சீமான், குஷ்புவை இணைத்த ‘டிராபிக் ராமசாமி’ !

சீமான், குஷ்புவை இணைத்த ‘டிராபிக் ராமசாமி’ !

சமூகப் போராளி ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை அப்பெயரிலியே படமாகி வருகிறது.  கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார்.  அவர் மனைவியாக தேசிய விருது பெற்ற நடிகை ரோகிணி நடிக்கிறார்.

இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும்  என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி,  மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வரும் சீமானும்  குஷ்புவும் தற்போது ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் .

சினிமாத் துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு, அரசியல் என்று இருப்பவர் குஷ்பு. இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு இப்படத்தின் கதையும், நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது என்று பெருமையாக கூறினர்.

படம் பற்றி  இயக்குநர் விக்கி கூறும்போது “நம் சமுதாய நலனிற்காக யாரையும் எதிர்பார்க்காமல் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் ஒருவரை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும்  என்று நினைத்ததின் விளைவுதான் இப்படம்” என்றார்.

தன்னைப் பற்றி உருவாகிற படம் பற்றி டிராபிக் ராமசாமியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். 

அவர் பேசும் போது,  “என்னைப் பற்றிப்  படமெடுக்க முன் வந்ததற்கு மகிழ்ச்சி. யார் யாரோ கேட்டார்கள் ஆனால் யாரும் துணிச்சலாக முன் வரவில்லை. இவர்கள் வந்திருக்கிறார்கள். அந்த துணிச்சலுக்காக இப்படக் குழுவினருக்கு என் பாராட்டுக்கள்” என்றார்.

பல விருது பெற்ற குறும் படங்களை இயக்கிய இப்படத்தின் இயக்குநர் விக்கி,   எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் ஐந்தாண்டுகள் உதவி இயக்குநராக  பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.