“ஐஸ்வர்யா ராஜேஷ் தேசிய விருதுக்குத் தகுதியானவர்…” – சிவகார்த்திகேயன் புகழாரம்..!

“ஐஸ்வர்யா ராஜேஷ் தேசிய விருதுக்குத் தகுதியானவர்…” – சிவகார்த்திகேயன் புகழாரம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராக தனது சொந்த நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும், மிகப் பெரிய வெற்றியை பெற்று, இப்போதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா, நேற்று மாலை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

kanaa movie success meet stills

நிகழ்ச்சியில் படத் தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், “இந்தப் படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட்டே தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும், மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டேன். அதனால் இந்த படத்தில் நான்தான் எல்லோருக்கும் வில்லன்…” என்றார்.

kanaa movie success meet stills

கலை இயக்குநர் இளையராஜா பேசும்போது, “சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால்நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. இதற்காக இயக்குநர் அருண்ராஜாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நானே கிராமத்தை சேர்ந்தவன்தான் என்பதால் அது எளிதாக இருந்தது, கால்பந்து விளையாடி இருந்ததாலும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது…” என்றார் கலை இயக்குநர் இளையராஜா.

kanaa movie success meet stills

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பேசுகையில், “சிவாவின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். இந்தப் படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து, படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் துவங்கும்போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் என எல்லோருமே மிகச் சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள்…” என்றார்.

kanaa movie success meet stills

நடிகை ரமா பேசுகையில், “நான் நாயகியாக நடித்தபோதே சத்யராஜ் சாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை, இந்த ஆண்டின் அனைத்து விருதுகளும் அவருக்குத்தான் கிடைக்கும் என நம்புகிறேன்…” என்றார்.

kanaa movie success meet stills

நடிகர் இளவரசு பேசும்போது, “இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையாக இருந்தன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்தப் படத்தில் நான் நடித்த காட்சிகளும், என் கதாப்பாத்திரமும் திரைப்படத்தில் வருமா என யோசித்தேன். ஆனால், நிறைய பேர் மனதில் போய் சேர்ந்தேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

திரையரங்கில் என் மகளுடன் படத்தை பார்க்கும்போது இந்தப் படத்தின் எமோஷனை உணர முடிந்தது. விக்ரமன் சார் ‘புது வசந்தம்’ படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை செய்திருந்தார், அதே மாதிரி இந்த படத்திலும் இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர்…” என்றார்.

kanaa movie success meet stills

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்தத் திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

ஒரு படம் தயாரிக்கும்போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி.

என்னுடைய வாழ்க்கையில் என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படித்தான் என்னை வளர்த்திருக்கிறார் என் அம்மா. என் அம்மா இந்தப் படத்தை பார்த்த பின்பு, ‘இனிமேல் நீ படமே  நடிக்கவில்லையென்றால்கூட பரவாயில்லை. இதுபோதும் உன் சினிமா வாழ்க்கைக்கு’ என்று சொன்னாங்க. எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இதுதான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள்…” என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

kanaa movie success meet stills

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசும்போது, “சிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. தர்ஷன் எனக்கு ஒரு தம்பி. அவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் கொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். என் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றவர். நான் இயக்கினேன் என்று சொல்வதைவிட, என்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்…” என்றார் அருண்ராஜா காமராஜ்.

kanaa movie success meet stills

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “அந்தக் காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது. இந்தக் கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப் பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்தியில் அமீர்கான் ‘தாரே ஜமீன் பார்’ படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார்…” என்றார் நடிகர் சத்யராஜ்.

kanaa movie success meet stills

தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் பேசும்போது, “இது நான் தயாரித்த முதல் படம். என் அடையாளம் எப்போதும் நடிகன் என்பதுதான். அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்ததுதான்.

இந்தக் ‘கனா’ திரைப்படம் நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரே படம் இதுதான். ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் படத்தின் கதைதான். இந்தப் படத்தை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி.

என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் என்னுடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ எனக்கு திருப்புமுனை தந்த படம். அந்தப் படத்திலும் சத்யராஜ் ஸாருடன் நடித்திருக்கிறேன். இப்போது நான் ஒரு தயாரிப்பாளராக என்னை நிரூபித்திருக்கும் கனா திரைப்படம். இப்போதும் சத்யராஜ் ஸார் என்னுடன் இருந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.

‘அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா’ என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன். இப்போது நிஜமாகவே உணர்கிறேன்.

திபு நினன் தாமஸின் இசை படத்துக்கு பெரிய பலம். வைக்கம் விஜயல‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ‘ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும்’ என்று இணையத்தில் ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அவர் அந்த விருதுக்கு தகுதியானவர்.

20 மேட்ச்சுக்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்து கொடுத்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார்.

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய தயாரிப்பு நிர்வாகி கலையரசுக்கு நன்றி. இந்தப் படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை உதவிகளைச் செய்ய இருக்கிறோம்…” என்றார்.

இந்த நிகழ்வில் தமிழகத்தின் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து ‘கனா’ படக் குழுவினர் கௌரவித்தனர்.

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.