படத்தையடுத்து லோகேஷ் தமிழகமே எதிர்பார்க்கும் நடிகர் விஜய்யின் 64-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் ‘கைதி’ திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி இன்று அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, "நான் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான். ‘கைதி’ படம் முடியும்போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை உடனேயே சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன்..." என்றார்.

மேலும், அவரிடத்தில் கேள்வி-பதில் சீஸன் நடந்தது.

இந்தப் படத்தில் ஏன் ஹீரோயின் இல்லை..?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடமும் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.

kaithi-movie-release-poster-1

உங்களின் இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின் மீது அப்படி என்ன காதல்..?

இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி  செய்யவில்லை. ‘மாநகரம்’ எடுத்த பின்னர் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக் கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

கார்த்தி இந்தப் படத்தில் என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தில் வருகிறார்..?

படத்தில் கார்த்தியை மையப்படுத்திதான் கதையே. ஹிரோயின் இல்லை எனும்போது அவரைச் சுற்றித்தான் எல்லாமும் நடக்கும்.  இந்தப் படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல  இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக் கொண்டதால்தான் இந்தப் படமே  உருவானது.

இந்தக் கதையை சொன்னவுடனே கார்த்தி ஒத்துக் கொண்டார் அவர் ஹிரோயின் ஏன் இல்லை... காமெடி இல்லையே என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது.

இந்தப் படத்தின் பாதிப்பு எங்கிருந்து உருவானது..?

இந்தப் படம் ஹாலிவுட்டில் வந்த ‘டை ஹார்ட்’ படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.

படத்தில் பெண் கதாப்பாத்திரங்களே இல்லையா ?

பெண் கதாப்பாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப் படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.

இரவில் ஷீட் செய்தது எப்படி இருந்தது ?

இரவில் படப்பிடிப்பு நடத்துவது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம். இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம்தான். நல்ல டீம் அமைந்தது. அதனால் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

விஜய் ‘கைதி’ பார்த்து விட்டாரா ?

‘கைதி’ படத்தை விஜய் ஸார் இன்னும் பார்க்கவில்லை. இப்பொழுதுதான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.

தீபாவளிக்கு ‘பிகில்’ படமும் வருகிறதே... எது ஜெயிக்க விருப்பம்..?

இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.