துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

ஒரு ஹிட் பாடலிலிருந்து முணுமுணுக்க வைக்கும் வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல.

ஆனால், எந்த ஹிட் பாடலிலிருந்து எந்த வரியை தலைப்பாக தேர்வு செய்வது என்ற தேடல், பல இயக்குநர்களுக்கு இன்றுவரை சவாலாகவே உள்ளது.

நடிகர்  துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த நேரடி தமிழ் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தை தயாரிப்பாளர் பிரான்சிஸ் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர்  தேசிங் பெரியசாமி பேசுகையில், “இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம்.

அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடலான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என் நினைவிற்கு வந்தது. காதலையும், ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியைவிட பொருத்தமானது வேறெதுவும் இல்லை எனக்குத் தோன்றியது. எனவே இந்த வரியையே தலைப்பாக வைத்துவிட்டோம்.

மிகப் பெரிய இளைஞர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம்  உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இந்தக் கதைக்கு துல்கரைவிடவும் பொருத்தமான ஹீரோ வேறு யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இந்தப் படத்தை வேறு லெவெலுக்கு துல்கர் கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன்.

அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார். K.M.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை டி.சந்தானம் மேற்கொள்கிறார்.  படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் தொடங்கியுள்ளது…” என்றார் சந்தோஷத்துடன்.