கனா – சினிமா விமர்சனம்

கனா – சினிமா விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் ரமா, தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த், நமோ நாராயணன், பாக்கியராஜ், சவரிமுத்து, இவர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – பி.தினேஷ் கிருஷ்ணன், இசை – திபு நைனன் தாமஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, பாடல்கள் – மோகன்ராஜன், ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங், கிரியேட்டிவ் டிசைன்ஸ் – வின்சி ராஜ், விளம்பர வடிவமைப்பு – யுவராஜ் கணேசன், உடைகள் – பெருமாள் செல்வம், ஒப்பனை – பி.கணபதி, நிழற்படம் – ஏ.ஆர்.முருகன், ஒலி வடிவமைப்பாளர் – சுரேன், அழகிய கூத்தன், விஷுவல் எபெக்ட்ஸ் – க்நாக் ஸ்டூடியோஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

இத்திரைப்படத்தை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

இத்திரைப்படத்தை ஆரூத்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அரவிந்த் தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது.

காவிரி டெல்டாவின் தலையாய பகுதியான தஞ்சையைச் சேர்ந்த விவசாயிக் குடியானவர் முருகேசன் என்னும் சத்யராஜ். ஒரு பக்கம் யாருக்கும் பிடிபடாத விவசாயத்தையும், இன்னொரு பக்கம் அவரால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாத கிரிக்கெட்டையும் இரு கண்களாகப் பாவிப்பவர்.

ஆலை கட்ட நிலத்தைக் கேட்டு வருபவர்களிடம் பொட்டில் அடித்தாற்போன்று தர முடியாது என்று சொல்லியனுப்புபவர். தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கின்போதுகூட வீட்டுக்குள் ஓடி வந்து கிரிக்கெட் ஸ்கோர் பார்த்து கை தட்டும் அளவுக்கு கிரிக்கெட் வெறியராகவும் இருக்கிறார்.

இவரைப் பார்த்து, பார்த்து இவரது மகள் கெளசல்யா என்னும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் கிரிக்கெட் ஆசை பிறக்கிறது. வளர்கிறது. தனலாய் எரிகிறது. தான் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் குழு இல்லாததால், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆண்களுடன் சேர்ந்து விளையாடக் கற்றுக் கொள்கிறார். குறிப்பாக பவுலராக முனைகிறார். அதிலும் ஸ்பின் பவுலராக..!

இது பிடிக்காத தாய் ரமா ஐஸ்வர்யாவை அடித்துத் துவைக்கிறார். ஆனாலும் ஐஸ்வர்யாவின் கிரிக்கெட் ஆசை மறையவில்லை. இன்னும் அதீதமாய் தொற்றிக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் ஊராரின் பொறாமைப் பேச்சுக் கேட்டு ஆவேசப்படும் ரமா, தன் மகளிடம் “நீ ஆசைப்பட்டபடியே கிரிக்கெட்டில் எதையாவது சாதித்துவிட்டு திரும்ப வா…” என்று சாமியாட்டம் ஆடுகிறார்.

தெய்வமே வாக்குக் கொடுத்தது போலாகிவிட்டதாக நினைக்கும் அப்பாவும், மகளும் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க முனைகிறார்கள். அது சாத்தியமானதா..? கிரிக்கெட்டில் கெளசல்யா முருகேசன் ஏதாவது சாதித்தாரா? இல்லையா,,? என்பதுதான் இந்தக் ‘கனா’ படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல விவசாயத்தையும், விளையாட்டையும் ஒன்றிணைத்து கதை செய்திருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்..!

மிகச் சிறப்பான திரைக்கதையுடன், கொஞ்சமும் இடறல் இல்லாத இணைப்பாக விவசாயத்தையும் இணைத்திருக்கும் வித்தைக்காக இயக்குநரை பெரிதும் பாராட்ட வேண்டும்.

அவருடைய இந்த முயற்சிக்குக் கை கொடுத்த தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயனுக்கும் நமது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

கெளசல்யா முருகேசனாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அவருடைய நடிப்புலக வாழ்க்கையில் இத்திரைப்படம் மிக, மிக முக்கியமான திரைப்படம். அந்த வயதுக்கேற்றவாறு அமைந்திருக்கும் அவருடைய உடல் அமைப்பும், முகமும் கச்சிதமாக இந்தக் கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறது. இது ஒருவகையில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு கிடைத்த கிப்ட் இத்திரைப்படம் என்று சொல்லலாம்.

இந்தப் படத்தின் கேரக்டருக்கு படப்பிடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே பயிற்சியெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த நேரத்தில் வேறு படங்களில் நடிக்கப் போயிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்தப் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று உறுதியெடுத்து நடித்திருக்கிறார். ஆஃப் ஸ்பின்னர் பவுலிங்கிற்கு ஏற்றவாறு பயிற்சியெடுத்து அதனைக் கச்சிதமாக பவுலிங்கும் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த அர்ப்பணிப்புத் தன்மைக்கு நமது சல்யூட்…!

அப்பாவுக்குச் செல்லமாக, அம்மாவுக்கு பிடித்தாக மகளாக.. ஆண்கள் அரசுப் பள்ளி கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து பொறுக்கிப் போடும் தங்கையாக.. ஜெயித்தே தீர வேண்டும் என்கிற வெறியுடன் ஊரிலிருந்து புறப்படும் வீராங்கனையாக.. ஒவ்வொரு முறையும் தான் தோற்கடிக்கப்படும்போதும் துவண்டு விழுந்தாலும் திரும்பவும் எழும் தைரியம் நிரம்பியவராக.. பலப்பல வடிவங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை பெரிதும் ரசிக்க முடிகிறது.

தன்னை விளக்கமாத்தால் அடிக்கும் அம்மாவிடம் “இன்னொரு பிள்ளைய பெத்து போட்டிருந்தால் அவன்கூட வீட்டுல விளையாடிருப்பேன்ல. அதுக்கு வக்கில்ல. பேச வந்துட்ட…” என்று எதிர்த்துப் பேசும் அந்த அப்பாவித்தனத்தை மிக அழகாக தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் ஐஸ்.

தேசிய அணியில் தான் போட்டியிட முடியாமல் போன தருணத்தில் வருத்தப்படுபவர்.. அடுத்த வாய்ப்பில் துணிந்து களமிறங்கும் அந்தக் குணத்தை தன் முகத்திலேயே காட்டியிருக்கிறார். கிரிக்கெட் போட்டிகளில் அவர் காட்டும் முனைப்பு, தன்னுடைய கிரிக்கெட் மட்டையை உடைத்துவிட்ட சக வீராங்கனையோடு சட்டென்று கோபம் கொண்டு மல்லுக்கட்டும் அந்த ஆவேசம்.. எல்லாமும் சேர்ந்து இந்தாண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அனைத்து விருதுப் பட்டியல்களிலும் கொண்டு போய் சேர்த்திருக்கிறது.

முருகேசனாக வலம் வரும் சத்யராஜ் ஒரு பொறுப்பான அப்பன் என்பதைவிடவும் எதையாவது சாதிக்க நினைக்கும் மகளுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது. அவளை ஊக்குவிக்க வேண்டும் என்கிற உயரிய கருத்தைக் கொண்டிருக்கும் சாதாரண ஒரு விவசாயியாக நடித்திருக்கிறார்.

தந்தை இறந்த தருணத்திலும் வீட்டுக்குள் ஓடோடி வந்து கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கும் ஆர்வம்.. தனது நிலத்தை விட்டுத் தர முடியாது என்பதை தனக்கே உரித்தான பாணியில் எகத்தாளமாக பதில் சொல்லி மறுப்பது.. “ஓட்டுக் கேட்டு வந்தான்.. லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னான்.. தேர்தல்ல நின்னான்.. ஜெயிச்சான்.. போயிட்டான்..” என்று அரசியல்வாதிகளை நக்கல்விடுவதிலும் ஜமாய்த்திருக்கிறார்.

ஊர்க்காரர்களின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் காதில் வாங்காத தன்மையுடன் தன் மகளின் கனவு நிறைவேற வேண்டும் என்கிற அந்த ஒற்றைக் குறிக்கோளுக்காக வாழும் இந்த முருகேசன்போல், அநேக முருகேசன்கள் வாழ்ந்தால் இந்தியாவில் பல கெளசல்யாக்கள் தாங்கள் நினைத்த கனவை அடைந்தே தீருவார்கள்.

இவருடைய மனைவியாக நடித்திருக்கும் ரமா சாதாரணமான கிராமத்து தாய் வேடத்தை புனைந்திருக்கிறார். “ஆசை மட்டும் இருந்தால் பத்தாது. அடம் புடிக்கவும் தெரியணும்…” என்று தன் மகளை உசுப்பிவிடும் காட்சியில் மொத்தக் கை தட்டலையும் அவரே அள்ளிக் கொள்கிறார்.

முதலில் மகளைக் கரித்துக் கொட்டிக் கொண்டு இருப்பவர், கடைசியில் ஊரில் இருக்கும் பெண்களெல்லாம் தன் மகளைக் கிண்டல் செய்வது பொறுக்காமல் “நீ நினைச்சதை சாதிக்காமல் வீட்டுப் படியேறக் கூடாது…” என்று சபதம் போட்டு மகளை உசுப்பேற்றிவிடும் காட்சியில் ஒரு உண்மையான தாயாக நடித்திருக்கிறார் ரமா. வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையின்போது ரமாவின் நடிப்பும், சத்யராஜின் நடிப்பும் மிக இயல்பு. மிகையாகப் போகும் வாய்ப்பு இருந்தும் இயக்குநர் கச்சிதமாக நறுக்குத் தெரித்தாற்போல் அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார். அதுவே அந்தக் கனத்தை ரசிகர்களுக்குக் கடத்தியிருக்கிறது. இந்தச் சோகத்தை மனதில் தாங்கிய ரசிகர்களே “இது பார்க்க வேண்டிய படம்…” என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஐஸ்வர்யாவை ஒரு தலையாய் காதலிக்கும் தர்ஷனும் ஈர்ப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச்சாக நடித்திருக்கிறார். அவர் அறிமுகமாகும் காட்சியிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எதனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக நேரிட்டது என்பதை அறியும்போது அவர் மீது ஒரு பச்சாபதம் ஏற்படுகிறது.

ஐஸ்வர்யாவுக்கு தகுந்த நேரத்தில் ஊக்கப்படுத்தி, தைரியம் கொடுத்து, “இங்க ஜெயிக்கப் போறேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஜெயிச்சவன் சொன்னால்தான் நம்புவாங்க. நீ எதா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு…” என்று உறுதியாய் ஐஸ்வர்யாவை தூண்டிவிடும் உண்மையான பயிற்சியாளராய் மிளிர்கிறார் சிவகார்த்திகேயன்.

பெண்கள் கிரிக்கெட் அணியின் மற்ற வீராங்கனைகள், நிஜமான கிரிக்கெட் பிளேயர்களாக பார்த்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கிரிக்கெட் போட்டியும் நிஜமான போட்டி போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குநருக்கு இதற்காகவும் ஒரு தனி மாலையே போடலாம்..!

கிரிக்கெட் அணியிலும் விரோதம், குரோதம், கோபம்.. இதெல்லாம் இருக்கும் என்பதாகக் காட்டியிருப்பது ஒரு சாமான்யனுக்கு இருக்கும் தடைக்கற்களாக உணரப்பட்டாலும், இந்திய தேசிய கிரிக்கெட் அணி என்பதால் வீராங்கனைக்களுக்குள் இப்படி முட்டல், மோதல்கள் இருக்கு என்று காண்பிப்பது அவசியமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

படத்தில் வசனங்கள் மிகவும் பேசப்படுபவையாக இருக்கின்றன. அவைகள் திரைக்கதைக்கும் பெரிதும் உணர்த்தியிருக்கின்றன. படத்தின் துவக்கத்தில் இன்ஸ்பெக்டர் முனீஸ்காந்த் மூலமாகவே ஐஸ்வர்யாவின் முன் கதையை வெளிப்படுத்துவது மிகுந்த சுவாரஸ்யம். கொஞ்சம் நகைச்சுவையையும் கொடுத்திருக்கிறது எனலாம்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் கேமரா, அந்த ஊரையும், ஊர் அமைந்திருக்கும் பொட்டல் காட்டையையும், விவசாய நிலங்களையும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், கிரிக்கெட் மைதான செம்மண் புழுதியையும் அழகாக படம் பிடித்திருக்கிறது. இதேபோல் படத்தின் பிற்பாதியில் முன்பு காட்டப்பட்ட பொட்டல்வெளி மைதானம் போய் இப்போது அழகுற காட்சியளிக்கும் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிரம்மாண்டத்தையும் பிரமாதமாய் படம் பிடித்திருக்கிறது.

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் உற்சாகமூட்டுவது போல இருக்கிறது. ‘வாயாடி பெத்த புள்ளை’ பாடலும், ‘சவால்’ பாடலும் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றன.  ‘உன்னை விட்டால்’ உற்சாகமூட்டும் பாடலாகவும், கதையை நகர்த்தவும் உதவியிருக்கிறது. ‘கண்ணே என் கண்ணழகே’ பாடலும் காட்சிகளின் வடிவத்தில் படத்தின் முழு சோகத்தையும் ரசிகர்கள் மத்தியில் பரப்புகிறது.

திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு ஏற்றாற்போல், ரூபனின் படத் தொகுப்பும் இருக்கிறது.  கிரிக்கெட் போட்டிக் காட்சிகளை சாதாரண நடிப்புக் காட்சிகளைப் போல செதுக்கிவிட முடியாது. பந்து போட ஓடி வருவதையும், பந்து கைகளில் இருந்து விடுபட்டு செல்வதையும், பந்து மட்டையாளரை நோக்கி வருவதையும், மட்டையாளர் பந்தை அடிப்பதையும் ஒரு சேர காண்பித்தாக வேண்டும். இதில் நடிப்பும் இருக்க வேண்டும். இந்த வித்தையை ரூபன் மிக அழகாகச் செய்து காண்பித்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சி இப்படித்தான் இருக்கும் என்பது படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் அதை எப்படி கொடுக்கப் போகிறார்கள் என்பதை ஆவலுடன் பார்க்க வைத்திருப்பதில் படத் தொகுப்பாளரின் பங்களிப்பு மிக அதிகம். ரூபனுக்கு நமது பாராட்டுக்கள்..

கிளைமாக்ஸ் காட்சிகளில் நிஜமாகவே ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்த உணர்வை இத்திரைப்படம் கொடுக்கிறது. இதற்காக உழைத்த ஒட்டு மொத்த டீமுக்கும் நமது பாராட்டுக்கள்.

ஒரு பக்கம் கிரிக்கெட் வெறி.. இன்னொரு பக்கம் விவசாய வேலைகளைப் பார்த்தாக வேண்டிய நிலை.. விவசாயம் செத்துப் போயிருக்கும் நேரத்தில் மகளது கிரிக்கெட் ஆர்வம் உச்சக்கட்டத்துக்குப் போனாலும், அதனை செய்யத் துடிக்கும் சத்யராஜின் செயல்கள்.. அங்கே மைதானத்தில் கிரிக்கெட் விளையாட இறங்கும் தருணம்.. இங்கே ஊரில் வீட்டை ஜப்தி செய்து கொண்டிருப்பது.. கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ‘மேன் ஆஃப் தி சீரியஸ்’ அவார்டை பெற்றுக் கொள்ளும்போது அதைக் கொடுக்கும் வங்கிதான் இப்போது தனது வீட்டை ஜப்தி செய்து கொண்டிருப்பதாக அவர் சொல்வது மனதை தொடுவதுபோல இருந்தாலும் இது கச்சிதமான திரைக்கதையாகும்.

இப்படி பலராலும் முடிவுவரையிலும் சொல்ல முடிந்த கதையை, கடைசிவரையிலும் சுவாரஸ்யமாகப் பார்க்க வைத்திருக்கும் திறமைக்காக இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு நமது பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்..!

கனா – அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!    
error: Content is protected !!