குற்றமே தண்டனை – சினிமா விமர்சனம்

குற்றமே தண்டனை – சினிமா விமர்சனம்

‘காக்கா முட்டை’ என்னும் அற்புதமான படத்தினை தந்த இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படைப்பு என்பதால் இயல்பாகவே ஒரு ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

பிறவியில் இருந்தே ஒருவித கண் குறைபாட்டுடன் வாழ்ந்து வருபவர் ஹீரோ விதார்த். அவருடைய கண் பார்வை ஒரு குமிழ் பார்வை போன்றது. ‘டன்னல் வியூ(Tunnel View)’ என்பார்கள் கண் மருத்துவர்கள். விதார்த் எதிரில் யாரை, எதை பார்க்கிறாரோ அவர்களது, அதன் மிக குறுகிய முகமோ, உடலோ ஒரு வட்ட வடிவத்தில் சிறிதாகத் தெரியும்.

இதுநாள் வரையில் எப்படியோ தாக்குப் பிடித்தவர், இப்போது டூவீலரில் டிரைவிங் செய்து கொண்டு கிரெடிட் கார்டு பணம் வசூலிக்கும் வேலையில் இருக்கும்போது இந்தக் கண் பிரச்சினையால் மிகப் பெரிய தொல்லைக்கு உள்ளாகிறார்.

மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போது “இதற்கு மாற்று கண் சிகிச்சைதான் ஒரே வழி. அதற்கு ஒன்றரை லட்சம் வரையில் செலவாகும்..” என்கிறார் மருத்துவர். இதற்கு என்னடா செய்யலாம் என்று விதார்த் யோசித்திருக்கும்போது அவர் குடியிருக்கும் வீட்டின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையாகிக் கிடப்பதை பார்க்க நேரிடுகிறது.

அந்தக் கொலை நடக்கும்போது அந்த வீட்டில் இருந்த ரகுமான் தான் அந்தக் கொலையை செய்யவே இல்லை என்று சாதிக்கிறார். இதை வெளியில் சொல்லாமல் இருந்தால் விதார்த்துக்கு தான் பணம் தருவதாகச் சொல்கிறார். தற்போதைக்கு தனது கண் அறுவை சிகிச்சைதான் பெரிய விஷயமாக தெரிவதால், விதார்த்தும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

போலீஸ் விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் ரகுமானை நேரில் சந்தித்து பணத்தை வாங்குகிறார் விதார்த். மருத்துவமனையில் அந்தப் பணத்தைக் கட்டிய பின்பு “யாராவது இறந்த பின்புதான் கண்கள் கிடைக்கும். அது கிடைக்க 3 அல்லது 4 வருடங்களாகும்…” என்கிறார்கள்.

இந்தச் செய்தி முன்னரே தெரியாததால் விதார்த் கோபப்படுகிறார். ஆத்திரப்படுகிறார். காச்மூச்சென்று கத்துகிறார். இன்னும் ஒரு 5 லட்சம் இருந்தால் 336-வது நபராக இருக்கும் அவரது பெயரை முதலிடத்திற்கு கொண்டு வந்து உடனுக்குடன் ஆபரேஷன் செய்துவிடலாம் என்று ஆசை காட்டுகிறார்கள் மருத்துவமனையில்.

இதனால் மீண்டும் ரகுமானிடம் கேட்கிறார். அவர் தர மறுக்க.. கோபத்தில் அவரை போலீஸில் மாட்டிவிட நினைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார் விதார்த். அங்கே அந்தக் கொலை நடந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து வெளியே வந்த இளைஞனை காண்கிறார். “இவன்தான் அந்த நேரத்தில் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தான்..” என்கிறார் விதார்த். கேஸ் இப்போது அந்த இளைஞன் பக்கம் திரும்புகிறது.

அந்த இளைஞன் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து வெளியே வந்ததை பார்த்த ஒரே சாட்சி விதார்த்துதான் என்பதால் விதார்த்தை மடக்க நினைக்கிறது அந்த இளைஞனின் வழக்கறிஞர் டீம். ஆனால் “வெறும் ஐம்பதாயிரமோ, ஒரு லட்சமோ மட்டும்தான் கொடுப்போம்…” என்கிறார் வக்கீல்.

இன்னொரு பக்கம் 5 லட்சம் கேட்டு அலைகிறார் விதார்த். ரகுமானும் கையில் சிக்கவில்லை. போலீஸ் அந்த இளைஞன்தான் கொலை செய்தான் என்று குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்கிறது.. இறுதியில் என்னாகிறது என்பதுதான் படமே..!

வெல்டன் இயக்குநரே.. மிகச் சிறப்பான திரைக்கதை.. அளவான வசனங்கள்.. குறைவான காட்சிகள்.. விறுவிறுப்பான திரைக்கதை.. பொருத்தமான பின்னணி இசை.. நடிகர்களின் மிகையில்லாத நடிப்பு.. லாஜிக் எல்லை மீறல்கள் இல்லாத தன்மை.. இது எல்லாமும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு முன் உதாரணப் படமாக மாற்றியிருக்கிறது. அனைத்து திரைப்பட கல்லூரிகளிலும் ஒரு திரைப்பாடமாக வைக்க வேண்டிய அளவுக்கு தகுதியுள்ள படம் இது.

விதார்த்தின் கேரக்டர் ஸ்கெட்ச் மீது கொஞ்சமும் சந்தேகம் வராதபடியும் அவர் மீதான பச்சாபத உணர்வு ரசிகனுக்குள் மேலிடும்படியுமாக திரைக்கதைகளை அமைத்து நம் கவனத்தை முற்றிலுமாக திசை திருப்பியிருக்கிறார் இயக்குநர்.

விதார்த் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி கவனத்துடன் டூவீலரை ஓட்டுவது.. ஒரு முறைக்கு இரு முறை அனைவரையும் உற்றுக் கவனிப்பது.. ரோட்டை கிராஸ் செய்ய கண் பார்வையில்லாதவருக்கு உதவி செய்யும்போது விதார்த்தின் முகத்தில் வரும் கவலை.. பயம்.. நாசரிடம் பேசும்போது இருக்கும் தன்னிரக்கம்.. தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் எண்ணம்.. இதெல்லாம் ஒன்று சேர்ந்து விதார்த்தின் கேரக்டரை ‘உலக மகா நடிகன்டா’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

விதார்த் அற்புதமாக நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஒரு பிரேமில்கூட இயல்பு தன்மை மாறாமல் தன்னுடைய கேரக்டருக்கு ஏற்றாற்போலவே வலம் வந்திருக்கிறார். நல்ல இயக்குநர்கள் கைகளில் நல்ல நடிகர்கள் கிடைத்தால் அது அவர்களுக்கு பெருமையளிக்கும் படைப்பாக மாறும். அது இங்கே விதார்த்துக்கு நடந்திருக்கிறது.

‘இறைவி’யில் பார்த்த பூஜா தேவரியாவுக்கு அப்படியே எதிர்மறையான ஒரு கேரக்டர். மிடில் கிளாஸ் பேமிலி.. விதார்த் மீது ஒருவித ஈர்ப்புடன் அவரையே சுற்றி வருகிறார். வீட்டுப் பிரச்சினையைல்லாம் சமாளிக்க தான் மட்டுமே சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் கதையை மெதுவாகச் சொல்லி தனக்கான பரிதாப உணர்வை சம்பாதித்துவிட்டார்.

விதார்த்துக்கு நம்பரை தேடியெடுத்து கொடுத்ததற்காக வேலை பறி போனதை நடுரோட்டில் சொல்லிவிட்டு சட்டென்று போனவரை திரும்பவும் அப்படியொரு கோலத்தில் சந்திப்போம் என்று எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் அதுவும் மகிழ்ச்சிதான்.

விதார்த்தின் நண்பராக அவ்வப்போது விதார்த்தின் மனசாட்சி கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு விதார்த்தை கேள்விக்குள்ளாக்கும் கேரக்டரில் நாசர்.. நல்லவரா, கெட்டவரா என்றே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் இன்ஸ்பெக்டராக மாரிமுத்து.. சில காட்சிகளே வந்து பரிதாபமாய் உயிரைவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ், பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விதார்த்திடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் தொழிலதிபராக ரகுமான்.. என்று மிக முக்கிய கேரக்டர்களான இவர்களே எந்தவித யதார்த்த மீறலும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். இதில் ரகுமான் ஒரு படி மேல்.

வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சாதாரண சிகரெட் புகைக்கே கீழ் வீட்டில் இருந்து சத்தமிடும் நபர்கள்.. ஐஸ்வர்யா வளர்க்கும் கிளிகளின் கதறல்.. அயர்ன் செய்யும் பெண்மணியின் விதார்த் மீதான சந்தேகப் பார்வை.. கிரெடிட் கார்டு கம்பெனியில் நடக்கும் பிரச்சினைகள்.. போலீஸ் விசாரணையின் பார்மாலிட்டீஸ்.. கோர்ட் நடவடிக்கைகளில் போலீஸின் பங்களிப்பு.. கோர்ட்டில் கதை மாறும்போது அந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு ஏற்படும் அதிர்ச்சி.. ரகுமானின் பதட்டமான விசாரணைக் களம்.. என் கண்ணு முன்னாடியே நிக்கக் கூடாது என்கிற ரகுமானின் கோபம்.. இப்படி பல இடங்களில் இயக்கமும், எழுத்தும் கச்சிதமாக இருப்பதால் படத்தை அதிக அளவுக்கு ரசிக்க முடிந்திருக்கிறது.

பாடல் காட்சிகளே இனிமேல் சினிமாவில் தேவையில்லை என்பதை இந்தப் படமும் பறை சாற்றியிருக்கிறது. இனி வரும் இயக்குநர்கள் இதனை புரிந்து கொண்டால் நல்லதுதான். ஆனால் பின்னணி இசை என்பது இது போன்ற படங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தை பார்த்த பின்பும் தெரிந்து கொள்ளலாம்.

டைட்டிலில் இருந்து கடைசிவரையிலும் பின்னணி இசை தேவைப்படும் நேரத்தில் இருக்கிறது. தேவையில்லாத இடங்களில் மெளனித்து காட்சிகள் செல்ல வழி விட்டிருக்கிறது. இசைஞானியின் இசையமைப்பை எந்தவிதத்திலும் குறை சொல்ல முடியாது. படத்தின் அழுத்தமான வெற்றிக்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்.

குற்றமே தண்டனைதான். “ஒரு குற்றம் செய்வதுகூட யார் மீது குற்றத்தை செலுத்துகிறோமோ அவருக்கான தண்டனைதான்…” என்கிறார் இயக்குநர்.

சமீபத்தில் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய நுங்கம்பாக்கம் ஸ்வாதியின் கொலை வழக்கிற்கான மூல காரணம்தான், இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் கொலைக்கான காரணமும்கூட. ஆனால் அதனை மிக நுணுக்கமாக வசனத்திலும், காட்சியிலும் பெரியளவில் முக்கியத்துவம் பெறாத அளவுக்கு வைத்திருக்கிறார் இயக்குநர். தப்பித்தார்..!

பொய் சாட்சி சொல்வதும் ஒரு குற்றம்தான். ஆனால் இந்தக் குற்றத்திற்கும் ஒரு தண்டனை உண்டு. ஏமாற்றுவதும் ஒரு குற்றம்தான். இதற்கும் ஒரு தண்டனையுண்டு. இப்படி மனிதர்கள் செய்கின்ற அனைத்திற்குமான தண்டனைகளும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள நீதிக் கதைக்குள் அடக்கம்.

இறுதியில் விதார்த்தின் பரிதாப நிலைமைதான் அவர் செய்த பாவத்திற்குக் கிடைத்த தண்டனை. அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்திருக்கலாம்.. ஆனால் ஆண்டவனிடத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்பதாகச் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர். இதுவும் நியாயம்தானே..?!

முதல் படத்திற்கும், இரண்டாவது படத்திற்கும் கொஞ்சமும் தொடர்பே இல்லாமல் இப்படியொரு கதையுடன் சிறப்பான இயக்கத்தைச் செய்திருக்கும் மணிகண்டனுக்கு, இந்தப் படமும் சிறப்பான வெற்றியைத் தேடித் தரப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

குற்றமே தண்டனை – அவசியம் பார்க்க வேண்டிய படம்..!
error: Content is protected !!