ஐ.ஐ.டி.யில் நடக்கும் காதல் கதைதான் ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படம்

ஐ.ஐ.டி.யில் நடக்கும் காதல் கதைதான் ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படம்

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்தான் கமலி. அவள் இந்த  இரண்டையும் அடைந்தாளா என்பதை சொல்லும் படம்தான்  'கமலி from நடுக்காவேரி' திரைப்படம்.

இந்தப் படத்தை அபுண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் 'கமலி' என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் - ராஜசேகர் துரைசாமி, இசை – தீனதயாளன், ஒளிப்பதிவு - ஜகதீசன் லோகயன், படத் தொகுப்பு - R.கோவிந்தராஜ், கலை இயக்கம் – தியாகராஜன், பாடல்கள் - யுகபாரதி, மதன் கார்க்கி, நடன இயக்கம் - பப்பி, சதீஷ் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – ஜான்சன், நிர்வாக தயாரிப்பு - A.ஜெய் சம்பத், தயாரிப்பு அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்.

ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஹைடெக் காதல் கதைதான் இத்திரைப்படம். புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநரான ராஜசேகர்.

ஆனந்தியின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும், பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும், படம் பற்றிக் கேள்விப்பட்டு இந்தப் படத்தின் உலக உரிமையை 'மாஸ்டர் பீஸ்' என்கிற நிறுவனம் உடனேயே வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 17-ம் தேதியன்று 'மாஸ்டர் பீஸ்' நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.