நரிக்குறவர்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘கொள்ளிடம்’ திரைப்படம்

நரிக்குறவர்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘கொள்ளிடம்’ திரைப்படம்

தமிழ்ச் சினிமாவில் குறவர்களின் வாழ்க்கைச் சூழலை பின்னணியாகக் கொண்ட படமாக ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ‘குறத்தி மகன்’ படத்தை மட்டுமே சொல்வார்கள். இப்போது இரண்டாவது இன்னொரு படமும் வரவிருக்கிறது. அது ‘கொள்ளிடம்’ திரைப்படம்.

இந்தப் படத்தை நேசம் முரளி இயக்கியிருக்கிறார். இவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். லூதியா என்கிற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும் ராசிக், வடிவுக்கரசி, ராமச்சந்திரன், வேல்முருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர். ராஜகோபால், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத்தொகுப்பு – S.P.அஹமத், பாடல்கள் – அண்ணாமலை, M பூதூர் K. காமராஜ், நேசம் முரளி, சண்டை பயிற்சி – M.K. முருகன், கலை – T.M. சாமி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு – ராசிக், E.M. ஜபருல்லா, ரூபா ஐயப்பன், G.V. பாஸ்கர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நேசம் முரளி.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே காவிரியின் கிளை நதியாக உருவாகி தஞ்சை மாவட்டத்தை வளம் செழிக்க வைக்கும் கொள்ளிடம் ஆற்றின் பெயரை வைத்திருப்பவர்கள்.. படத்தை மட்டும் இதற்கு சம்பந்தமே இல்லாமல் வட தமிழ்நாட்டிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் நேசம் முரளி, "மனித இனத்தில் இருபது சதவிதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் எண்பது சதவிதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம். அழகு குறைவாக இருக்கும் எண்பது சதவிதம் பேர் ஒருதலையாகத்தான் காதலிக்க முடிகிறது. காதலை சொல்ல நினைக்கும்போதெல்லாம் ‘இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு..?’ நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், அந்த மனசாட்சிதான் இந்தக் ‘கொள்ளிடம்’ படத்தின் கதைக் கரு. டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் புதுமையான திரைக்கதையோடு, வித்தியாசமான இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கிறது இந்தக் ‘கொள்ளிடம்’ திரைப்படம்." என்றார்.