full screen background image

நடிகை மீனா நடிக்கும் ZEE-5 தளத்தின் இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி’..!

நடிகை மீனா நடிக்கும் ZEE-5 தளத்தின் இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி’..!

டிரண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஜீ-5 சேனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி.’

இந்த இணையத் தொடரில் பிரபல நடிகையான மீனா நடிக்கிறார். மீனா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவுடன்  மற்றொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜியோர்ஜியா அன்ரியானியும் நடிக்கிறார்.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை(CBI)யில் அதிகாரியாகப் பணியாற்றும் காமாட்சி மற்றும் பிரெஞ்சு நாட்டின் உளவுத் துறை(DGSE)யில் அதிகாரியாகப் பணியாற்றும் கரோலினையும் பற்றியதே இந்தக் ‘கரோலின் காமாட்சி’ தொடரின் கதைக் களம்.

தேசத்தால் மாறுபட்டாலும், பணியில் ஒன்றிணைந்து பணியாற்றும் இவர்களின் பயணமே இந்தத் தொடர் .

மீனாவின் தந்தை சி.பி.ஐ.யில் அதிகாரியாகப் பணியாற்றி வரும்போதே இறந்துவிட்டார். அதனால் வாரிசு அடிப்படையில் மீனாவுக்கு சி.பி.ஐ.யில் வேலை கிடைக்கிறது. தனித்துவமான பிராமணப் பெண்ணான மீனா, கடின வேலைகளை சற்றும் விரும்பாதவர் என்றாலும் தனது புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவைப் பேச்சாலும் தனது அலுவலகப் பணிகளை சமாளித்து வருகிறார்.

பிரெஞ்சு உளவுத் துறை(DGSE)யின் அதிகாரியான கரோலின் ஒரு கவலையற்ற, கரடு முரடான நவநாகரீக பெண்மணி. அவர் விடுமுறைக்காக பாண்டிச்சேரி வந்திருக்கிறார். 

ஒரு மோசமான கடத்தல்காரனிடம் சிக்கியுள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலைப் பொக்கிஷத்தை மீட்கும் பொறுப்பை விடுமுறைக்கு வந்த இடத்தில் கரோலினிடத்தில் அவருடைய மேலதிகாரி ஒப்படைக்கிறார்.  இந்தப் பணிக்காக  சி.பி.ஐ. அதிகாரி காமாட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார் கரோலின்.

இருவேறு மாறுபட்ட ஆளுமைகள் கொண்ட இந்த இருவரும் இணைந்து அந்த பொக்கிஷத்தை எப்படி மீட்டார்கள் என்பதுதான் இந்த இணையத் தொடரின் கதை.

இயக்குநர் பாலாவிடம் பல படைப்புகளில் இணைந்து பணியாற்றியவரும்,  நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் இயக்குநருமான விவேக்குமார் கண்ணன், இத்தொடரை இயக்குகிறார்.

இவருடன் பல்வேறு படைப்புகளில் இணைந்து பணியாற்றிய பாலாஜி இத்தொடருக்கு  ஒளிப்பதிவு செய்கிறார்.

உயர்தர தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த சண்டை இயக்குநர்கள், கேலி, கிண்டல், நகைச்சுவை, அதிரடி, திகில் என சுவாராஸ்யமான ஒரு கலவையில், முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கியது இந்த இணையத் தொடர். 

Karoline Kamakshi Web Series Pooja Stills (50)

இத்தொடர் பற்றி டிரண்ட்லவுட் நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சிதம்பரம் நடேசன் பேசும்போது, “மீண்டும் ZEE5 நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய பிரமிப்பான கதைக் களத்தில் பணியாற்றுவதிலும், இத்தகைய நகைச்சுவை கலந்த அதிரடி தொடர்களை உருவாக்குவதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்ச் சினிமாவில் பன்முக நடிகையாக விளங்கும் மீனாவை இணைய உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த வாய்ப்பு மிகவும் பெருமிதத்துக்குரியது. எந்நேரமும் தரமான தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதில் தன்முனைப்புடன் செயல்படும் எங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

‘கரோலின் காமாட்சி’ தற்போதைய இணைய நேயர்களின் ரசனைக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று உறுதியாக  நம்புகிறோம்…” என்றார்.

அனைத்து ஊடகத் தளங்களிலும் தரமான படைப்புகளின் மூலம் தடம் பதித்துவரும் ஒரு முன்னணி டிஜிட்டல் நிறுவனம்தான் டிரண்ட்லவுட்.  இந்த வருடம் தனது ஐந்தாம் வருடத்தில் கால் பதிக்கப் போகும் இந்நிறுவனம், இணைய வழி ஊடகத் தளங்களில், பல்வேறு மொழிகளில், பத்துக்கும் மேற்பட்ட உயர்தரமான வெற்றி நிகழ்ச்சிகளைப் படைத்து, ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கி, தென்னிந்தியாவின் மிகச் சிறந்த படைப்பு நிறுவனமாக முன்னணி வகிக்கிறது. 

மேலும், முன்னணி இயக்குநர்கள், தொழிற் நுட்ப வல்லுனர்கள், படைப்பாளிகள் ஆகியோருடன் இணைந்து தரமான, புதுமையான படைப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்நிறுவனம் வளர்ந்துவரும் புதிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு ஊக்குவித்தும் வருகிறது. 

இந்த இணையத் தொடருக்கான படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் துவங்கியது. இந்தத் துவக்க விழாவில் நடிகைகள் மீனாவும், நடிகை ஜியோர்ஜியா அன்ரியானியும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்தத் தொடரில் பங்கு பெறும் மற்ற நடிகர், நடிகைகள், தொழிற் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் தாணு, சுரேஷ், தயாரிப்பு நிறுவனத்தினர், ஜீ-5 நிறுவனத்தின் உயரதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

Our Score