சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பாம்..!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பாம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் திரைப்படம் ‘கனா’.

இத்திரைப்படத்தை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது.

இசை – திபு நிணன் தாமஸ், ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், படத் தொகுப்பு – ரூபன்.

‘கனா’ படத்தின் டப்பிங் பணிகள்கூட முடிவடைந்து தற்போது படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் இருக்கிறது.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகிக்கும் உரிமையை ஆரூத்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அரவிந்த் வாங்கியிருக்கிறார்.

‘கனா’ படம் பற்றி விநியோகஸ்தர் அரவிந்த் பேசுகையில், “நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால பயணத்தில் இருந்து இப்போதைய வெற்றிகரமான பயணம்வரை நான் அவருடன் இருந்திருக்கிறேன்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘மெரினா’ படத்தில் ஆரம்பித்தது என் சினிமா விநியோக தொழில். அதனைத் தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களை திருப்பூரில் வெளியிட்டேன். அவரது சமீபத்திய திரைப்படமான ‘வேலைக்காரன்’ படத்தை திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவில் நான் வெளியிட்டேன். இந்த திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு நல்ல லாபத்தை  அளித்தன.

சிவகார்த்திகேயன் தற்போது  மிகப் பெரிய நட்சத்திரமாக மாறி, சாதிக்க துடிக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இது அவரது வெற்றியை மட்டும் வைத்து சொல்லவில்லை, அவரது கடின உழைப்பு மற்றும் நல்ல குணத்தையும் வைத்தே சொல்கிறேன்.

ஒரு நடிகரின் வெற்றி விகிதம் அவரின் கதை தேர்வை பொறுத்தே அமைகிறது. தற்போதைய தலைமுறை நட்சத்திரங்களில், பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ரசனைகளுக்கு ஏற்ப சரியான படங்களை கணித்து, கதை தேர்வு செய்யும் திறமை சிவகார்த்திகேயனுக்கு உள்ளது.

எனவே, அவர் தனது முதல் தயாரிப்பாக ‘கனா’ படத்தை தேர்த்தெடுத்ததில் வியப்பேதுமில்லை. இந்த படத்தில் தனித்துவமான மற்றும் சிறப்பான ஏதாவது ஒன்று இருக்கும். அதுவே அவரை கவர்ந்திருக்கும் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.

‘கனா’ படத்தின் வியாபாரத்திற்கான விசாரிப்புகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்னரே அனைத்து ஏரியா உரிமைகளும் விற்றுத் தீர்ந்து விடும்…” என்கிறார்.
error: Content is protected !!