பாலாவை முந்திக் கொண்டார் பாரதிராஜா..!

பாலாவை முந்திக் கொண்டார் பாரதிராஜா..!

பாலாவை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கே வந்துவிட்டார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ‘குற்றப் பரம்பரை’ படத்தை யார் முதலில் தயாரிப்பது என்கிற போட்டியில் இப்போது பாரதிராஜாவே முந்திக் கொண்டுள்ளார்.

தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் இந்தக் ‘குற்றப் பரம்பரை’ படத்தை தயாரித்து இயக்கவுள்ளார் பாரதிராஜா. இதற்கான பூஜை நாளை நடைபெறவிருக்கிறது.

20x15_01

ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த 80 வகையான ஜாதியின மக்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட ‘குற்றப் பரம்பரை சட்ட’த்தை எதிர்த்து அந்த இன மக்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழகத்து மக்கள் பலர் தங்களது உயிரை துச்சமென மதித்து போராடினார்கள். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கியது ஆங்கிலேய அரசு.

இந்த வீரப் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குநரும், கதாசிரியருமான பேராசிரியர் இரத்தினகுமார் உருவாக்கி வைத்திருக்கும் கதையைத்தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் திரைப்படமாக இயக்கவுள்ளார்.

இதே கதையை மையமாக வைத்து எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி 'குற்றப் பரம்பரை' என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பாலா தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளைத் துவக்கிவிட்டார். ஆனால் இந்தக் குற்றப் பரம்பரை கதை, இயக்குநர் பாரதிராஜாவின் கனவுத் திட்டம் என்பதால் அவரும் கைவிட மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் சப்தமே இல்லாமல் இப்படத்தின் துவக்க விழா  இன்று ஏப்ரல் 3-ம் தேதி காலை 10.30 மணிக்கு உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற ஊரில் விமரிசையாக நடைபெறுவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்த துவக்க விழாவில் இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசிந்திரன், பாண்டியராஜன், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் - இரத்தினகுமார், கலை இயக்கம் - சாபு சிரில். பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவு - பி.கண்ணன். மற்ற  நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்.