“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..!

“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..!

சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில்  குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘கன்னி மாடம்’.

இந்த படத்தில் புதுமுகங்களான ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குநர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த 21-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹசீர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘வண்டி’ என்ற படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்தபோது ‘வண்டி’ படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் ஒன்றை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தார். சொன்னபடியே ‘வண்டி’ படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு தயாரிப்பாளர் ஹசீர் பைக்கை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இப்போது இந்தக் ‘கன்னி மாடம்’ படத்திற்கும் பரிசு அறிவித்து இருக்கிறார் பட தயாரிப்பாளர் ஹசீர். இதன்படி ‘கன்னி மாடம்’ படம் பார்க்கிறவர்களுக்கு தங்கம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்கும் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும்விதமாக இந்தத் தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கன்னி மாடம்’ படத்தினைப் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து  சமூக வலைத் தளங்களில் பதிவு செய்ய வேண்டும்.

அதில் சிறந்த விமர்சகர்களாக தேர்வாகும் பெண்களுக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளாகவும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹசீர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.