‘கரு’ படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்..!

‘கரு’ படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்..!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கரு’.

இந்தப் படத்தில் மலையாள ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நாயகியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுவேயாகும். சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நாக ஷவ்ரியா ஹீரோவாக நடித்திருக்கிறார்.

மற்றும், ஆர்.ஜே.பாலாஜி, நிழல்கள் ரவி, ஜெய்குமார், ரேகா, சுஜிதா, குமாரவேல், டி.எம்.கார்த்திக், சந்தானபாரதி இவர்களுடன் பேபி வெரோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – விஜய், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இசை – சி.எஸ்.சாம், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத் தொகுப்பு – ஆண்டனி, வசனம் – அஜயன் பாலா, பாடல்கள் – மதன் கார்க்கி, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், ஆடை வடிவமைப்பு – வினையா தேவ், சப்னா ஷா, எக்ஸ்கியூட்டிவ் புரொடியூஸர் – எஸ்.பிரேம், தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, தயாரிப்பு மேலாளர் – எஸ்.எம்.ராஜ்குமார், ஒலிப்பதிவு – எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், ஒப்பனை – பட்டணம் ரஷீத், உடைகள் – மோதபள்ளி ரமணா, ஸ்டில்ஸ் – ராமசுப்பு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, வி.எஃப்.எக்ஸ் – சரவணன் சண்முகம், ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.சிவசரவணன், பிரத்தியுஷா, விளம்பரம் – ஷ்யாம், விளம்பர வடிவமைப்பு – முகில் டிசைன்ஸ்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் சென்னையில் தி.நகர், ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. 

IMG (37)

முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய லைகா நிறுவனத்தின் பொது மேலாளர் நிஷாந்தன், “2014-ல் ‘கத்தி’ என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், ‘கரு’ மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம்...” என்றார்.

வசனகர்த்தா அஜயன் பாலா பேசுகையில், “விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த பத்தாண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். நான் இயக்குநர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன்...” என்றார். 

nizhalgal ravi

நடிகர் நிழல்கள் ரவி பேசும்போது, “லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது. லண்டன்ல இருக்கும்போதெல்லாம் லைகா மொபைல்லதான் பேசுவேன். இப்போது லைகா தயாரித்த ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாய் இருக்கிறது..” என்றார். 

நடிகரும், இயக்குநருமான சந்தானபாரதி பேசும்போது, “என் மகன் விஜயிடம் உதவி இயக்குநராக சில படங்களில் வேலை செய்திருக்கிறான். ஆனாலும் எனக்கு விஜய் படங்களில் இதுவரையிலும் நடிக்க வாய்ப்பு வந்ததில்லை, இந்தப் படத்தில்தான் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விஜய் ரொம்பவும் கூலானர். இந்தப் படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது...” என்றார்.

rekha-1

நடிகை ரேகா பேசும்போது, “ஒவ்வொரு ஷாட் நடித்து முடித்ததும் மானிட்டர்ல பாத்துட்டு வந்து, சரியா வராத விஷயங்களை சரி பண்ணிக் கொள்வார் சாய் பல்லவி. ரொம்ப அர்ப்பணிப்புள்ள நடிகை. அந்த குழந்தை வெரோனிகா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கா. ரொம்ப அருமையான டீம், ஷூட் முடிஞ்சு போச்சேனு வருத்தமா இருந்துச்சி...” என்றார்.

c.s.sam

படத்தின் இசையமைப்பாளரான சி.எஸ்.சாம் பேசுகையில், "நான் இசையமைத்து வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸ் ஆன நேரத்தில் ‘கரு’ படத்தை முக்கால்வாசி முடித்திருந்த விஜய் சார், என்னை அழைத்து ‘இதுவொரு உணர்வுப்பூர்வமான ஒரு படம், இசையமைக்கிறீங்களா..?’ன்னு கேட்டார்.

நான் எமோஷனலான படங்களில் வேலை செய்வதை பெருமையாக நினைக்கிறேன். சொல்ல வந்ததை நேர்மையாக சொல்லும் ஒரு சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். அவரோடு தொடர்ந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன்.

ஹிட் ஆக்கணும்னு எந்த பாடலையும் இசைக்கவில்லை. கதைக்கு நேர்மையான இசையை கொடுத்திருக்கிறோம். சித்ரா அம்மாவோடு ஒரு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டிருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அவர்களோடு ஒரு பாடலில் இணையும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்...” என்றார்.

madhan kaarkke 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “’கரு' படத்தின் கருவால்தான் என்னால் நல்ல, அழகான பாடல்களை உருவாக்க முடிந்தது. சமீபத்தில் வந்த இசையமைப்பாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் சாம். தனது சிறப்பான இசையால் ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’ என எல்லா படங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

சமீபத்தில் ‘மா’ என்ற குறும்படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். இந்த படத்தில் அதற்கு நேர் எதிரான ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். சாய் பல்லவிக்கு இது அறிமுகப் படம் என்று சொல்வதைவிட, அதிகாரப்பூர்வ அறிமுகம் என்றுதான் சொல்வேன். எனென்றால் ‘பிரேமம்’ படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சென்று சேர்ந்தவர்...” என்றார்.

sai pallavi 

நடிகை சாய் பல்லவி பேசுகையில், “நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்ததுதான். தமிழ் ரசிகர்களால்தான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது. முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால்தான் இவ்வளவு தாமதம்.

இந்தப் படத்தில் நடிக்கும்போது அனைவருமே உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும்போது எனக்குத்தான் பிரஷ்ஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி இயக்குநர் விஜய் சொல்லிக் கொடுத்தார்..” என்றார்.

director vijay

இயக்குநர் விஜய் பேசும்போது, “இந்த ‘கரு’ திரைப்படம் என் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறேன். ‘கரு’ படத்தின் கதையை லைகாவிடம் சொன்னேன். இந்த படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்குத்தான் பண்ணனும் என்று கூறினார்கள்.

சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்த படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின்னர் கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே சாய் பல்லவிதான். அவரை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப் பெரிய நடிகையாக வருவார்.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு 2013-லேயே இந்தக் கதை தெரியும். இந்த நேரத்துக்காகத்தான் காத்திருந்தோம். எடிட்டர் ஆண்டனி இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப் பெரிய பலம் மதன் கார்க்கி. நான் சொல்ல விரும்புவதை 2 நிமிடங்களில் பாடலாக சொல்லி விடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்கு பொருத்தமான இசையை கொடுத்திருக்கிறார்.

போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறைய தேடல்களுக்கு பிறகு இந்த குழந்தையை கண்டுபிடித்தோம். ‘தெய்வத் திருமகள்’ சாராவுக்கு பிறகு இந்த குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள்...” என்றார் இயக்குநர் விஜய். 

விழாவில் ஆடியோகிராஃபர் ராஜாகிருஷ்ணன், கலை இயக்குநர் ஜெயஸ்ரீ, படத் தொகுப்பாளர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா, நடிகர்கள் ஜெயகுமார், டி.எம்.கார்த்திக், பேபி வெரோனிகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.