சர்வதேச குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் அறிமுகமாகும் ‘கதிர்’ திரைப்படம்

சர்வதேச குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் அறிமுகமாகும் ‘கதிர்’ திரைப்படம்

வி.ஆர்.கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஆர். விமலா ராஜநாயகம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கதிர்’

புதுமுகங்கள் விஷ்வா, நீராஜா இருவரும் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு, ‘கோலிசோடா’ பாண்டி, சுப்புராஜ், ‘பசங்க’ சிவக்குமார், செந்தி, சிந்து, சங்கவி, ‘பருத்தி வீரன்’ சுஜாதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் மூலம் பிரபல சர்வதேச குங்ஃபூ மாஸ்டரான ராஜநாயகம், நடிகராக அறிமுகமாகிறார். 8 முறை பிளாக் பெல்ட் வாங்கியுள்ள இவர், இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். 

ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார். அண்ணாமலை, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுத, ‘இசைக் கவிஞர்’ செளந்தர்யன் இசையமைக்கிறார். ‘சேரன் பாண்டியன்’, ‘சிந்துநதி பூ’,  ’கோபுர தீபம்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்த படங்களுக்கு இசையமைத்துள்ள செளந்தர்யனுக்கு இது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கும் ராஜநாயகம், இப்படத்தின் ஹீரோ புதுமுகம் என்பதால், அவருக்கு முறையான சண்டை பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வருவதோடு, இப்படத்தின் ஆக்‌ஷன் இயக்குநர் மிரட்டல் செல்வாவுடன் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறார். இதன் காரணமாக இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் பேசப்படும்விதத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தோழர் அரங்கன்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குநர் தோழர் அரங்கன் கூறுகையில், “அறிவு, கொள்கை என சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்வில் காதல் கடந்து போனால் என்ன நடக்கும் என்பதை, யதார்த்தமாக தமிழ் கலாச்சார பண்போடு சொல்பவன்தான்  இந்த ‘கதிர்’.

இளைஞர்களுக்கு பிடித்தவகையில் காதலும், குடும்பத்தோடு பார்க்கும்விதத்தில் காமெடியும் என படம் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான முறையில் இப்படத்தை உருவாக்கி வருகிறோம்…” என்று தெரிவித்தார்.




error: Content is protected !!