full screen background image

காசு மேல காசு – சினிமா விமர்சனம்

காசு மேல காசு – சினிமா விமர்சனம்

Raghav Home Entertainment சார்பில் தயாரிப்பாளர்கள் P.ஹரிஹரன், B.உதயகுமார், P.ராதாகிருஷ்ணன் மூவரும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஷாருக் நாயகனாகவும், காயத்ரி நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தில் இன்னொரு ஹீரோவாக மயில்சாமியும் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் இவர்களுடன் படத்தின் இயக்குநர் கே.எஸ்.பழனியும் நடித்துள்ளனர்.

இசை – எம்.எஸ்.பாண்டியன், ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன், பாடல்கள் – கருப்பையா, கதை, திரைக்கதை, வசனம், இணை தயாரிப்பு – A.சுதாகர், இயக்கம் – கே.எஸ்.பழனி. தயாரிப்பு – P.ஹரிஹரன், B.உதயகுமார், P.ராதாகிருஷ்ணன்,

சாதாரண நடுத்தரக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் மயில்சாமிக்கு ஒரே மகன். ஷாரூக். படித்திருக்கிறார். ஆனால் வேலைக்குச் செல்லவில்லை. தான் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்று துடியாய் துடிக்கும் மயில்சாமி, தனது மகனை வைத்து அந்த ஆசையை நிறைவேற்ற முயல்கிறார்.

தனது மகனை யாராவது ஒரு பெரிய பணக்காரரின் மகளைக் காதலிக்க வைத்து. அவர்களை கல்யாணம் செய்ய வைத்து.. அதன் மூலம் தான் பணக்காரனாக திட்டம் தீட்டுகிறார்.

இதற்காக பெரிய செல்வந்தரும், சிங்கப்பூரில் நகைக் கடை வைத்திருப்பவருமான ஒருவரின் வீிட்டில் வேலை செய்யும் ஹீரோயின் காயத்ரியை நோட்டமிடுகிறார். காயத்ரி அந்தத் தொழிலதிபரின் மகள் என்றே தவறாக நினைத்துவிடுகிறார் மயில்சாமி. இதனால் காயத்ரியை பற்றி தன் மகனிடம் சொல்லி இந்தக் காதல் தி்ட்டத்திற்கு ஓகே வாங்குகிறார்.

ஆனால் உண்மையில் காயத்ரி ஒரு பிச்சைக்காரனின் மகள். அந்தப் பிச்சைக்காரனின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் காயத்ரி. பிச்சைக்காரனின் இரண்டாவது மனைவியான மதுமிதாவும் பிச்சைதான் எடுக்கிறார். இதெல்லாம் தெரியாமல் மயில்சாமி தனது மகனை உசுப்பிவிட.. ஷாரூக்கும் தீவிரமாக முயற்சிகள் செய்து தன் காதல் வலையில் ஹீரோயினை விழ வைக்கிறார்.

இந்த நிலையில், சில மர்ம நபர்கள் காயத்ரியை கடத்தி செல்கின்றனர். 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் அவளை திருப்பியனுப்ப முடியும் என்று கடத்தல்காரர்கள் சொல்ல.. வருங்கால மருமகளுக்காக தனது வீட்டை விற்று பத்து லட்சம் ரூபாயை ரெடி செய்கிறார் மயில்சாமி.

கடைசியில், மயில்சாமி காயத்ரியை மீட்டாரா..? ஷாரூக் – காயத்ரி கல்யாணம் நடந்ததா..? பிச்சைக்காரர்கள் கதி என்ன என்பதுதான் இந்த நகைச்சுவை கலந்த குடும்பப் படத்தின் திரைக்கதை.

‘கண்டேன் காதல் கொண்டேன்’, ‘மன்னார் வளைகுடா’, ‘இன்னுமா நம்பள நம்புறாங்க’ ஆகிய திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும், ‘அல்லி ராஜ்யம்’ உள்ளிட்ட பல நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவருமான கே.எஸ்.பழனி, இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

பல நூறு நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் நகைச்சுவையுணர்வோடு படத்தை இயக்கியிருக்கிறார். படம் முழுவதுமாக நகைச்சுவை இல்லாவிட்டால் ஆங்காங்கே விட்டுவிட்டு படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதுபோல தனது அழுத்தமான இயக்கத் திறமையால் படத்தை இயக்கியிருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் இயக்குநர் பழனி ஸாருக்கு..!

படத்தில் உண்மையிலேயே நாயகர்களாக நடித்திருப்பவர்கள் மயில்சாமியும், பிச்சைக்காரராக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.பழனியும்தான். அவ்வளவு யதார்த்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள் இருவரும். இருவரின் டைமிங்சென்ஸ் காமெடிக்கும், வசன உச்சரிப்புக்கும் மிக அழுத்தமான நடிப்புக்கும் ஒரு ‘ஜே’ போடலாம்..!

மயில்சாமி சளைக்காமல் வசனம் பேசியிருக்கிறார். பக்கம். பக்கமான வசனங்களை எப்படித்தான் இத்தனை நடிப்போடு சேர்த்து பேசினாரோ தெரியவில்லை. ஆனால் சிறந்த நடிப்பு..! இதேதான் பிச்சைக்காரராக நடித்திருக்கும் பழனிக்கும். மயில்சாமிக்கும், அவருக்குமான காட்சிகளி்ல் இருவரின் டைமிங்கான டயலாக் டெலிவரிதான் குபீர் சிரிப்பை வரழைத்தது.

நாயகன் ஷாரூக்கிற்கு இதுதான் முதல் படம் என்பதால் அதிகம் குற்றம், குறை சொல்ல முடியவில்லை. அவருக்கு வந்திருக்கும் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அவ்வளவுதான். நகைச்சுவை படம் என்பதால் ஹீரோவின் நடிப்பு அதிகமாக தேவையில்லை என்றாகிவிட்டது.

ஹீரோயின் காயத்ரி ஏற்கெனவே சில படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் அந்த அனுபவ நடிப்பை இதில் காண்பித்திருக்கிறார். இருக்கும் செண்டிமெண்ட் அழுகை காட்சிகளில் ஹீரோவைவிடவும் இவரே அதிக நடிப்பைக் காண்பித்து சமாளித்துவிட்டார்.

ஹீரோயினின் சித்தியாக மதுமிதா. மிக அட்டகாசமான டைமிங் வசன உச்சரிப்பும், நடிப்பும் இவரது நடிப்புக்கு பெயர் சொல்லும் படமாக இதனைக் காண்பிக்கிறது.

சில காட்சிகளே ஆனாலும் நளினியின் வருகை ஒரு அணுகுண்டுதான். அதிலும் கிளைமாக்ஸில் அவருடைய அசால்ட்டு நடிப்பும், கோவை சரளாவைப் பார்த்து அவர் மிரண்டு போய் நிற்பதும் செம காமெடி.

கிளைமாக்ஸில் வரும் கோவை சரளா மொத்தப் படத்தையும் தன் தோளில் தூக்கி வைத்துவிட்டார். கிளைமாக்ஸில் அவரால் எழும்பும் வெடிச் சிரிப்புதான் படம் பற்றிய மெளத் டாக்கை ஓங்கி எதிரொலிக்க வைத்திருக்கிறது.

கோவை சரளாவின் வருகையும், அதைத் தொடர்ந்த காட்சிகளும் எதிர்பாராதவை. ஆனால் சுவையானவை. இந்தக் காட்சியில் ஆல் ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷனில் இயக்கத்தை மிக அழகாக மேற்கொண்டிருப்பதால் சிரித்தே செத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

எம்.எஸ்.பாண்டியனின் இசையில் நான்கு பாடல்களுமே அருமை. கேட்க கேட்க இனிமையாக இருக்கின்றன. இந்தாண்டுக்கான சிறந்த மெலடி பாடல் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘அச்சச்சோ.. அச்சச்சோ..’ பாடல் நிச்சயமாக இடம் பிடிக்கிறது.

இதேபோல் படத்தின் துவக்கத்தில் வரும் ‘ஓடுறான் ஓடுறான்’ பாடல் படத்தின் கதையை நகர்த்தும்விதமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் ‘காசு காசு’, ‘கண்ணை திறடா’ பாடல்களும் கேட்கும் ரகம்.. இந்தப் பாடலாசிரியர் முயற்சி செய்தால் நிச்சயமாக பெரிய இசையமைப்பாளராக மாறலாம்.

சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் குறைவில்லாமல் படமாக்கப்பட்டிருக்கின்றன. ‘காசு காசு’ பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளரின் பங்கு பெரியது. பாராட்டுக்கள். 

‘பேராசை பெருநஷ்டம்’ என்ற கருத்தை மையப்படுத்தி வழக்கமான கதையம்சத்துடன், கூடுதலாக நகைச்சுவையுணர்வுடன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி.

சாதாரணமான ஒரு திரைப்படம் என்றுகூட நாம் இதைக் கடந்து போக முடியாத அளவுக்கு நாட்டில் தற்போதைக்கு நிலவும் அத்தனை அரசியல் கோமாளித்தனங்களையும் நையாண்டி செய்திருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி. வரி, பிச்சைக்காரர்களை திட்டும் மனப்போக்கு, காதலை தப்பிதமாக நினைக்கும் மன நிலை. பிச்சைக்காரர்கள்கூட ஜாதி பார்க்கும் அவலம்.. பணத்தாசை கொண்டும் அலையும் மனிதர்களின் அவல நிலை. எப்பாடுபட்டாவது கோடீஸ்வரனாக வேண்டும் என்ற வெறி.. திருமணத்தின் முக்கியத்துவம், சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை.. என்று பல தரப்பட்ட செய்திகளையும் படத்தில் கொத்து புரோட்டா போட்டிருக்கிறார் இயக்குநர்.

“தியேட்டரின் உள்ளே நுழைந்தால் அடுத்த 2 மணி நேரத்திற்கு உங்களுடைய பொழுது போக்கிற்கு நாங்கள் கியாரண்டி…” என்கிறார்கள் இந்த படக் குழுவினர்.

போய் வாருங்கள் மக்களே..!

Our Score