“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..!

“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..!

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் ‘கன்னி மாடம்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

‘ரூபி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹஷீர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் சென்ற ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற ‘வண்டி’ படத்தைத் தயாரித்தவர்.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை – ஹரிஷ் சாய், பாடல்கள் – விவேகா, பாடகர்கள் – ரோபோ ஷங்கர், அந்தோனி தாசன், ஒளிப்பதிவு –  ஹரிஷ் J.இனியன், படத் தொகுப்பு – ரிஷல் ஜெய்னி, கலை இயக்கம் – சிவஷங்கர்,  சண்டை இயக்கம் – தினேஷ் சுப்புராயன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – போஸ் வெங்கட்.

சென்னையில் சூளைமேடு, மேட்டுக்குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.

kanni maadam-movie-poster-2

சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் நேற்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் சமுத்திரக்கனி, விக்ரமன், மற்றும் நடிகரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, நடிகர் பரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலரும், 3 பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. டிரெயிலர் புதுவித ரசனையுடன் தயாரிக்கப்பட்டிருந்தது. பாடல் காட்சிகளின் அனைத்துக் காட்சிகளும் வித்தியாசமான காட்சியமைப்புடன் படம் பற்றிய மிகப் பெரிய எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. 

விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமைகளைப் பற்றிய அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்.

IMG_6546

நிகழ்வின் துவக்கத்தில் படத்தின் தயாரிப்பாளரான ஹஷீர் பேசும்போது, “இயக்குநர் போஸ் வெங்கட் முதல் முறையாக இந்தப் படத்தின் கதையை என்னிடம் கூறியபோதே  இது மிக நல்ல படமாக வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக் கொண்டேன்.

நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். எங்களுடைய ‘கன்னி மாடம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் வெளியிடும் விநியோகஸ்தர் செண்பகமூர்த்தி அவர்களுக்கு எங்களது குழுவினர் சார்பாக நன்றி…” என்றார்.

IMG_6720

பாடலாசிரியர் விவேகா பேசும்போது, “முதல்முறை இயக்குநர் போஸ் வெங்கட் போனில் இந்தக் கதையைப் பற்றி சொன்னபோதே கதை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. உடனடியாக நான் பாடல் வரிகளை எழுத ஆரம்பித்தேன். மறுநாள் எனக்கு முழுக் கதையையும் கூறினார்.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பாக இருக்குமென தோன்றியது. போஸ் வெங்கட் படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வருவார் என்று உறுதியாய் சொல்கிறேன்..” என்றார்.

IMG_6462

ஒளிப்பதிவாளர் இனியன் பேசும்போது, “இத்திரைப்படம் சின்ன பட்ஜெட்டில் வெகு திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் மிக இயல்பான சுபாவமுடையவர். படக்கு ழுவினருடன் மிகவும் நட்பாக பழகக் கூடியவர். படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறை மிகவும் பரபரப்பாக இருந்த போது தயாரிப்பாளர் ஹஷீர் இருந்தார். அவரை யார் எனத் தெரியாமல் வேகமாக ஒதுங்கி போகச் சொல்லி சத்தமாக சொன்னேன். அவரும் ஒதுங்கி போய்விட்டார். பின்புதான் அவர் தயாரிப்பாளர் என்பதே எனக்குத் தெரிய வந்தது. அந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரின் திறமை இந்தப் படத்தில் எதிரொலித்துள்ளது…” என்றார்.

இசையமைப்பாளர் ஹரி சாய் பேசும்போது, “இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தமைக்காக இயக்குநர் போஸ் வெங்கட் அவர்களுக்கு  நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நாங்கள்  முழு ஈடுப்பாட்டுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு இப்படத்தின் பாடல்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

gayathri

நாயகி காயத்ரி பேசும்போது, “இயக்குநர் போஸ் வெங்கட் அவர்களுக்கும், தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு அற்புதமான கதாப்பாத்திரத்தை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

IMG_6467

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் பேசும்போது, “நானும் இயக்குநர் போஸ் வெங்கட் சாரும் சில காலம் முன் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக சொன்னார். சொன்னது போலவே இப்படத்தில் எனக்கு நாயகன் வாய்ப்பு தந்தார். எனது நெடுநாள் கனவு இதன் மூலமாக நனவாகியிருக்கிறது. ‘கன்னி மாடம்’ உருவாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி…” என்றார்.

robo shankar

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும்.

தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப் படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிப் படங்களை இயக்கி பெரிய இயக்குநராக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.

actor bharath

நடிகர் பரத் பேசும்போது, “நானும் போஸ் வெங்கட்டும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது அவர் எப்போதும் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். ‘கன்னி மாடம்’ தரமான படைப்பாக வந்திருக்கிறது. படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது, “சமீப காலங்களில் தமிழ்ச் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது.

இந்தக் ‘கன்னி மாடம்’ திரைப்படம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரு வெற்றி பெறும்..” என்றார்.

samuthirakani

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “நடிகர் போஸ் வெங்கட்  சினிமா மீது பெருங் காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக் கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும். ‘கன்னி மாடம்’ நல்ல வெற்றியடையும். போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள்…” என்று வாழ்த்திப் பேசினார்.

IMG_6719

திண்டுக்கல் ஐ.லியோனி பேசும்போது, “தமிழ் சினிமாவில் வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்‌ஷா டிரைவர்கள் பற்றிய படங்கள் வந்துள்ளன. கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., நடித்த ‘ரிக்ஷாக்காரன்’, சிவாஜி நடித்த ‘பாபு’ படங்களில் இருவரும் ரிக்ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர். ரஜினி ‘பாட்ஷா’ படத்தில் ஆட்டோ டிரைவராக  நடித்துள்ளார்.

தம்பி போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள்  மீது உள்ள அன்பில் அவர்களைப் பற்றி அழகாக படம் எடுத்துள்ளார். நல்ல கருத்துக்கள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்…” என்றார்.

vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “எல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள். நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை ‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன்.

அவரது முகத்தைப் பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைத் தன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும்.

நான் இப்படத்தின் பாடல்களை  கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும்போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். இந்தக் ‘கன்னி மாடம்’ வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகள்…” என்று வாழ்த்தினார்.

இந்தப் படத்தை எம்.எஸ்.எம். மூவி டிரேடர்ஸ் நிறுவனத்தின் சார்பாக விநியோகஸ்தர் எம்.செண்பகமூர்த்தி பிரம்மாண்டமான முறையில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியிடுகிறார். 




error: Content is protected !!