சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’ திரைப்படம்..! 

சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’ திரைப்படம்..! 

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை  இயக்குவதில் வல்லவர் இயக்குநர் சுசீந்திரன். தற்போது இவர் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக ‘ஜீனியஸ்’, ‘ஏஞ்சலினா’, ‘சாம்பியன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

‘ஜீனியஸ்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சசிகுமார் மற்றும் இயக்குநர் பாரதிராஜாவின் நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடி வருகிறார் சுசீந்திரன். 

‘பாண்டிய நாடு’, ‘பாயும் புலி’ மற்றும் ‘மாவீரன் கிட்டு’ படத்துக்கு பின் D.இமான், இயக்குநர் சுசீந்திரனின் கூட்டணி இப்படத்தில் இணைகிறது.  ஒளிப்பதிவு குருதேவ். கலை இயக்கம் – சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இயக்குநர் சுசீந்திரனின் தந்தை புகழ் பெற்ற கபடிக் குழுவின் நிறுவனர். அவர் 40 வருடங்களாக கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜை நிகழ்வில் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

பழனியை கதைக் களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதியன்று வெளியாகும்.