ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் நகைச்சுவை படம் ‘கோமாளி’..!

ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் நகைச்சுவை படம் ‘கோமாளி’..!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள திரைப்படம் ‘கோமாளி.’

இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், காஜல் அகர்வால், சம்யுக்த ஹெக்டே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, ஆர்.ஜே.ஆனந்தி, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ‘ஹிப்ஹாப்’ தமிழா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு - பிரவீன் கே.எல்., எழுத்து, இயக்கம் – பிரதீப் ரங்கநாதன்.  

‘அடங்க மறு’ படம் உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் தனது ‘கோமாளி’ படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழு நீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

komaale-movie-poster-1

‘கோமாளி’ படம் பற்றி படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, "கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் ‘தனி ஒருவன்’ மற்றும் ‘அடங்க மறு’ போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம்.

ஆனால் அவருடைய நடிப்பில் அடுத்து வரவிருக்கும் இந்தக் 'கோமாளி' திரைப்படம் காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம் இது. படத்தில் நல்லதொரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயம் ரவி சார் படத்தில் 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுவார். 1990-களின் பின்னணியில் இருக்கும் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

நாயகி காஜல் அகர்வால் ஒரு நல்ல அனுபவமுள்ள நடிகை, அவர் எப்போதும் நடிப்பை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார். ஒவ்வொரு முறையும், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ஜோடியை நான் பார்க்கும்போது, ஒரு மேஜிக்கை உணர்வேன். ரசிகர்களும் அதை உணர்வார்கள் என நம்புகிறேன்.

மேலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு பெண் கதாபாத்திரம் இந்தக் கதைக்கு தேவைப்பட்டது. அத்துடன் அவர் சிறந்த நடிகராகவும் இருக்க வேண்டும் என்று தோன்றியது.  எனவே கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டேயை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். இவர், கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான நடிகையாக புகழ் பெற்றவர். அவரது நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பாராட்டப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிக்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் ஆகியோர் படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள். YouTube பரிதாபங்கள் புகழ் R.J.ஆனந்தியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ தமிழா தற்போதைய தமிழ் இளைஞர்களின் இசை சின்னமாக மாறிவிட்டார், மேலும் இந்த படத்தில் மிகவும் சுவாரஸ்யமான பாடல்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். பாடல்கள் அனைத்துமே மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

குறிப்பாக 'பைசா நோட்டு' பாடல் அதன் இசைக்காகவும், காட்சியமைப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல், காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்ட நினைத்து, அது ஒரு பப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அந்தப் பாடலின் காட்சியமைப்பு.  படத்தை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்..” என்றார் நம்பிக்கையோடு..!